ஞாயிறு, 25 அக்டோபர், 2020

பழனியாத்திரையும், பாஜக யாத்திரையும் ஒன்றாகுமா?

  சாவித்திரி கண்ணன் : இன்னும் என்னென்ன மலிவான கேலிக்கூத்துகளை அரங்கேற்றப் போகிறீர்களோ…! கடவுள், பக்தி, ஆன்மீகம்…ஆகியவை குறித்து பாஜகவினருக்கு எந்த அடிப்படை புரிதலுமே இல்லை என்பது அவ்வப்போது தெளிவாக நிரூபணமாகிக் கொண்டுள்ளது!மத நோக்கத்திற்கு அப்பால் மக்கள் நலன் என்பதே பாஜகவினர் சிந்தனையில் வராதா? வெற்றிவேல் யாத்திரையாம்! நவம்பர் 6 தொடங்கி டிசம்பர் ஆறு வரை முருகனின் அறுபடைவீடுகளையும் நோக்கிப் போகிறார்களாம்..? எதற்காக? முருகன் மீதான பக்தியா? ’’இல்லை’’ என்பதை அவர்களே, ’’தமிழகத்தில் தாமரை மலர்ந்திட வெற்றிவேல் யாத்திரை என்று சொல்லிவிட்டார்கள்! ஆக, அரசியல் வெற்றிக்கு பக்தியையும்,மதத்தையும் கையில் எடுக்கிறார்கள்! 

முருக பக்தர்கள் பார்க்காத யாத்திரையா? பழனியாத்திரை பற்றித் தெரியுமா இவர்களுக்கு? பல நாள் தங்களை வருத்தி உடலில் சட்டை கூட அணியாமல் காவடி தூக்கி கால் நடையாகவே முருகன் பாடல்களை பாடிக் கொண்டே நாள் கணக்கில் நடந்து சென்று முருகனை தரிசிப்பார்கள்! தைப்பூசம்,பங்குனி உத்திரம் ஆகிய காலங்களில் இவை நடக்கின்றன! இரவில் கிடைக்கும் இடத்தில் துண்டை விரித்து போட்டு,கைகளையே தலையணையாக்கித் தூங்குவார்கள்! நடந்து, சிகரெட்,பீடி,புகையிலை எல்லாம் தவிர்த்து,கெட்ட வார்த்தைகளையும் தவிர்த்து நடப்பதே பழனியாத்திரை! 

இது நாள் வரை, ’ரஜினிகாந்த் தங்களை ரட்சிப்பார்’ என காத்திருந்து,அவர் கைவிட்ட நிலையில் முருக பக்தி கைகொடுக்குமா? என்று முயற்சிக்கிறார்கள்!  கருப்பர் கூட்டம் கந்தசஷ்டி கவசத்தை பழித்துப் பேசியபோது, முருகனுக்கு ஆதரவாக எழுந்த ஒரு பேரலையை அப்படியே அணையவிடாமல் காத்து, பாஜகவிற்கான வாக்கு வங்கியாக்கிவிட வேண்டும் என்பது தான் நோக்கம்! கொரானா இல்லாவிட்டால் இந்த யாத்திரை அப்போதே திட்டமிடப்பட்டு இருக்கும்!

தமிழகத்தில் முருகக் கடவுளுக்கு மிகப்பெரும் செல்வாக்கு இருக்கிறது என்பது மறுக்க எவராலும் முடியாத உண்மை! ஆனால்,இந்த அரசியல் ஆதாய யாத்திரை முருகனின் மலையளவு செல்வாக்கில்  இவர்களுக்கு மயிரளவைக் கூட பெற்றுத் தராது என்பதை நான் உறுதிபடச் சொல்லமுடியும்.

முதலாவது இவர்களுக்கும், முருகனுக்கும் சம்பந்தமேயில்லை! முருகன் ஒரு மக்கள் கடவுள்! அவனுக்கான  வைபவங்களை எந்தெந்த காலகட்டத்தில் எப்படி நடத்த வேண்டும் என்பது தமிழ்மக்களுக்கு அத்துப்படியான விஷயமாகும்!

திருவிழாக்கள் என்பவை சூரிய,சந்திரனின் நகர்வை பொறுத்து, நம் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்டவை! குறிப்பாக இயற்கையை அனுசரித்தும், இயந்திர கதியில் இயங்குகின்ற வாழ்வில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தவும் உருவாக்கப்பட்டவையாகும்! அவற்றை கண்டகண்ட நேரத்திலெல்லாம் நடத்தமாட்டார்கள்!

பங்குனி மாதம் பங்குனி உத்திரம் என்ற பெயரில் மார்ச் 14 தொடங்கி ஏப்ரல்-6 வரை முருகனின் அறுபடை வீடுகளிலும், மற்றுமுள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் பத்து நாட்கள் கொண்டாடப்படும் விழாவாகும்! ’’கோயிலின் வாசலில் கூடிய கூட்டங்கள் தலையா? கடல் அலையா?’’ என்ற திரைப் பாடலை நிருபிக்கும் விதமாக அறுபடை வீடுகள் அனைத்துமே அமர்க்களப்படும்! தீர்த்தக்காவடி,பால்காவடி,பன்னீர் காவடி,அலகு குத்தி வேண்டுதல் என்றும்,தேரோட்டமென்றும் பக்தர்கள் பரவசத்தில் திளைப்பார்கள்!

இதே போல வைகாசி முருகனின் அவதார நாளானது அறுபடை  வீடுகளிலும், அனைத்து முருகன் கோயில்களிலும் ஜூன் -4  தொடங்கி பத்து நாட்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படும்! குழந்தை பாக்கியம் வேண்டுவோர் தவறாமல் பங்குபெறும் விழா இதுவாகும்! முதல் நாள் தடங்கி பத்தாவது நாள் வரை மக்கள் பக்தி பரவசத்தில் திளைப்பார்கள்! இவையெல்லாமே மக்களை ஒன்று சேர்க்க, இணைந்து செயல்பட உருவாக்கப்பட்டவை! எந்த பக்தி  விழாவும் நம் பாரம்பரியத்தில் பகை வளர்க்க உருவாக்கப்பட்டவையல்ல! ஆண்டவனைக் கும்பிட மனதில் ஒரு தூய்மை வேண்டும். அன்பு மனதில் ஊற்றெடுத்து பெருக வேண்டும்.

அரசியல் நோக்கத்துடனும் ,மாற்று மதங்களின் மீது வெறுப்பை வளர்க்கவுமான வெற்றிவேல் யாத்திரைக்கும், முருக பக்தர்களுக்கும் யாதொரு தொடர்புமில்லை!

திருவிழாக்கள் இறைவழிபாட்டோடு இணைந்தது! அதில் நிகழ்த்தப்படும் கலை நிகழ்ச்சிகள் பற்பல கலைஞர்களுக்கு பெரும் வாழ்வாதாரமாக அமைந்துள்ளன! கலையும் வளர்கிறது! அதே போல அங்கு தீடிரென முளைக்கும் சிறுகடைகளால் ஏராளமான சிறுவியாபாரிகள் பலனடைகிறார்கள்! புதுத் துணி வாங்கி அணிவதால் ஜவுளி வியாபாரிகள் நெசவாளர்கள் பலடைகிறார்கள்! சுவாமிக்கு விதவிதமான மலர் அலங்காரங்கள் செய்வது, மாலை சாற்றுவது, பெண்கள் தாங்களும் பூச்சூடி வலம்வருவது ஆகியவற்றால் பூ விவசாயிகளும், வியாபாரிகளும் ஒரு சேர பலனடைகிறார்கள்! இதனால்,ஒரு பெரும் பொருளாதார சுழற்சியும் நடக்கிறது! .ஆக, எவ்வளவு  ஆக்கப்பூர்வமான சமூக விளைவுகள் கொண்டவை நமது திருவிழாக்கள்! ஆனால்,இவர்கள் நடத்தும் யாத்திரை என்பது விரதம் இருந்து நடக்கும் யாத்திரையல்ல!

பாஜக நடத்தப் போகும் ’வெற்றிவேல் யாத்திரை’ குறித்து கிருபானந்த வாரியாரின் பிரதான சீடரும்,சுமார் 1,400 கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்தியவருமான ஆன்மீக சொற்பொழிவாளர் சத்தியவேல் முருகனார் அவர்களிடம் கேட்டேன் ‘’ ஐயா நான் ஆன்மீகவாதி! எதையும் நல்ல கண்ணோட்டத்தில் தான் பார்ப்பேன். இது நாள் வரை ராமனை வணங்கிய வர்களுக்கு  தற்போதாவது முருகனை கும்பிட வேண்டும் என்ற புத்தி வந்ததே மகிழ்ச்சி தான்! ஆனால், யாத்திரை என்பதெல்லாம் நம் சான்றோர்களின் சிந்தனையில் உதித்தவை! அவற்றை கடுமையான விரதம் கடைப்பிடித்து கால் நடையாக சென்று இறை சிந்தனையுடன் செய்தால் தான் பலன் கிடைக்கும். நோக்கம் உயர்வானதாக இருந்தால் தான் அதில் ஆக்கம் பிறக்கும். மருத்துவரின் கையில் இருக்கும் கத்திக்கும்,ரவுடி கைகளில் இருக்கும் கத்திக்கும் என்ன வித்தியாசம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்! ஆக, இப்படிப்பட்டவர்கள் ஆன்மீகம், பக்தி ஆகியவற்றின் பெயரால் செய்வதை நாம் பொருட்படுத்தக் கூடாது. அவர்களை ’இக்னோர்’ செய்வது தான் சிறந்த வழி! அவர்களை பழிக்க கூடாது! அது வெறுப்பு அரசியலை விசிறி வளர்ப்பதற்கே துணைபோகும்! நாம் எப்போதும் அன்பை விதைக்கும் ஆன்மீகத்தின் பக்கம் நிற்போம்’’ என்றார்.

கருத்துகள் இல்லை: