வியாழன், 4 ஜூன், 2020

அமெரிக்க பிளாய்டுக்கு நினைவஞ்சலி: ஆயிரக்கணக்கானோர் பேரணி


latest tamil news
latest tamil newsதினமலர் : ஹூஸ்டன்: அமெரிக்க போலீசால் கொல்லப்பட்ட, ஆப்ரிக்க அமெரிக்கரான, ஜார்ஜ் பிளாய்டுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அவருடைய சொந்த ஊரான, ஹூஸ்டனில், பிரமாண்ட பேரணி நடந்தது. இதில், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அமெரிக்காவின் மினியாபொலிசில், போலீஸ்காரர் ஒருவர், கால் முட்டியால் கழுத்தில் நெருக்கியதில், ஆப்ரிக்க அமெரிக்கரான, ஜார்ஜ் பிளாய்டு, 46, சமீபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, கடந்த, ஒரு வாரத்துக்கு மேலாக, அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.இந்நிலையில், பிளாய்டின் சொந்த ஊரான ஹூஸ்டனில், நேற்று அவருக்கு நினைவஞ்சலி பேரணி நடத்தப்பட்டது. இதற்கு, பிரபல ராப் பாடகர்கள், ட்ரே தா டுரூத், பன் பி ஏற்பாடு செய்திருந்தனர்.


இந்த அமைதிப் பேரணியில், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மக்கள் வந்திருந்தனர். பல கட்சித் தலைவர்கள், எம்.பி.,க்கள் என பல தரப்பு மக்கள் கலந்து கொண்டனர். ஹூஸ்டன் மேயர் சில்வஸ்டர் டர்னரும், பேரணியில் பங்கேற்றார்.பிளாய்டு குறித்தும், கறுப்பின மக்களுக்கு சுதந்திரம் கேட்டும் பேரணியில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த பேரணிக்காக, ஹூஸ்டனில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நகரின் பல இடங்களில் இருந்த கற்கள் உள்ளிட்டவற்றை, நகர நிர்வாகம் அகற்றியது.இதற்கிடையே, நாட்டின் பல இடங்களில் நடந்த போராட்டங்களின் போது, போராட்டக்காரர்கள் போலீஸ் வாகனங்களை சேதப்படுத்தினர். இதுவரை நடந்துள்ள வன்முறைகளில், ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். வன்முறையில் ஈடுபட்டதாக, 6,000த்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். லாஸ் ஏஞ்சலஸ் நகரில் மட்டும், 2,700 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பல மாகாணங்களில், கடந்த சில நாட்களாக இருந்ததைவிட, போராட்டம் சற்று தணிந்துள்ளது. 'போராட்டத்தை கட்டுப்படுத்த ராணுவத்தை அனுப்புவேன்' என, அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்திருந்தார். இந்நிலையில், ராணுவத்தை அனுப்பும் முடிவை, அதிபர் மாளிகை நிறுத்தி வைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன

கருத்துகள் இல்லை: