ஞாயிறு, 31 மே, 2020

பிஎம் கேர் கணக்குகளை வெளியிட முடியாது: பிரதமர் அலுவலகம்!

மின்னம்பலம் : பிஎம் கேர் என்ற பெயரில் பிரதமர் மோடியால், கொரோனா
நிதிக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு பொது அமைப்பு அல்ல என்றும், அதன் கணக்கு வழக்குகளை வெளிப்படையாக தெரிவிக்க முடியாது என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
The Prime Minister's Citizen Assistance and Relief in Emergency Situations Fund என்ற நிதியமைப்பு கடந்த மார்ச் 28ஆம் தேதி தொடங்கப்பட்டது. ஏற்கனவே பிரதமர் நிவாரண நிதி என்ற பொது அமைப்பு இருக்கையில் இது எதற்கு என்ற கேள்விகள் எழுந்தன. ஆனாலும் பிஎம் கேர்ஸ் அமைப்புக்கு நிதிகள் குவிந்தன.
இந்த நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், பிஎம் கேர் அமைப்புக்கு வந்துள்ள நிதி பற்றிய கேள்விகளுக்குப் பதிலளிக்க பிரதமர் மோடி அலுவலகம் மறுத்துள்ளது.

“நம்மிடம் பிரதமரின் தேசிய நிவாரண நிதியம் (பி.எம்.என்.ஆர்.எஃப்) இருக்கும்போது, ​​மற்றொரு நிதியத்தைக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. எனவே இந்த புதிய அறக்கட்டளையின் அமைப்பு மற்றும் குறிக்கோள்கள் குறித்து அறிந்துகொள்ள நான் ஆர்வமாக இருந்தேன். எனவே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இதுபற்றிய விவரங்களைக் கேட்டு விண்ணப்பித்தேன்” என்கிறார் பெங்களூரு அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் சட்ட மாணவராக இருக்கும் கந்துகுரி. தகவல் கேட்டு 30 நாட்களுக்குள் அவருக்கு எந்தப் பதிலும் கிடைக்காதபோது, ​​அவர் மீண்டும் முறையிட்ட நிலையில், அவருக்கு மே 29ஆம் தேதி பிரதமர் மோடி அலுவலக அதிகாரியிடம் இருந்து தகவல் கிடைத்தது.
அதில், “தகவல் அறியும் உரிமைச் சட்டம், (2005) பிரிவு 2 ஹெச்சின்படி பிஎம் கேர் நிதியம் என்பது ஒரு பொது அமைப்பு அல்ல. இருப்பினும், தொடர்புடைய தகவல்களைப் பொறுத்தவரை, pmcares.gov.in என்ற இணையதளத்தில் காணப்படலாம்" என்று கூறப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து கந்துகுரி மேல் முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளார். “பிரதமரின் பெயரால் உருவாக்கப்பட்டுள்ளது. மக்களுக்கானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரும், அமைச்சர்களும் இந்த அறக்கட்டளையில் இடம்பெற்றுள்ளார்கள். இது எல்லாமே இது பொது அமைப்பு என்பதை நிரூபிக்கின்றன. ஆனால் எப்படி பொது அமைப்பு அல்ல என்று கூற முடியும்? இதுகுறித்து நான் மேல் முறையீடு செய்வேன்” என்கிறார் அந்த சட்ட மாணவர்.
ஏற்கனவே வழக்கறிஞர் அபய் குப்தா என்பவர் எழுப்பிய கேள்விக்கும் இதே பதிலையே பிரதமர் மோடி அலுவலகம் அளித்தது என்பது குறிப்பிடத் தக்கது. இதன் மூலம் பிஎம் கேர் சர்ச்சைகள் அடுத்த கட்டத்தை அடைந்துள்ளன.
-வேந்தன்

கருத்துகள் இல்லை: