வியாழன், 4 ஜூன், 2020

சென்னை தடை செய்யப்பட்ட மண்டலமாகுமா?

தடை செய்யப்பட்ட மண்டலமாகுமா சென்னை? மின்னம்பலம் :  சென்னையில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென விசிக வலியுறுத்தியுள்ளது.
ஊரடங்கு காரணமாக அரசியல் கட்சிகள் நிகழ்வுகள் அனைத்து ரத்து செய்யப்பட்டுள்ளன. எனினும், வீடியோ கான்பரன்சிங் வழியாக கட்சிகள் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் விசிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் இன்று (ஜூன் 4) வீடியோ கான்பரன்சிங் முறையில் நடைபெற்றது.
கொரோனா பாதிப்புகள், அதுதொடர்பாக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள், ஊரடங்கு ஏற்படுத்திய பாதிப்பால் ஏழை மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்கள் குறித்து அதில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பிற மாநிலங்களில் வேலைக்குப்போய் அல்லல்பட்டுத் திரும்பியிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் உடனடியாக ரூபாய் 10,000 அளிக்க தமிழக அரசை வலியுறுத்தியும், புலம்பெயர் தொழிலாளர் பிரச்சனைக்கு நிரந்தரமாகத் தீர்வு காண தேசிய அளவில் அவர்களுக்கென ஒரு கொள்கை உருவாக்கப்பட வேண்டும்; அவர்களுக்குப் பாதுகாப்பான சட்டம் ஒன்றை உடனடியாக இயற்ற வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ள குடும்பத்தினருக்கு ரூபாய் பத்தாயிரம் வங்கிக் கணக்கில் அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், 'காட்மேன் வெப்சீரிஸ் தயாரிப்பாளர், இயக்குனர் உள்ளிட்டவர்களுக்குக் காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, “தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று சமூகப் பரவல் கட்டத்தை அடைந்து விட்ட நிலையில் சென்னையில் மட்டும் ஒவ்வொரு நாளும் ஆயிரத்துக்கும் அதிகமான நோயாளிகள் கண்டறியப்படுகின்றனர். சென்னையில் நோய்த்தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கு சிறப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். சென்னையை முழுமையாகத் தடைசெய்யப்பட்ட மண்டலமாக அறிவித்து நூறு விழுக்காடு அனைவரையும் மருத்துவ பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றியதோடு,
தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு ஆகும் தொகை முழுவதையும் அரசே ஏற்க வேண்டும்; அல்லது கொரோனா பேரிடர் காலம் முடியும் வரை இடைக்காலமாகத் தனியார் மருத்துவமனைகளைத் தமிழக அரசு கையகப்படுத்தி நிர்வகிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
எழில்

கருத்துகள் இல்லை: