சனி, 30 மே, 2020

சவூதி சிறையிலேயே உயிரிழந்த மனித உரிமை போராளி பேராசிரியர் அப்துல்லா

Fazil Freeman Ali : பாசிச‌த்திற்கு_ம‌த‌மில்லை ! அப்துல்லா அல் ஹ‌மித்
க‌விஞ‌ர், க‌ல்லூரி பேராசிரிய‌ர், அர‌சிய‌ல் விம‌ர்ச‌க‌ர், மனித உரிமை போராளி என்று ப‌ன்முக‌ ஆளுமை கொண்ட‌வ‌ர் இந்த‌ மாம‌னித‌ர்.
2018-ல் ஸ்வீட‌ன் அர‌சு, ச‌வூதில் சிறையில் இருந்த‌ இவ‌ருக்கு Right Livelihood Award அளித்து சிற‌ப்பித்த‌ போதுதான் நான் முத‌ல் முறையாக‌ இவ‌ரைப்ப‌ற்றி கேள்விப்ப‌ட்டேன்.
அர‌சிய‌ல் சீர்திருத்த‌ம் ம‌ற்றும் ம‌னித‌ உரிமை பாதுகாப்புக்காக‌ த‌ன் வாழ்நாள் முழுவ‌தும் போராடிய‌வ‌ர் இந்த‌ ச‌வூதி அரேபியாவில் மைந்த‌ர். இவ‌ர் Saudi Civil and Political Rights Association (ACPRA) என்ற‌ அமைப்பின் ஸ்தாப‌க‌ த‌லைவ‌ர்க‌ளுள் ஒருவ‌ரும்கூட‌.
ச‌வூதி அர‌சின் ம‌னித‌ உரிமை மீற‌லை க‌ண்டித்து உல‌க‌ அர‌ங்கில் ப‌ல‌ முறை பேசி, அத‌ற்காக‌ ப‌ல‌ முறை சிறை சென்ற‌வ‌ர் அப்துல்லா.
2013-ல் இவ‌ருக்கு ஐந்தாண்டு சிறை த‌ண்ட‌னையும், ஒரு ப‌ழைய‌ வ‌ழ‌க்கை தூசி த‌ட்டி அத‌ற்கு ஆறு ஆண்டுக‌ளுமாக‌, மொத்த‌ம் 11 ஆண்டுக‌ள் சிறை த‌ண்ட‌னை விதித்த‌து இஸ்லாமிய‌ சவூதி அர‌சு.
இன்நிலையில் 9 ஏப்ர‌ல் 2020-ல் சிறைக்குள் இருக்கையிலேயே அப்துல்லா ஸ்ட்ரோக் நோயால் பாதிக்க‌ப்ப‌ட்டார். இவ‌ரின் ம‌ருத்துவ‌த்திற்காவ‌து இவ‌ரை விடுத‌லை செய்ய‌வேண்டும் என்று Amnesty International அமைப்பு போராடிய‌தோடு ச‌வூதி ம‌ன்ன‌ருக்கும் க‌டித‌ம் எழுதி வேண்டிய‌து. முற்றாக‌ ம‌றுத்த‌து வ‌காபிய‌ ச‌வூதி அர‌சு.

சென்ற‌வ‌ருட‌ம் ஏற்ப‌ட்ட‌ ஸ்ட்ரோக் அட்டாக்கால் பெரும் அவ‌தியுற்று, தொட‌ர் ம‌ருத்துவ‌ உத‌வியாலும், சுற்றி இருப்ப‌வ‌ர்க‌ளின் அக்க‌றை ம‌ற்றும் நேச‌த்தாலும் இப்போதுதான் மெல்ல‌ மீண்டுவ‌ரும் எனக்கு இத‌ன் வ‌லியும் வேத‌னையும் ந‌ன்றாக‌ தெரியும்.
தொட‌ர் ம‌ருத்துவ‌ புற‌க்க‌ளிப்பால் 24 ஏப்ர‌ல் 2020-ல் சிறையிலேயே கால‌மானார் 69 வ‌யதான‌ இந்த‌ ந‌ம் சம‌கால‌ போராளி.
ச‌ரி... இப்ப‌டி சிறைப்ப‌டுத்தி, துன்புறுத்தி, ம‌ருத்துவ‌ம் ம‌றுக்கப்ப‌ட்டு கொல்ல‌ப்ப‌டும் அள‌வுக்கு அப்ப‌டி என்ன‌ த‌வ‌று செய்துவிட்டார் அப்துல்லா..?
கொலை செய்தாரா, கொள்ளை அடித்தாரா, பெண்க‌ளை அடிமைப்ப‌டுத்தினாரா..?
இதெல்லாம் செய்தால்கூட‌ ப‌ர‌வாயில்லையே. இதைவிட‌வும் மிக‌ப்பெரிய‌ த‌வ‌றொன்றை செய்தார்...
"முக‌ம்ம‌து ந‌பி ந‌ம‌க்கு க‌ற்பித்த‌ இஸ்லாத்தில் ம‌ன்ன‌ராட்சி கிடையாதே..? முக‌ம்ம‌தும் இள‌வ‌ர‌ச‌ர் அல்ல‌ அவ‌ரின் ச‌ந்த‌திக‌ளும் அவ‌ருக்குப்பின் க‌லீபாக்க‌ள் ஆகிவிட‌வில்லை. ம‌ட்டும‌ல்ல‌, இற‌ந்துவிட்ட‌ ச‌த்திய‌ சீல‌ர்க‌ளான‌ முத‌ல் நான்கு க‌லீபாக்க‌ளின் வாரிசுக‌ள் யாரும் அவ‌ர்க‌ளுக்குப்பின் அரியாச‌ன‌ம் ஏற‌வில்லையே..? அப்ப‌டியிருக்க‌, இஸ்லாமிய‌ அர‌சென்றும் புனித‌ இல்லங்க‌ளை பாதுகாக்கும் அர‌சென்றும் கூறிக்கொள்ளும் ச‌வூதியில் ஏன் முடியாட்சி..? எல்லா விச‌ய‌ங்க‌ளிலும் 'ந‌பிக‌ளின் வ‌ழியில்' என்று சொல்லும் நாம், ஆட்சியிலும் ஆட்சிமாற்ற‌த்திலும் அதே வ‌ழியை பின்ப‌ற்ற‌ வேண்டாமா..?" என்றார்.
இத‌ற்காக‌த்தான் வ‌காபிய‌ விஷ‌த்தின் ஊற்றுக் க‌ண்ணான‌ ச‌வூதி அர‌சு இவ‌ரை சிறையிட்டு இவ‌ரின் வாய்க்கு பூட்டிட்ட‌து. இத்த‌னைக்கும் இவ‌ர் ம‌க்க‌ளாட்சிகூட‌ கேட்க‌வில்லை, constitutional monarchy என்ற‌ "அரசியலமைப்பு முடியாட்சி"தான் கேட்டார்.
ந‌ல்ல‌வேளை நாமெல்லாம் ச‌வூதியில் பிற‌க்க‌வோ வாழவோ இல்லை. இல்லேன்னா... இன்நேர‌ம் பொத‌ச்ச‌ இட‌த்துல‌ புல்லு மொழ‌ச்சிருக்கும்.
இப்போதைய‌ இந்திய‌ அர‌சு பாசிச‌த்தில் ப‌ள்ளி மாண‌வ‌னென்றால் அந்த‌ ப‌ள்ளிக்கே த‌லைமை ஆசிரிய‌ர் ச‌வூதி அரேபியா. ம‌னித‌ உரிமை மீற‌லின் "அழ‌கிய‌ முன்மாதிரி" இந்த‌ விஷ‌ நாக‌ம்.
தோழ‌மையுட‌ன்,
Fazil Freeman Ali

கருத்துகள் இல்லை: