சனி, 30 மே, 2020

தூத்துக்குடி மாணவர் படுகொலை: பதட்டம் - 1000 போலீசார் குவிப்பு

தூத்துக்குடி அருகே கல்லூரி மாணவர் படுகொலை: பதட்டம் - 1000 போலீசார் குவிப்புமாலைமலர் : தூத்துக்குடி அருகே கல்லூரி மாணவர் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டதையடுத்து அப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவி வருவதால் 1000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சத்தியமூர்த்தி. ஆறுமுகநேரி: தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே உள்ள தலைவன்வடலி கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவன். இவரது மகன் சத்தியமூர்த்தி (வயது 20). இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை வெளியே சென்ற சத்தியமூர்த்தி இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் அவரை தேடி சென்றனர். அப்போது ஊருக்குக்கு அடுத்துள்ள உப்பாற்று ஓடை பகுதியில் ஒரு கோவில் அருகே முட்புதரில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சத்தியமூர்த்தி பிணமாக கிடந்தார். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சத்தியமூர்த்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயன்றனர்.


ஆனால் கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும், துண்டிக்கப்பட்ட சத்தியமூர்த்தி தலையை தேடி மீட்க வேண்டும் என கூறி அவரது குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் அங்குள்ள சாலையில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். எனினும் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

இதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பால கோபாலன் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து நள்ளிரவில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

பின்னர் சத்திய மூர்த்தி உடலை பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து போலீசார் உப்பாற்று ஓடை, சுற்றுப்பகுதியில் உள்ள கிணறுகளில் மாணவர் தலையை தேடும் பணியில் இன்று 2-வது நாளாக ஈடுபட்டனர்.

மாணவர் கொல்லப்பட்ட கிடந்த இடத்தில் இருந்து 400 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு முட்புதரில் சத்தியமூர்த்தி தலை கிடந்தது. அதனை மீட்ட போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தலைவன்வடலியை சேர்ந்த சிலருக்கும், அருகே உள்ள கீழகீரனூரை சேர்ந்த சிலருக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவர்களுக்குள் மீண்டும் தகராறு நடந்துள்ளது. எனவே இதன் காரணமாக சத்தியமூர்த்தி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சினையா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் அப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவி வருகிறது. இதற்கிடையே கீழகீரனூரை சேர்ந்த சில வீடுகளை ஒரு கும்பல் சூறையாடியது.

அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க கூடுதல் எஸ்.பி. குமார், 9 டி.எஸ்.பி.கள் உள்பட தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 1000 போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: