திங்கள், 25 மே, 2020

“வடமாநிலங்கள் நிலை என்ன?” - ஜெ.ஜெயரஞ்சன்


மின்னம்பலம் : வடமாநிலங்களின் நிலை குறித்து தெளிவாக எடுத்துவைக்கிறார் ஜெயரஞ்சன்.
ஊரடங்கால் சாமானிய மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து பொருளாதார அறிஞரும், சென்னை மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குநருமான ஜெ.ஜெயரஞ்சன் நமது மின்னம்பலம் யூ ட்யூப் சேனல் வழியாக நேரடியாக உரையாற்றி வருகிறார். உத்தர பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்கள் ஏன் இன்னும் வளர்ச்சியடையவில்லை என்று நேற்று எடுத்துக் கூறியவர், சமூக மாற்றத்தால் தமிழகம் பெற்ற வளர்ச்சியையும் எடுத்துவைத்தார்.
அதன் தொடர்ச்சியாக இன்று (மே 25) பேசிய ஜெயரஞ்சன், "1990க்குப் பிறகு தென் மாநிலங்களில் வறுமை குறைந்த அளவுக்கு வட மாநிலங்களில் வறுமை குறையவில்லை. எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பதைப் பொறுத்து வறுமையின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது. வறுமையிலும் பின் தங்கிய கடைசி நிலையில் இருக்கும் மாவட்டங்கள் பீகார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில்தான் உள்ளன. இவை bimur மாநிலங்கள் என அழைக்கப்படுகின்றன. கடைசி 100 வறுமை மாவட்டங்களை எடுத்துக்கொண்டால் 91 மாவட்டங்கள் இந்த மாநிலங்களில்தான் உள்ளன” என்று தெரிவித்தார்.

மக்கள் தொகை இந்த மாநிலங்களில் கட்டுக்கடங்காமல் அளவுக்கு அதிகமாக வளர்வதால் இந்தியாவின் மொத்த அம்சத்தையே இது மாற்றிக்கொண்டிருக்கிறது என ஆய்வாளர்கள் கூறுவதாக குறிப்பிடும் ஜெயரஞ்சன், “பன்முக வறுமை கணக்கெடுப்பின்படி (multidimensional poverty index), பிமாரு மாநிலங்களில் வசிக்கும் மக்களில் 50 சதவிகிதம் பேர் வறுமையில் சிக்கித் தவிக்கிறார்கள். இதே அளவுகோளின்படி எடுத்த கணக்கெடுப்பில் கேரளாவில் 1 சதவிகிதம் பேர் மட்டுமே வறுமையில் உள்ளனர். பெரிய மாநிலமான தமிழகத்தில் 4 சதவிகித மக்கள்தான் வறுமையில் உள்ளனர்” என்று கூறுகிறார்.
“வடமாநிலத்திலுள்ள தனிநபர் வருமானத்தை விட மூன்று பங்கு அதிகமாக தென் மாநிலங்களில் தனிநபர் வருமானம் உள்ளது. மக்கள் தொகையும், வளர்ச்சியும் இதே வேகத்தில் வளந்தால் இன்னும் 10 வருடங்கள் கழித்து தென் மாநிலங்களின் தனிநபர் வருமானம் இன்னும் அதிகமாகவே இருக்கும்” என்று கூறும் ஜெயரஞ்சன், தமிழகத்தில் உயர்கல்வி நிலையங்களில் படிக்கும் மாணவர்களின் விழுக்காடு 49 சதவிகிதமாக இருக்கிறது. ஆனால், குஜராத் போன்ற மாநிலங்களில் அது 20 சதவிகிதமாகவே இருக்கிறது. இந்த அளவுக்கு தென்மாநிலங்கள் வளர்ச்சியை அனுபவிக்க தனி நபர்களின் முயற்சி மட்டுமல்லாமல், சமுதாய மாற்றங்களும்தான் காரணம் என்றும் குறிப்பிடுகிறார்.

கருத்துகள் இல்லை: