ஞாயிறு, 24 மே, 2020

ஏழு மாநிலங்களில் தனிக்கவனம்: ஆசிரியர் கி.வீரமணி

ஏழு மாநிலங்களில் தனிக்கவனம்: கி.வீரமணிமின்னம்பலம் : மாநிலங்களுக்கு நிதி வழங்க வேண்டுமென தி.க தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசின் சுகாதாரத் துறை இன்று ஒரு முக்கிய அறிவிப்பை கொரோனா தொற்று பற்றி வெளியிட்டுள்ளது. இந்திய மக்களில் சுமார் 70 விழுக்காடு கரோனா பாதிக்கப்பட்ட மக்கள் எண்ணிக்கை - 11 முக்கியப் பெருநகரங்களிலிருந்து, 7 முக்கிய மாநிலங்களில் பரவக்கூடிய அபாயம் உள்ளது.
மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட 7 மாநிலங்களில் அடுத்த இரண்டு மாதங்களில் கொரோனா அதிகம் இருக்கக்கூடும் என்பதால், அதிகமான பரிசோதனையும், நோய்க்கான சிகிச்சைக் கருவிகளையும், தீவிர சிகிச்சைப் பிரிவுகளை (ஐசியூ) எப்போதும் தயார் நிலையிலும் வைத்திருக்க வேண்டுமென்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று (மே 24) வெளியிட்ட அறிக்கையில், “மாநிலங்களுக்கு சுகாதாரத் துறை அடிக்கட்டுமான (Health Infrastructure) வசதிகளைப் பெருக்குவதற்குரிய கூடுதல் நிதியையோ அல்லது மருத்துவ உபகரணங்களையோ, மத்திய பேரிடர் நிதியிலிருந்தோ அல்லது PM Cares Fund என்ற புதிதாகத் தொடங்கப்பட்ட நிதியிலிருந்தோ மாநிலங்களுக்கு அளிக்கவேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
ஊரடங்கு காரணமாக வேலை வாய்ப்பிழந்து, வறுமையில் அன்றாட வாழ்வாதாரத்திற்கே அல்லலுறும் 13 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு ரொக்கப் பணம் தரும் திட்டம்போல ஏதாவது செய்தால்தான் சரி என்பதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், மற்ற தடுப்பு நடவடிக்கைகளால் சரியும் மாநில அரசுகளுக்கு நிதி ஆதாரத்தினை தாராளமாக வழங்கிட மத்திய அரசு முன்வரவேண்டும் எனறு தெரிவித்துள்ள கி.வீரமணி,
“முதலாவது, மாநிலங்களுக்கு அளிக்கவேண்டிய பாக்கி - நிலுவைத் தொகைகள் அளித்தாலே பெரிய உதவியாக அது அமையும். அதைப் பெறுவது அவர்களது உரிமை - அது வெறும் சலுகையோ, நன்கொடையோ அல்ல. நிபந்தனைகளோடு இணைத்து இந்த நிதி உதவிகளைச் செய்வோம் என்று மத்திய அரசு கூறுவதை, பல மாநில முதல்வர்கள் எதிர்த்து வருவதை மத்திய அரசு சுவர் எழுத்தாகக் கருதி, உடனடியாக அந்த நிபந்தனைகளைக் கைவிட்டுவிட்டு, உண்மையான கரோனா தடுப்புக்கு - அதுவும் இரண்டு மாதங்களில் ஆபத்து அதிகமாகும் என்ற அதிர்ச்சியூட்டும் செய்தி வரும் நிலையில், உடனே தாராளமாக தனது கருவூலத்தைத் திறக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட ஏழு மாநிலங்களுக்குத் தனி கவனத்துடன் உதவ வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
எழில்

கருத்துகள் இல்லை: