ஞாயிறு, 24 மே, 2020

144 தடை உத்தரவை மீறி செயற்குழு கூட்டம்.. திமுக நிர்வாகிளை கூட்டத்துக்கு அழைக்கும் வேலு

nakkheeran.in - ராஜ்ப்ரியன் : கரோனா பரவலை முன்னிட்டு நாடு முழுவதும் 144 இந்நிலையில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுக்குறித்து திமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு எம்.எல்.ஏ விடுத்துள்ள அறிவிப்பில், மே 25ந் தேதி காலை 11 மணிக்கு திமுக மாவட்ட அலுவலகத்தில் அவசர செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், மாவட்ட ஊரட்சிக்குழு சேர்மன், ஒன்றிய குழு தலைவர்கள் ஆகியோர் தவறாமல் வந்து கலந்துக்கொள்ள வேண்டும்,

தலைவர் - மா.செகள் இடையே நடைபெற்ற வீடியோ கான்பரஸ் மூலம் நடைபெற்ற கூட்டம் பற்றி விவாதித்தல், ஜீன் 3 கலைஞர் பிறந்தநாள் கொண்டாட்டம், கழக ஆக்கப்பணிகள் குறித்து விவாதிக்க என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நான்காம் கட்ட ஊரடங்கான 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இருந்தும் பொருளாதார நடவடிக்கைக்காக கடைகள், தொழில் நிறுவனங்கள், ஆட்டோக்கள், சலூன்கள் மற்றும் சில அத்தியாவசிய பணிகள், நிறுவனங்களுக்கு இயங்க தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அரசியல் கட்சிகள், மத அமைப்புகள் மற்றும் பிற அமைப்புகள் பொதுக்கூட்டம் மற்றும் அறைக்கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகள் தவிர மற்ற பணிகளுக்கு பொதுமக்கள் உட்பட யாரும் வெளியே வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்துக்கு திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், தண்டராம்பட்டு, செங்கம், புதுப்பாளையம், கலசப்பாக்கம், துரிஞ்சாபுரம் ஒன்றியங்கள், செங்கம், புதுப்பாளையம், கீழ்பென்னாத்தூர், வேட்டவலம் பேரூராட்சிகளில் இருந்து திமுக நிர்வாகிகள் வருவார்கள். இப்படி தெற்கு மாவட்டத்தில் இருந்து மட்டும் சுமார் 100க்கும் அதிகமான நிர்வாகிகள் திமுக அலுவலகத்திற்கு வந்து கூட்டம் நடத்தவுள்ளனர். 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் இந்த கூட்டத்தை எப்படி வேலு நடத்துகிறார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் நிகழ்ச்சிகளை நடத்தகூடாது என்கிறபடியால் தான் திமுக பொதுச்செயலாளர் தேர்வுக்கு மாநிலம் முழுவதிலும்மிருந்து நிர்வாகிகளை அண்ணா அறிவாலயத்துக்கு வரவைக்க முடியாது என்பதால் தான், திமுக தலைவரின் தனிப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில் விதியில் திருத்தம் செய்து காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 25ந் தேதி மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் கூட்டமும் வீடியோ கான்பரஸ் முறையில் நடத்தினார். அப்படியிருக்க எப்போதும் அரசின் விதிகளை கடைப்பிடிக்க நினைக்கும் வேலு, நாடு முழுவதும் 144 தடை உத்தரவில் அமலில் உள்ள நிலையில் அவசர செயற்குழு கூட்டம் எதற்காக நடத்துகிறார், ஏன் அனைவரையும் நேரில் வரவைக்கிறார் என்கிற கேள்வி எழுந்தள்ளது.


கட்சி கூட்டங்கள், கட்சி அலுவலகத்துக்குள் நடத்த அனுமதியுண்டா என அரசு தரப்பில் நாம் விசாரித்தபோது, கட்சி நிகழ்ச்சிகள் உள்ளரங்க கூட்ட நிகழ்வாக இருந்தாலும் அனுமதியில்லை, கூட்டம் நடத்துவது சட்டப்படி தவறு என்கிறார்கள்.
கூட்டம் நடத்த சிறப்பு அனுமதி ஏதாவது மாவட்ட திமுக சார்பில் வாங்கப்பட்டுள்ளதா என திமுக தரப்பில் விசாரித்தபோது, கட்சி அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்துக்கு அனுமதி தேவையில்லை, சமூக இடைவெளியுடன் தான் கூட்டம் நடக்கவுள்ளது என்றார்கள்.

இதுப்பற்றி பிரபலமான வழக்கறிஞர் ஒருவரிடம் கேட்டபோது, 144 சட்டப்படி, 5 பேருக்கு மேல் ஒருயிடத்தில் கூடக்கூடாது. அது உள்அரங்கமாக இருந்தாலும், வெளி நிகழ்ச்சியாக இருந்தாலும் அதுதான் சட்டம். திருமணத்துக்கு 50 பேர், இறப்புக்கு 20 பேர் என அரசு அனுமதி வழங்கியுள்ளது. மற்ற எதற்கும் 5 பேருக்கு மேல் கூட அனுமதியில்லை. அதனால் தான் ரம்ஜான் சிறப்பு தொழுகைக்கு கூட அரசு அனுமதி வழங்கவில்லை. இது கொரோனாவுக்கான மருத்துவ ரீதியிலான 144 தடை என்பதால் அரசு நிர்வாகத்துக்கு தகவல் சொல்லிவிட்டு சமூக இடைவெளியுடன் பொதுமக்களுக்கு உதவிகள் வழங்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படியே உதவிகள் வழங்கப்படுகின்றன. மற்றப்படி 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் இப்படி கட்சி கூட்டம் நடத்துவது சட்டப்படி தவறானது. கூட்டம் நடத்தும் போது, யாராவது புகார் கூறினால் வழக்கு பதிவு செய்யலாம், அதனால் தான் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு பின்னர் அது சர்ச்சையாகி வீடியோ கான்பரன்ஸில் நடைபெற்றது என்றார்.

திமுக நிர்வாகிகள் ஏதாவது சர்ச்சையில் சிக்குவார்களா என மத்தியில் ஆளும் பாஜகவும் – மாநிலத்தை ஆளும் அதிமுகவும் கண்கொத்தி பாம்பாக கண்காணிக்கின்றன. இந்நிலையில் இந்த கூட்டம் சர்ச்சையில் சிக்காமல் இருந்தால் சரி என்கிறார்கள் திமுக அனுதாபிகள்.

கருத்துகள் இல்லை: