ஞாயிறு, 12 ஜனவரி, 2020

மருத்துவப் பணி.. போராடுகிறார்கள். இதயம், ஈரல், சிறுநீரகம் எல்லாம் இலவசமாகவே தமிழக அரசு

Ravishankar Ayyakkannu ; தஞ்சையைச் சேர்ந்த அரசு மருத்துவர் பிரகாஷ் தாங்கள் செய்து ஒரு அறுவை சிகிச்சை பற்றி முகநூலில் எழுதுகிறார்.
அந்தப் பதிவு இது வரை 76 ஆயிரம் like, 55 ஆயிரம் share தாண்டிச் சென்றிருக்கிறது. இரண்டு நாட்களாக தேசிய அளவிலும் அனைத்து WhatsApp குழுக்களிலும் இத்தகவல் சுற்றி வந்திருக்கிறது.
அச்சு, தொலைக்காட்சி ஊடகங்கள் இந்தப் பதிவைச் செய்தி ஆக்கி இருக்கின்றன.
இதில் இருந்து தெரிவது என்னவென்றால்:
* அரசு எப்படி இயங்குகிறது, அரசு ஊழியர்கள் என்ன பணி செய்கிறார்கள் என்று அவர்களே விளக்கிச் சொன்னால் ஒழிய யாருக்கும் தெரிவதில்லை. அவர்கள் தொடர்ந்து விளக்கிச் சொல்ல வேண்டும்.
* குறைந்தது 25 ஆண்டுகளாக தமிழக அரசு மருத்துவமனைகளில் மருந்து, அறுவை சிகிச்சை உட்பட அனைத்தும் இலவசம். ஆனால், ஒரு ரூபாய் செலவு இல்லாமல் அறுவைச் சிகிச்சை என்று இப்போது தான் செய்தி எழுதுகிறார்கள். இதை முன்பே தொடர்ந்து எழுதி இருந்தால் ரமணா, மெர்சல் படங்கள் எடுத்து ஒரு தலைமுறையையே கெடுத்துக் குட்டிச் சுவர் ஆக்காமல் இருந்திருக்கலாம்.
* அரசு மருத்துவமனை என்றால் இரண்டு மாத்திரை கொடுத்து அனுப்பி விடுவார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கு இப்படி எல்லாம் அறுவை சிகிச்சை செய்கிறார்கள் என்பதே "அறிவாளிக் கூட்டத்திற்கு" அதிர்ச்சியாக இருக்கிறது. அதுவும் இல்லாமல், எந்த நோயானாலும் பச்சிலை, கசாயம் குடித்துச் சரி செய்யலாம் என்று ஒரு கூட்டம் சுற்றுகிறது. அவர்களுக்கு இப்படி எல்லாம் நோய் வரும், குடலை அறுத்துத் தைக்க வேண்டும் என்னும் போது தான் உயிரின் மீது பயம் வருகிறது. நவீன அறிவியல் மருத்துவத்தின் மகத்துவம் புரிகிறது. உண்மையில், இதை விட பல சிக்கலான அறுவைச் சிகிச்சைகளைச் செய்து ஒவ்வொரு நாளும் இலட்சக்கணக்கான மக்களை அரசு மருத்துவர்கள் காக்கிறார்கள்.
ஒரு தீ அணைப்பு வீரரும் காவலரும் இராணுவ வீரரும் ஏதேனும் ஆபத்து வந்தால் தான் போராட வேண்டும்.

மருத்துவப் பணியில் உள்ளவர்கள் ஒவ்வொரு நாளும் போராடுகிறார்கள்.
இதயம், ஈரல், சிறுநீரகம் எல்லாம் இலவசமாகவே தமிழக அரசு மருத்துவமனைகளில் மாற்றிப் பொருத்துகிறார்கள்.
உலக அளவில் இப்படிச் செயற்படுகிற நாடுகளை ஒரு கை விரல் விட்டே எண்ணி விடலாம்.
மருத்துவர்களின் பணி அறிவோம். அவர்களை ஆதரிப்போம்.

கருத்துகள் இல்லை: