செவ்வாய், 14 ஜனவரி, 2020

உ.பி. ஆஸ்பத்திரியில் ஆபரே‌ஷன் தியேட்டருக்குள் புகுந்து குழந்தையை கொன்ற நாய்

மாலைமலர் :உத்தரபிரதேச மாநிலத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் ஆபரேஷன் தியேட்டருக்குள் புகுந்த தெரு நாய் பிறந்து சில மணிநேரமே ஆன பச்சிளங்குழந்தையை கடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆக்ரா: உத்தரபிரதேச மாநிலம் பரூக்காபாத் நகரை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி கஞ்சன். நிறைமாத கர்ப்பிணியான கஞ்சனை பிரசவத்துக்காக நேற்று அப்பகுதியில் உள்ள ஆகாஷ் கங்கா என்ற தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு கஞ்சனை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு சுகப்பிரசவம் நடைபெறும் என கூறி உள்ளனர்.
ஆனால் சிறிது நேரத்தில் கஞ்சனுக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை நடத்த வேண்டும் என கூறவே ரவிக்குமாரும் சம்மதித்தார். உடனே கஞ்சனை அறுவை சிகிச்சை அரங்குக்குள் அழைத்து சென்றனர். அவருக்கு நல்லபடியாக அறுவை சிகிச்சை முடிந்து குழந்தை பிறந்தது.


பின்னர் கஞ்சனை வெளியில் அழைத்து வந்து படுக்கையில் படுக்க வைத்துள்ளனர். குழந்தை அறுவை சிகிச்சை அரங்கில் இருந்தது. திடீரென ஆஸ்பத்திரி ஊழியர் ஒருவர் ஓடி வந்து ஒரு தெரு நாய் அறுவை சிகிச்சை அரங்கினுள் புகுந்து விட்டதாக சத்தம் போட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ரவிக்குமார் உள்ளே ஓடிச்சென்று பார்த்த போது குழந்தை நாய்க்கடி காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தது. அப்போது குழந்தையை கடிக்க மீண்டும் நாய் அருகில் வந்தது. உடனே ரவிக்குமார் கூச்சல் போடவும், ஆஸ்பத்திரி ஊழியர்கள் ஓடி வந்து நாயை விரட்டினர்.

பின்னர் குழந்தையை டாக்டர்கள் சோதித்தபோது குழந்தை இறந்தது தெரிய வந்தது. இதுகுறித்து ரவிக்குமார் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் ஆஸ்பத்திரி உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து டாக்டர்கள் குழு அமைத்து விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே உரிய ஆவணங்கள் இல்லாமல் ஆஸ்பத்திரி இயங்கி வருவது விசாரணையில் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரிக்கு சீல் வைத்து மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார்

கருத்துகள் இல்லை: