புதன், 15 ஜனவரி, 2020

பெண்களுக்கான ஜல்லிக்கட்டு? திருச்செங்கோட்டில் ஏராளமானோர் பங்கேற்பு



modern-jallikattu-for-women-a-large-number-of-participants-in-thiruchengodehindutamil.in/ : நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பெண்களுக்காக மட்டுமே நடத்தப்படும் நவீன ஜல்லிக்கட்டுப் போட்டி வெகுசிறப்பாக நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஏராளமான பெண்கள், சிறுமிகள் கலந்து கொண்டனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நந்தவனத் தெரு பகுதியில் கடந்த 11 ஆண்டுகளாக பெண்கள் மற்றும் சிறுமிகள் மட்டுமே கலந்துகொள்ளக் கூடிய நவீன ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று நடைபெற்றது. ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் காளையர்கள் காளைகளைப் பிடிப்பது வழக்கம் . இதில் பெண்களுக்கு அனுமதியில்லை. இது குறித்த நகைச்சவையாக சிந்தித்த இந்தப் பகுதி இளைஞர்கள் நவீன ஜல்லிக்கட்டு என்ற பெயரில் ஒரு போட்டியை ஏற்பாடு செய்து அந்தப் போட்டியில் கோழியைப் பிடிப்பது என்றும் அதுவும் பெண்கள் மட்டும் இதில் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவித்து நடத்தி வருகின்றனர்.

ஒரு பெரிய அளவிலான வட்டத்தை வரைந்து அதன் நடுவே போட்டியாளர்கள் நிறுத்தப்படுவார்கள். போட்டியில் ஒரு கயிறு போட்டியாளரின் காலில் கட்டப்படும். அதன் மறுமுனை கோழியின் காலில் கட்டப்படும். போட்டியாளரின் கண்கள் கட்டப்பட்டு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வட்டத்தை விட்டு வெளியேறாமல் கோழியைப் பிடிக்க வேண்டும் என்பதும் கயிற்றைக் கையில் பிடித்தோ காலில் பிடித்தோ இழுக்கக் கூடாது என்பதும் நிபந்தனை.
சீறிவரும் காளையைப் பிடிப்பது ஜல்லிக்கட்டு என்றால் கண்களைக் கட்டிக் கொண்டு கோழியைப் பிடிப்பது நவீன ஜல்லிக்கட்டு ஆகும். இந்தப் போட்டி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நந்தவனம் தெருவில் நடைபெற்றது. இதில் பெண்கள், சிறுமிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்தப் போட்டி குறித்து விழாக் குழுவைச் சேர்ந்த தேவேந்திரன் கூறும்போது, ''நவீன ஜல்லிக்கட்டு என்பது போட்டியாளரின் கால்களில் ஒரு கயிற்றின் ஒரு முனையும் மறுமுனை கோழியின் காலிலும் கட்டப்பட்டு போட்டியாளரின் கண்கள் கட்டப்படும். போட்டியாளர்கள் தன் உணர்வின் மூலம் கோழியைப் பிடிக்க வேண்டும்.
ஜல்லிக்கட்டுப் போட்டி வீரத்துக்குப் பெயர் பெற்றது என்றால் இந்த நவீன ஜல்லிக்கட்டுப் போட்டி விவேகத்திற்கு பெயர் பெற்ற போட்டி'' எனக் கூறினார்.
பெங்களூருவில் இருந்து திருவிழாவுக்காக சொந்த ஊருக்கு வந்திருந்த சர்மிளா என்பவர் கூறும்போது, ''ஜல்லிக்கட்டுப் போட்டி திருச்செங்கோட்டில் நடைபெறுகிறது என்ற செய்தியும் இதில் குறிப்பாக பெண்கள் மட்டும் கலந்து கொள்கிறார்கள் என்ற செய்தியும் ஆவலைத் தூண்டியதால் இங்கு வந்தேன். இதில் பெண்கள் குழந்தைகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள். நவீன ஜல்லிக்கட்டுப் போட்டியில் பெண்கள், சிறுமிகள் பங்கேற்கும் வகையில் நடத்தினார்கள். அதைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்று கூறினார்.
இந்தப் போட்டியில் ஏராளமான பெண்களும், சிறுமிகளும் கலந்துகொண்டு உற்சாகமாக விளையாடினர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன

கருத்துகள் இல்லை: