ஞாயிறு, 28 மே, 2017

இந்திய திரைப்படங்கள் சீனாவில் பெரும் வெற்றிகளை பெறமுடியும்

அமீர்கான் நடித்த தங்கல் திரைப்படம் இந்த மாதம் 5 ஆம் தேதி சீனாவில் வெளியிடப்பட்டு மாபெரும் வெற்றியடைந்துள்ளது. இந்தியாவில் தங்கல் திரைப்படம் செய்த வசூலை விடச் சீனாவில் கூடுதலாக வசூல் செய்துள்ளது. படம் வெளியிடப்பட்டுள்ள 22 நாட்களில் இதுவரை 825 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதனால் சீனாவில் அதிக வசூல் செய்த முதல் இந்தியத் திரைப்படம் என்ற சாதனையை தங்கல் படம் பெற்றுள்ளது.
சீனத் திரையுலகில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தைப் போல இந்தியத் திரைப்படங்களுக்கும் தங்கல் மூலம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. திரைப்பட வர்த்தக ஆய்வாளர் மற்றும் ஆர்மேக்ஸ் மீடியாவின் தலைமை நிர்வாக இயக்குநருமான சைலீஷ் கபூர் இதுகுறித்து கூறியுள்ளதைக் காண்போம், "தங்கல் திரைப்படம் இந்தியாவில் நல்ல விமர்சனங்களையும், வணிக ரீதியான மிகப்பெரிய வெற்றியையும் பெற்றது.
சீனாவில் தங்கல் வெற்றி பெற்றதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. காரணம் இந்தியாவை விட சீனாவில் திரையரங்குகளின் எண்ணிக்கை பலமடங்கு அதிகம். சீனாவில் மட்டும் 42,000 திரையரங்குகள் உள்ளன. இது இந்தியாவைப் போல மூன்று மடங்காகும். 2019 ஆம் ஆண்டில் அமெரிக்காவை விட மிகப்பெரிய திரைப்படச் சந்தையாக சீனா மாறும்" என்றார்
இந்தியத் திரைத்துறை ஏற்கனவே சீனாவின் மீது கண் வைத்துள்ளது. வரும் ஜூன் மாதம் 25 ஆம் தேதி பாலிவுட் நடிகர் 'சல்மான்கான்' மற்றும் அவருக்கு ஜோடியாகச் சீன நடிகை 'ஜு ஜு' நடித்துள்ள 'ட்யூப்லைட்' திரைப்படம் சீனாவில் வெளியாகிறது. 1962 ஆம் ஆண்டு இந்திய, சீன போருக்குப் பின் இந்தியத்திரைப்படங்கள் பெரியளவில் சீனாவில் வெளியாவது தடைபட்டது. தற்போதுதான் மீண்டும் இந்தியத் திரைப்படங்கள் சீனாவில் தொடர்ந்து வெளியாகின்றன.
வணிக ரீதியில் தங்கல் கொடுத்துள்ள மிகப்பெரிய வெற்றியின் மூலம் இந்திய-சீனத் தயாரிப்பாளர்களுக்கு புது நம்பிக்கை கிடைத்துள்ளது. அதே சமயம் ஹாலிவுட்டின் சிறந்த திரைப்படங்கள் வருடத்திற்கு 34 ஆவது சீனாவில் வெளியாகிறது. ஹாலிவுட் திரைப்படங்கள் சீனாவில் கடந்த 2016 ஆம் ஆண்டில் 34 சதவிகித சந்தையை கைப்பற்றியது. எனவே சீனாவில் இந்தியத் திரைப்படங்கள் வெற்றி பெற தங்கல் போன்ற சிறந்த திரைப்படங்களால் மட்டுமே முடியும். இந்தியத் திரைப்படங்கள் சீனாவில் வெற்றி பெற கடுமையான போட்டியை சந்திக்க வேண்டியிருக்கும் என்று கூறுகின்றனர் திரைத்துறை வல்லுநர்கள்

கருத்துகள் இல்லை: