புதன், 14 டிசம்பர், 2016

போயஸ் கார்டனை விட்டு தற்காலிகமாக சசிகலா வெளியேறுகிறார் ..

தமிழகத்தின் முதல்வராகவும், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராகவும் பதவி வகித்த ஜெயலலிதா கடந்த 5ம் தேதி காலமானார். இதையடுத்து முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றுகொண்டார். கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை ஏற்குமாறு ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் சசிகலாவுக்கு எதிரான நிலையையும் தமிழகத்தின் பல பகுதிகளில் காண முடிகிறது.
ஜெயலலிதாவால் விரட்டப்பட்ட சசிகலாவின் உறவினர்கள், ஜெயலலிதாவின் உடலை சுற்றி அரணாக நின்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. மேலும் போயஸ் கார்டன் வீட்டிலேயே சசிகலா தங்கியுள்ளதால், வீடு உள்ளிட்ட ஜெயலலிதாவின் சொத்துகளை அவர் வசம் கொண்டு வந்துள்ளதாகவும் பரவலாக பேசப்படுகிறது.
போயஸ் கார்டன் வீட்டை முற்றுகையிடும் அ.தி.மு.க. தொண்டர்கள், சசிகலாவுக்கு எதிராக முழக்கமிட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சசிகலா போயஸ் கார்டனை விட்டு வெளியேறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் சசிகலாவின் மனநிலை என்ன என்பது தொடர்பாக மன்னார்குடி உறவினர்கள் சிலரிடம் நாம் பேசினோம். அவர்கள் சொன்னது இங்கே.
"போயஸ் கார்டன் முன்பு கூடிய பொதுமக்கள் சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதும், சசிகலா போயஸ் கார்டனைவிட்டு வெளியேற வேண்டுமென பகிரங்கமாக பேசி வருவதும் சசிகலாவை ரொம்பவே அப்செட் ஆக்கியுள்ளது. ஜெயலலிதாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய சசிகலா போயஸ் கார்டனில் தங்கியிருக்கிறார். சசிகலா, இளவரசி, அவரது மகன் விவேக் தவிர யாரும் இங்கு இல்லை.
மற்றவர்கள் இரண்டு நாட்கள் மட்டும் தங்கியிருந்தார்கள். அவர்களை சசிகலா வெளியேற்றி விட்டார். தம்பி திவாகரன் மன்னார்குடியிலும், டாக்டர் வெங்கடேஷ், மகாதேவன் ஆகியோர் சென்னையில் உள்ள அவர்களது வீடுகளுக்கும் சென்று விட்டார்கள். டாக்டர் சிவக்குமார் மட்டும் அவ்வப்போது வந்து போகிறார். 'யாரும் இங்கு இருக்க வேண்டாம். நாம் பட்ட அவமானங்கள் போதும். இனிமேலும் உங்களால் எனக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது' என்று சொல்லித்தான் மற்றவர்களை வெளியேற்றினார்.
தற்போது ஜெயலலிதா இருக்கும்போது யார் யார் இருந்தார்களோ, அதாவது சசிகலா, இளவரசி, இளவரசி மகன் விவேக் ஆகியோர் மட்டுமே கார்டனில் இருக்கிறார்கள். சசிகலா மட்டும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனைகளையும், உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.
சசிகலா இப்போது உடல் அளவிலும், மனதளவிலும் மோசமாக இருக்கிறார். தேவையில்லாத அவர்மீது சுமத்தப்படுகின்ற பழிகளை நினைத்து மிகவும் தொய்வடைந்து போயிருக்கிறார். "எனக்கும் அக்காவிற்கும் இடையே நிறைய மனக்கசப்புகள் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், எப்போதும் நான் அவரிடம் வெளிகாட்டியதில்லை நான்தான் அவர்களிடத்தில் அட்ஜெஸ்ட் செய்து போயிருக்கிறேன். ஒருபோதும் அவர் வாழ்ந்த வீட்டை நான் எடுத்துக்கொள்ள நினைத்ததில்லை. அது எனக்கு தேவையும் இல்லை. அக்கா என்னிடம் சில நேரங்களில் சிலவற்றை வெளிப்படையாக பேசியதும் உண்டு. அவற்றில் ஒன்றுதான் போயஸ்கார்டன் பற்றியது. இந்த வீடு நமக்கு வேண்டாம். இங்கு நான் இருந்தால்தானே என்மீது தேவையில்லாத பழியை சுமத்துவார்கள். நான் சீக்கிரமே வெளியேறி விடுகிறேன். விரைவில் மணிமண்டபம் கட்டி முடித்துவிட வேண்டும்," என சொல்லி வருகிறார்.
அதோடு போயஸ் கார்டனையும் பொதுமக்கள் எதிர்பார்ப்பதுபோல் அவர்கள் தினம் பார்த்து செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், ஜெயலலிதாவின் ரத்த உறவான தீபக்குக்கு ஜெயலலிதா பெயரில் உள்ள சொத்துகளை பிரித்து கொடுத்து விடலாம் என்றும் சொல்லி வருகிறார்," எனச்சொன்னார்கள். அப்படியென்றால் கட்சியின் பொதுசெயலாளர் பதவியை ஏற்பாரா என கேட்டபோது, 'அதை அவர் தான் முடிவு செய்வார்' என்கிறார்கள்.
தன் மீது ஒரு பரிதாப சூழலை ஏற்படுத்தி, அதன் மூலம் கட்சியை பதவியை எந்த சிக்கலும் இல்லாமல் பெறுவதற்காகவே சசிகலா போயஸ் கார்டனை விட்டு வெளியேறும் முடிவை எடுத்திருப்பதாகவும், இடைக்கால அடிப்படையில் உறவுகளை தள்ளி வைத்திருப்பதாகவும் பேச்சு எழுந்துள்ளது.
தமிழக அரசியல் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.ஏ,ராம்  விகடன்,காம்

கருத்துகள் இல்லை: