சனி, 17 டிசம்பர், 2016

bbc :கலைஞரை ராகுல் காந்தி , அதிமுக தம்பிதுரை ,ஜெயக்குமார் மேலும் பல தலைவர்கள் காவேரி மருத்துவமனையில்

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் தி.மு.க.தலைவர் கருணாநிதியை காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.அ.தி.மு.கவைச் சேர்ந்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, மாநில மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோரும் கருணாநிதியை நலம் விசாரித்தனர்.
இன்று காலை பதினொன்றே முக்கால் மணியளவில் கருணாநிதி சிகிச்சைபெற்றுவரும் காவிரி மருத்துவமனைக்கு வந்த ராகுல் காந்தி, அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு 'ட்ராக்யோஸ்டமி' சிகிச்சை
இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அவர் நலமுடன் இருக்கிறார். விரைவில் வீடு திரும்புவார் என அவருக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தியாவின் மூத்த அரசியல்வாதி, தமிழ் மக்களின் தலைவர், அவர் விரைவில் வீடு திரும்ப வாழ்த்துகிறேன்" என்று கூறினார்.

கருணாநிதியை தான் நேரில் சந்தித்ததாகவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.
ராகுல் காந்தியுடன் தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசு, முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் உடன் வந்தனர். ராகுல் காந்தி வந்து சென்ற சில மணி நேரத்திற்குப் பிறகு, அதிமுக எம்.பி. தம்பிதுரை, தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோரும் காவிரி மருத்துவமனைக்கு நேரில் வந்து நலம் விசாரித்தனர்.
கடந்த முறை கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அ.தி.மு.க சார்பில் யாரும் மருத்துவமனைக்கு வந்து பார்க்கவில்லை. இந்த நிலையில், அ.தி.மு.க. தலைவர்களின் இந்த வருகை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
இதற்கிடையில், வரும் 20ஆம் தேதி தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் நடப்பதாக இருந்த அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாகவும், புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் க. அன்பழகன் அறிவித்திருக்கிறார்.
கருணாநிதியைப் பார்ப்பதற்காக தொண்டர்கள் யாரும் மருத்துவமனைக்கு வர வேண்டாம் என்றும் அக்கட்சி கோரிக்கை விடுத்திருக்கிறது

கருத்துகள் இல்லை: