வெள்ளி, 16 டிசம்பர், 2016

பொருளாதார சர்ஜிக்கல் நடவடிக்கை : சக்திகாந்த தாஸ்


சட்டவிரோதமாக சேர்த்து வைக்கப்பட்டுள்ள பணத்தை அமலாக்க நிறுவனங்கள் பறிமுதல் செய்வதை, சர்ஜிக்கல் நடவடிக்கை என்றும் அழைக்கலாம் என பொருளாதார விவகாரத் துறைச் செயலாளர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.
பண ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ள மத்திய அரசு போதுமான புதிய நோட்டுகளை வெளியிடாததால் பொதுமக்கள் மாற்றுப்பணம் பெற முடியாமலும், டெபாசிட் செய்த தொகையை வங்கியில் இருந்து எடுக்க முடியாமலும் அவஸ்தையடைந்து வருகின்றனர்.
இதனால், நாடு முழுவதும் நடுத்தர மக்களிடையே கடும் அதிருப்தி உருவாகியுள்ளநிலையில், பொருளாதார விவகாரத் துறைச் செயலாளர் சக்திகாந்த தாஸ் நேற்று 15ஆம் தேதி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியபோது கூறியதாவது:
500 ரூபாய் நோட்டு
முதன்முறையாக புதிய ரூபாய் நோட்டு வடிவமைப்பு உள்நாட்டிலேயே திட்டமிடப்பட்டது. புதிய நோட்டுகள் அனைத்தும் 100 சதவிகிதம் பாதுகாப்பானவை, கள்ள நோட்டுகளுக்கு வாய்ப்பு மிகவும் குறைவு. தற்போது, புதிய 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. புதிய ரூபாய் நோட்டுகள் விநியோகம் போதுமான அளவுக்கு இல்லை என புகார்கள் வருகின்றன. எனவே, புதிய ரூபாய் நோட்டுகள் விநியோகம் வேகப்படுத்தப்பட்டுள்ளது. தேவைப்படும் இடங்களுக்கு விமானங்கள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. குறிப்பாக, கிராமப்புறங்களில் போதுமான பணம் விநியோகம் செய்வதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
சர்ஜிக்கல் நடவடிக்கை
சட்ட விரோதமாக பணம் பதுக்கி வைத்திருப்பவர்கள் குறித்து வரும் தகவலின் அடிப்படையில் அந்தப் பணத்தை அமலாக்க நிறுவனங்கள் பறிமுதல் செய்துவருகின்றன. இதை சர்ஜிக்கல் நடவடிக்கை என்றும் அழைக்கலாம். மொத்தம் 2 லட்சத்து 20 ஆயிரம் ஏ.டி.எம். மையங்கள் உள்ளன. இதில், 2 லட்சத்துக்கும் அதிகமான ஏ.டி.எம்.கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளன.
முன்னுரிமை
ரிசர்வ் வங்கி ஒரு ஆண்டில் வெளியிடும் பணத்தின் அளவைவிட, கடந்த 5 வாரங்களில் மூன்று மடங்கு அதிக மதிப்பிலான 100 ரூபாய் மற்றும் அதற்குக் குறைவான மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. வங்கிகள் ஏ.டி.எம்.கள் மூலமாக பணம் விநியோகம் செய்வதைவிட, தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வங்கிக் கிளைகள் மூலம் பணம் வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கின்றன என்று அவர் கூறினார்.  மின்னம்பலம்,காம்

கருத்துகள் இல்லை: