சனி, 17 டிசம்பர், 2016

திருநாவுக்கரசரின் வெள்ளையறிக்கை ஜால்ரா .. காங்கிரசில் புயல் கிளப்பி உள்ளது

minnambalam.com முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து, பல்வேறு கருத்துகள் நிலவி வருகிறது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும் திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனரான டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் வற்புறுத்தி உள்ளனர்.
இந்தநிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ’’வெள்ளை அறிக்கையோ?, கறுப்பு அறிக்கையோ? எதுவும் தேவையில்லை. வெள்ளை அறிக்கை வெளியிடுவதால் ஜெயலலிதா உயிரோடு திரும்பி வரப்போவதில்லை” என்று கருத்து தெரிவித்திருந்தார். திருநாவுக்கரசரின் கருத்து, கூட்டணி கட்சியான திமுக தலைவர்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம், ‘’திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் போன்ற தலைவர்கள் கேட்டுள்ளதைப்போல் நானும் ஜெயலலிதா மரணம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறேன்.

காரணம் அவர் ஒரு சாதாரண பெண்மணி அல்ல, தமிழக முதல்வராகவும், வலிமை வாய்ந்த பெண்மணியாகவும், வலிமைமிக்க அதிமுகவின் பொதுச்செயலாளராகவும் இருந்தவர். 75 நாட்களாக மருத்துவமனையில் இருந்தபோது அவரை பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை. வழக்கமான உணவை சாப்பிடுகிறார் என்று ஒருநாள் செய்தி. மறுநாள் தொண்டை வழியாக உணவு செலுத்தப்படுகிறது என்கிறார்கள். எழுந்து நடக்க பயிற்சி அளிக்கப்படுகிறது, எழுந்து உட்கார்ந்து இருக்கிறார், செல்போனில் பேசினார் என்றெல்லாம் தெரிவித்தார்கள்.
மறுநாளே பிசியோதெரபி சிகிச்சை, பேச்சு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்றார்கள். இப்படி முன்னுக்குப்பின் முரணாக பல தகவல்களை வெளியிட்டு வந்தார்கள்.
ஆனால், மருத்துவமனையில் இருந்த 75 நாட்களில் தமிழக அரசு சார்பில் சுகாதாரத்துறை அமைச்சரோ, செயலாளரோ எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. எனவே, தமிழக மக்களுக்கும், அதிமுக தொண்டர்களுக்கும் சந்தேகம் எழுவது நியாயமானதுதான். அந்த சந்தேகத்தை போக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. மடியில் கனமில்லை என்றால் ஏன் அறிக்கை வெளியிட தயங்க வேண்டும்? மர்மம் இல்லை என்றால் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள், என்ன நோய் என்பதை தெளிவுபடுத்த வேண்டியதுதானே.
தமிழக காங்கிரஸ் தலைவர் ‘வெள்ளை அறிக்கையோ, கறுப்பு அறிக்கையோ தேவையில்லை. அதனால் அவர் உயிரோடு வருவாரா? என்று கொச்சைப்படுத்தி இருப்பது மனதை காயப்படுத்துகிறது. இது காங்கிரசின் கருத்து அல்ல. அவரது சொந்த கருத்து.” என்று கூறி தனது கண்டனத்தை தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: