திங்கள், 12 டிசம்பர், 2016

பாஜக-வுக்கு தாவும் அதிமுக-வினர்!

ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக-வின் எதிர்காலம் என்ன என்பது குறித்து சிந்திக்காதவர்கள் தமிழகத்தில் எவரும் இருக்க முடியாது. ஜெயலலிதாவின் நிழலாக இருந்த சசிகலாவுக்குக் கட்சிக்குள் கடுமையான எதிர்ப்பு இருக்கும் என்றுதான் பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் யாரும் எதிர்பார்க்க விதத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், ஏன் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஓ.பன்னீர்செல்வம் வரை சசிகலாவுக்குச் சிவப்பு கம்பளம் விரித்து அவரை பொதுச்செயலாளராக பதவி ஏற்க அழைப்பு விடுத்துள்ளார்கள். இதுதான் அதிமுக-வின் கட்சி நிர்வாகிகளின் நிலைப்பாடாக இருக்கிறது. ஆனால் கட்சியின் கடைக்கோடியின் இருக்கும் தொண்டர்களுக்கு இதில் உடன்பாடு இல்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சிலர் சசிகலா பொதுச்செயலாளராக பொறுப்பேற்கக்கூடாது என்று போயஸ் தோட்டத்தில் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
பொது மக்களும் சசிகலாவுக்கு எதிராக சமூக வளைதளங்களில் தங்கள் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் ‘அதிமுக-வில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்’ என்று திமுக கூறியுள்ளது. மறுபுறம் பாஜக இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழகத்தில் காலூன்ற துடிக்கிறது. எங்கெல்லாம் அதிருப்தி நிலவுகிறதோ அங்கு ஆட்களை வளைக்கும் காரியத்தில் இறங்கி உள்ளனர் என்றும் கூறப்படுகிறது. முதல் கட்டமாக தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியைச் சேர்ந்த அதிமுக-வின் அதிருப்தியாளர்கள் என்று கூறப்படும் 25 பேர் பாஜக-வில் இணைந்துள்ளனர். அவர்கள், “எங்கள் புரட்சித்தலைவி அம்மாவின் இடத்தில் வேறு யாரையும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே அதிமுக-வைத் துறந்து பாஜக-வில் இணைந்தோம்” என்று கூறியிருக்கிறார்கள். தூத்துக்குடி மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி, மாவட்டப் பொருளாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் இந்த இணைப்பு நடந்துள்ளது. இந்த இணைப்பின்போது பேசியவர்கள், “இது தொடக்கம்தான். அதிமுக அதிருப்தியாளர்கள் பாஜக-வில் தஞ்சம் புகுவார்கள்” என்று கூறியுள்ளார்கள். minnambalam,com

கருத்துகள் இல்லை: