வியாழன், 15 டிசம்பர், 2016

ஏடிஎம்-இல் ரூ.2000 கள்ள நோட்டு? மக்கழே மக்கழே சாக்கிரத...

மின்னம்பலம்.காம் :கடந்த மாதம் 8ஆம் தேதி பழைய ரூபாய் 500, 1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்ததைத் தொடர்ந்து, நாட்டில் பணப்புழக்கம் வெகுவாக குறைந்துள்ளது. ஏடிஎம் வாசலில் மக்கள் குவிந்து வருகின்றனர். மேலும்,பல ஏடிஎம்கள் செயல்படாமல் உள்ளன. இதனால், இயல்பு வாழ்க்கையை பாதிப்படைந்து, மக்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், பீகார் மாநிலத்தில் உள்ள ஏடிஎம் ஒன்றில் ரூபாய் 2000 நோட்டு, கள்ள நோட்டாக வந்துள்ளது என்று ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் விவசாயி பங்கஜ் குமார் (42). இவர் சீதாமார்ஹி மாவட்டத்தில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம்-இல் ரூபாய் 2000 எடுத்துள்ளார். பின்னர், அந்த ரூபாய் நோட்டை மாற்ற முயன்றபோது கள்ள நோட்டு என்று கூறி 2000 ரூபாயை மாற்ற மறுத்துள்ளனர். எனவே, இந்த சம்பவம் குறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் எஸ்பிஐ வங்கி கிளையிலும் விவசாயி புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து, சீதாமார்ஹி மாவட்ட எஸ்பிஐ வங்கி தலைமை கிளையின் மூத்த மேலாளர், “விவசாயி பங்கஜ் குமார் பணம் எடுத்த ஏடிஎம்-இல், பணம் நிரப்பும் பணி தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் அதிகாரிகள் முன்னிலையில் அங்கு பணம் நிரப்பப்பட்டுள்ளது. எனவே, நிரப்பப்பட்ட பணம் குறித்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. எனவே, அந்த ஏடிஎம் மையத்துக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளது. விவசாயி பங்கஜிடம் கள்ள நோட்டை கொடுத்து, உண்மையான நோட்டுகளை யாரேனும் மாற்றி அவரை ஏமாற்றியிருக்க வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: