வெள்ளி, 28 அக்டோபர், 2016

டொனால்ட் ட்ரம்ப்... மோடியே பொறாமைப்படும் அளவு நாறவாய்... நானும் ரவுடிதாய்ன்..

ஆட்டோ சங்கர், விஜய் மல்லையா, ஈமு கோழி அதிபர், மகா பெரியவா ஜெயேந்திர சரஸ்வதி போன்ற ‘ஆளுமைகள்’ அனைவரையும் சேர்த்து செய்த கலவையான “அவர்” – டொனால்ட் டிரம்ப்.
சுமார் 3,500 சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளில் அவர் சம்பந்தப்பட்டிருக்கிறார். அந்த வழக்குகளில் சரிபாதி அவர் பிறர் மேல் தொடுத்த வழக்குகள் – மறுபாதி பிறர் அவர் மேல் தொடுத்த வழக்குகள். அவருக்குச் சொந்தமான நிறுவனங்கள் சுமார் 100-க்கும் மேற்பட்ட வருமான வரி தொடர்பான வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளது. வருமான வரி கட்டாமல் ஏய்ப்பது ஒருவரின் தனிப்பட்ட திறமை என்று பொது மேடையிலேயே அறிவித்துள்ளார். அவர் மேல் சுமார் 14 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளனர். தனது சொந்த மகளையே பாலியல் கண்ணோட்டத்துடன் விமர்சித்திருக்கிறார்.
அவருக்கு சுமார் 500 தொழில் நிறுவனங்களில் முதலீடு உள்ளது. ரியல் எஸ்டேட், சூதாட்ட விடுதிகள், மதுபானங்கள், அழகுப்போட்டிகள் நடத்துவது போன்ற ’தொழில்களே’ அவரது பிரதானமான வருவாய் மூலங்கள்.
இவை தவிர நீங்கள் கேள்வியேபட்டிராத பல்வேறு உப்புமா தொழில்களும் அவருக்கு உண்டு – அவையெதுவும் சொல்லிக் கொள்ளும்படி யோக்கியமானவை அல்ல என்பதால் தவிர்க்கிறோம். திடீரென ஒரு புதிய நிறுவனத்தைத் துவங்கி, அந்நிறுவனத்தின் மேல் அதிகப்படியான விளம்பர வெளிச்சம் பாய்ச்சி, முதலீடுகளை ஈர்த்து, இறுதியில் மஞ்சள் நோட்டீஸ் (ஓட்டாண்டியாக அறிவிப்பது) அளித்து முதலீட்டாளர்களை மொட்டையடிப்பதில் அவர் வல்லவர். 1991, 1992, 2004 மற்றும் 2009 என மொத்தம் நான்கு முறை தனது நிறுவனங்கள் கடனில் முழுகி விட்டதாக (Corporate Bankruptcy) அறிவித்துள்ளார்.
டொனால்ட் டிரம்ப்
டொனால்ட் டிரம்ப்
ஆட்டோ சங்கர், விஜய் மல்லையா, ஈமு கோழி அதிபர், மகா பெரியவா ஜெயேந்திர சரஸ்வதி போன்ற ‘ஆளுமைகள்’ அனைவரையும் சேர்த்து செய்த கலவையான “அவர்” – டொனால்ட் டிரம்ப். குடியரசுக் கட்சியின் சார்பாக அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார். தற்போதைய சூழலில் எடுக்கப்படும் கருத்துக் கணிப்புகள் அவரை எதிர்த்துப் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டனே வெல்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அறிவிக்கின்றன; எனினும், இன்ஷா அல்லாஹ், ஒருவேளை அவர் வெல்லும் பட்சத்தில் இன்னும் சில மாதங்களில் அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொள்வார்.
ட்ரம்பின் வாய் ஒரு விசேடமான உறுப்பு. பொதுவாக மூளையில் உற்பத்தியாகும் சிந்தனைகளை வெளியிடும் உறுப்பாக அறியப்படும் வாய், டிரம்பிடம் வேறு வகையில் செயல்படுகின்றது. அவரது வாய் நாறத்தனத்தின் ஆழ அகலம் என்னவென்பதையும், மூளையின் தொடர்பின்றி அதற்கென்றே தனியாக கருத்துக்களை உற்பத்தி செய்யும் ஆற்றல் உள்ளதா எனவும் நாசா விஞ்ஞானிகளாலேயே கண்டிபிடிப்பது சிரமம். நாற்பதாண்டு கால தொழில் நடவடிக்கைகள் அனைத்தையும் தனது வாயாலேயே அளந்துள்ளார் திருவாளர் டிரம்ப்.
வாயில் வடை சுடுவதில் விற்பன்னர் என மனிதகுலம் அறிந்த திருவாளர் மோடியே பொறாமைப் படும் வகையில் டிரம்பின் வாய் செயல்படுவதாக அதிசயிக்கின்றது பத்திரிகை உலகம். கடந்த நான்கு பத்தாண்டுகளாக அமெரிக்க பத்திரிகைகளின் கிசுகிசு பகுதிக்கு (Page 3) விசயாதாரங்களை வழங்கும் மூலமாக டிரம்பின் வாய் செயல்பட்டு வந்துள்ளது. அநேக சந்தர்ப்பங்களில் டிரம்பின் வாய் அவரது கட்டுப்பாடின்றி உளறிக் கொட்டியவைகள் அனைத்தையும் தற்போது தோண்டியெடுத்து அவருக்கெதிரான பிரச்சார ஆயுதமாக பயன்படுத்தி வருகின்றது ஹிலாரி கிளிண்டனின் ஜனநாயக கட்சி.
எண்ணற்ற சந்தர்ப்பங்களில் பெண்களைக் குறித்து டிரம்ப் வெளியிட்ட கருத்துக்கள் அவரது தனிப்பட்ட மைனர் வாழ்க்கையிலிருந்து வருகின்றன. அமெரிக்க விஜய் மல்லையாவான டொனால்ட் டிரம்ப் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்திருந்தாலும், அவருக்கு மனநிறைவை அளித்த தொழில்களாக சூதாட்ட விடுதிகளையும், அழகுப் போட்டிகளையுமே குறிப்பிடுகிறார். டிரம்பின் பழைய பேட்டி ஒன்றில், தனது கண்களுக்கு அழகு மட்டுமே திருத்தமாக தெரியும் எனவும், பெண்களின் மார்பகங்கள் தனக்கு எண்ணற்ற கற்பனைகளை தோற்றுவிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
”முத்தமிடுவதில் துவங்குவேன்.. வெறும் முத்தம் தான். அதற்கு மேல் காந்தம் போல் ஈர்த்து விடும். நான் காத்திருக்கவே மாட்டேன். நீங்கள் ஒரு நட்சத்திரமாக இருந்தால் அவர்கள் உங்களை எதற்கும் அனுமதிப்பார்கள். நீங்கள் எதையும் செய்யலாம். அவர்களது பெண்குறியைப் பிடித்திழுக்கலாம்… என்ன வேண்டுமானாலும் செய்யலாம்” – இது டிரம்ப் அளித்த பேட்டி ஒன்றில் உள்ள வைர வரிகள். இந்தப் பேட்டி பதிவு செய்யப்பட்டு தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டுள்ளது. ஆகச் சிறந்த பின்நவீனத்துவவாதிகள் கூட இவ்வளவு பெரிய’கலத்தை’ செய்ய மாட்டார்கள்.
donald-trump1டிரம்பின் எதிர்முகாம் இந்த பேட்டியைத் தோண்டியெடுத்து வெளியிட்ட பின், “அட, அதெல்லாம் உடைமாற்றும் அறையின் உளறல்கள்” என கருத்துத் தெரிவித்துள்ளார் டிரம்ப். பெண்களைக் குறித்து டிரம்ப் வெளியிட்ட கருத்துக்களிலேயே இது தான் ஓரளவுக்கு நாகரீகமானது என்றால், மற்ற உரையாடல்களின் தரம் என்னவாக இருக்கும் என்பதை வாசகர்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறோம்.
தத்துவஞானி இளையதளபதி விஜய் கில்லி திரைக்காவியத்தில் முன்வைத்த “வாழ்க்கை ஒரு வட்டம்” என்கிற தத்துவம் அமெரிக்காவுக்குப் பொருத்தமாகியிருக்கிறது. ஜனநாயகத்தின் மாண்பு, உயரிய மனித பண்புகள், முன்னேறிய நாகரீகம் உள்ளிட்ட கந்தாயங்களின் ஒட்டுமொத்த விற்பனையாளராக தன்னைத் தானே நியமித்துக் கொண்டு உலகிற்கு பாடம் எடுப்பதே அமெரிக்காவின் முழுநேரத் தொழில். தானே பெற்றுப் போட்ட குறைப்பிரசவக் குழந்தைகளான தாலிபான், அல்குவைதா, ஐ.எஸ் போன்ற தீவிரவாத இயக்கங்கள் மட்டுமின்றி வட கொரிய அதிபர், ஈரான் தலைவர்கள் போன்றோரையும் காண்டுமிராண்டிகளாகச் சித்தரிப்பதன் மூலமே தனது சொந்த நாட்டு மக்களிடம் போருக்கான நியாயத்தை நிலைநாட்டியது அமெரிக்கா. டிரம்ப் இவர்கள் அனைவரையும் விஞ்சிய காட்டுமிராண்டியாக அம்பலப்பட்டு நிற்கிறார்.
உலக வரலாறு, நாடுகள் பற்றிய விவரங்கள், புவியியல் அறிவு, பொது அறிவு, பொருளாதார அறிவு உள்ளிட்ட அத்தியாவசிய அறிவுத்திறன் ஏதுமற்ற கோமாளிகளே அமெரிக்க ஜனாதிபதிகளாக போட்டியிட்டு வெல்வது வழக்கம். கார்ப்பரேட் சேவையாற்றும் முதலாளித்துவ அடியாளாக இருப்பது ஒன்றே அடிப்படை தகுதி என்ற வகையில் தான் ஜார்ஜ் புஷ் போன்றவர்கள் கூட அமெரிக்க அதிபர்களாக தெரிவு செய்யப்பட்டனர். அந்த வகையில் டொனால்ட் டிரம்ப் அதிபர் பதவிக்குத் தகுதியானவர் என்றாலும், அவரது பிற கல்யாண குணங்களைக் கண்டு சொந்தக் கட்சியினரே முகம் சுளிக்கின்றனர்.
தங்கள் நாட்டின் அதிபர் பதவிக்கு பொருத்தமானவராக அமெரிக்க முதலாளி வர்க்கத்தால் டொனால்ட் டிரம்ப்பைப் போன்ற கழிசடையையே உற்பத்தி செய்ய முடியும் என்றால் உலக முதலாளித்துவத்தின் கோபுர கலசமாக அமெரிக்கா இருப்பது நியாயம்தானே?  வினவு.காம்

கருத்துகள் இல்லை: