வியாழன், 27 அக்டோபர், 2016

ஜெயலலிதாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வாபஸ்? - கவர்னர் அதிரடி!

minnambalam.com “சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு ஒரு மாதத்தைக் கடந்துவிட்டது. துறைகள் இல்லாத முதல்வராக மட்டுமே அவர் தற்போது இருக்கிறார். முதல்வர் ஜெயலலிதாவைச் சுற்றி எப்போதும் பாதுகாப்பு பலமாகத்தான் இருக்கும். மத்திய கமெண்டோ படையின் இசட் பிளஸ் செக்யூரிட்டி பாதுகாப்பும் முதல்வருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருக்கிறார். அதனால் இசட் பிளஸ் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் எந்த வேலையும் இல்லாமல் மருத்துவமனை வளாகத்தில் கிழக்கும் மேற்குமாக நடந்தபடி இருக்கிறார்கள். தேசிய பாதுகாப்புப் படை கமெண்டோக்கள் மூலமாகத்தான் இசட் பிளஸ் செக்யூரிட்டி பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இந்த கமெண்டோ பிரிவில் பணிபுரிபவர்களுக்கு அதிநவீன எம்.பி.5 ரக துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், லேட்டஸ்ட் ரக தகவல் தொடர்புக் கருவிகள் இவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும். இந்த கமெண்டோ பிரிவில் உள்ளவர்கள் ஆயுதங்கள் மட்டுமல்லாமல் ஆயுதம் இல்லாத போர்முறை, தற்காப்புக் கலை என சகல பயிற்சிகளிலும் கைதேர்ந்தவர்கள். தேசிய பாதுகாப்புப் படையில் ஒரு கமெண்டோவை நியமிக்கும் முன்பு அவருக்கு பல கட்ட சோதனைகள் வைக்கப்படும். அத்தனையிலும் தேர்ச்சி பெற்ற ஒருவர்தான் இந்த டீமில் செயல்பட முடியும். ஒரு முக்கிய விஐபி-க்கு 24 தேசிய பாதுகாப்பு கமெண்டோக்கள் ஷிஃப்ட் முறையில் துப்பாக்கி ஏந்தியபடியே பாதுகாப்பு அளிப்பார்கள். இவர்களைமீறி இசட் பிளஸ் பாதுகாப்பில் இருக்கும் ஒருவரை நெருங்கவே முடியாது. ஜெயலலிதாவுக்கும் அப்படியான பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பாதுகாப்பு இனி முதல்வர் ஜெயலலிதாவுக்கு தேவை இல்லை என கவர்னர் வித்யாசாகர் ராவ் நினைப்பதாகச் சொல்கிறார்கள். இதுதொடர்பாக, மத்திய அரசிடம் பேசிய கவர்னர் ‘முதல்வர் ஜெயலலிதா மேடம் ஹாஸ்பிட்டல்ல இருப்பதால் அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு தேவை இல்லை. மருத்துவமனையில் முதல்வர் இருப்பதால் பாதுகாப்புப் படை வீரர்கள் எந்தப் பணியும் இல்லாமல் இருக்கிறார்கள்’ என்று சொன்னதாகச் சொல்கிறார்கள். இது தொடர்பாகப் பேசிய மத்திய அரசின் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், முதல்வர் ஜெயலலிதாவின் இசட் பிளஸ் பிரிவு செக்யூரிட்டி பாதுகாப்பை திரும்பப் பெறுவது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இன்னும் சில தினங்களில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டுவரும் இசட் பிளஸ் செக்யூரிட்டி பாதுகாப்பை வாபஸ் வாங்க வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள் விவரமறிந்த அதிகாரிகள்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதித்து கடந்த 2014, செப்டம்பர் மாதம், 17ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதுவரை ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டுவந்த இசட் பிளஸ் பாதுகாப்பு உடனடியாக விலக்கிக்கொள்ளப்பட்டது. அதாவது, முதல்வராக பெங்களூரு போனார் ஜெயலலிதா. அப்போது இசட் பிளஸ் பாதுகாப்புடன் போனார். பெங்களூரு போய் தீர்ப்பு வந்ததும் அவருக்கு கொடுக்கப்பட்டுவந்த பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டது.
சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த ஜெயலலிதாவுக்கு உடனடியாக இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கும்படி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனால், மீண்டும் அவருக்கு இசட் பிளஸ் செக்யூரிட்டி பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. இதுவரை அவருக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு தொடர்கிறது. கவர்னர் சொன்ன தகவல்களை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு அனுப்பப்பட்டு இருக்கிறதாம். ஜெயலலிதாவுக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பை திரும்பப் பெறுவது தொடர்பாக பிரதமருடன் பேசி முடிவுசெய்வார் ராஜ்நாத் சிங் என்று சொல்கிறார்கள்” என்று முடிந்தது அந்த நீண்ட ஸ்டேட்டஸ். அதற்கு போஸ்ட் கொடுத்தது ஃபேஸ்புக். சற்றுநேரத்தில் லைக் போட்டு ஷேர் செய்த வாட்ஸ் அப், தொடர்ந்து கமெண்ட்டில் ஒரு கேள்வியையும் போட்டது. “அமைச்சர்கள்கூட கவர்னரைப் பார்த்து ஆடிப்போயிருப்பதாகச் சொல்கிறார்களே?”
அதற்கு பதிலை ரிப்ளைஸில் சொன்னது ஃபேஸ்புக். “நிஜம்தான். தமிழகத்தில் உள்ள அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து தினமும் மத்திய அரசுக்கு ரிப்போர்ட் அனுப்புகிறாராம் கவர்னர் வித்யாசாகர் ராவ். ஒவ்வொரு அமைச்சர்களின் செயல்பாடுகளையும் உளவுத்துறை போலீஸார்மூலம் கண்காணிக்கத் தொடங்கியிருக்கிறார் கவர்னர். ‘எதுக்காக நம்மைப்பற்றி மத்திய அரசுக்கு இவர் ரிப்போர்ட் பண்றாரு?’ என்ற கேள்வி, அமைச்சர்கள் மத்தியில் எழுந்தபடியே இருக்கிறது. ஜெயலலிதா உடல்நிலை பற்றிய சரியான தகவல்களை அமைச்சர்கள் தனக்கு தரவில்லை என்ற கோபம் கவர்னருக்கு இன்னும் இருப்பதாகவே தெரிகிறது.” என்ற மெசேஜ்க்கு செண்ட் கொடுத்துவிட்டு சைன் அவுட் ஆனது ஃபேஸ்புக்.

கருத்துகள் இல்லை: