திங்கள், 24 அக்டோபர், 2016

விஷ்ணுபிரியா வழக்கு: சிபிஐ விசாரிக்க தடை இல்லை - உச்சநீதிமன்றம்!

minnambalam.com தலித் இளைஞர் கோகுல்ராஜின் மர்ம மரண வழக்கை விசாரித்து வந்த டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியாவின் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க தடை விதிக்க முடியாது என்று தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று (24.10.2016) தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து விஷ்ணுபிரியாவின் மரண வழக்கை சிபிஐ விசாரிப்பதில் இருந்த தடை நீங்கியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் டி.எஸ்.பி-யாக பணியாற்றியவர் விஷ்ணுபிரியா. இவர் மர்மான முறையில் இறந்த தலித் இளைஞர் கோகுல்ராஜின் கொலை வழக்கை விசாரித்து வந்தார். சேலம், மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் என்ஜினீயர் கோகுல்ராஜ். இவர் கடந்த ஆண்டு ஜுன் மாதம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் தலைதுண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தார்.
இந்த வழக்கு முதலில் தற்கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், கோகுல்ராஜும், நாமக்கல் மாவட்டம் பரமத்தியைச் சேர்ந்த ஒரு பெண்ணும் தீவிரமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று கோகுல்ராஜும், அந்த பெண்ணும் திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது ஒரு கார் வந்து நிற்க அதிலிருந்து இறங்கியவர்கள் கோகுல்ராஜை மட்டும் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இந்த காட்சிகள் யாவும் அந்த கோயிலின் சிசிடிவி-யில் பதிவாகியிருந்தது. இந்த வீடியோ வெளியானதை அடுத்து, கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டதாக கூறி, இதை கொலை வழக்காக பதிவு செய்ய வலியுறுத்தி, அவரது சடலத்தை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, இந்த வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட ஐந்து தனிப்படைகளில் ஒரு பிரிவு திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தலைமையில் அமைக்கப்பட்டது. இந்நிலையில் கோகுல்ராஜ் வழக்கை சரிவர விசாரிக்கவில்லை என உயர் அதிகாரிகள் டி.எஸ்.பி. விஷ்ணுபிரியாவை அடிக்கடி திட்டியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து திடீரென கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி தான் தங்கியிருந்த வீட்டில் துப்பாட்டாவில் விஷ்ணுபிரியா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்களை அவரது தோழி மகேஸ்வரியும், பெற்றோரும் எழுப்பினார்கள். மேலும், அவரது தந்தையான ரவி விஷ்ணுபிரியாவின் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். அதே நேரம், எஸ்.பி. விஷ்ணுபிரியா மரணம் தற்கொலை அல்ல; கொலை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். நெல்லை முத்துக்குமாரசாமி வழக்கு போல் இந்த வழக்கும் ஆகிவிடக்கூடாது என்று அரசியல்கட்சி தலைவர்களும் அழுத்தம் கொடுத்தனர்.
இதனையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி, தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், காவல்துறை உயர் அதிகாரிகளின் நெருக்கடியால்தான் விஷ்ணுபிரியா மரணமடைந்திருப்பதாகவும் கூறி விஷ்ணுபிரியாவின் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் விஷ்ணுபிரியாவின் வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த உத்தரவை ஏற்க மறுத்த, தமிழக அரசு சிபிஐ விசாரணைக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விஷ்ணுபிரியாவின் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்கக் கோரிய தமிழக அரசின் மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கருத்துகள் இல்லை: