புதன், 26 அக்டோபர், 2016

கொதித்த அழகிரி..நான் கழகத்துக்காக எவ்வளவோ செய்திருக்கேன் ...

‘‘விகடனில் வந்த கருணாநிதியின் பேட்டியும் தி.மு.க-வுக்குள் அதிர்வலைகளை உண்டாக்கிவிட்டது’’ என செய்திகளை சொல்ல ஆரம்பித்தார். ‘‘தி.மு.க-வில் அழகிரி இல்லாததை பற்றிய கேள்விக்கு, ‘இருப்பதை எண்ணி மகிழ்ந்து மேலும் மேலும் முன்னேற்ற பாதையில் நடைபோட வேண்டுமே தவிர, கழகத்தில் இப்போது இல்லாத யாரையும் நினைத்து ஏங்கி நிற்பது பயணத்துக்குத் தடையாகிவிடும்’ என சொன்ன கருணாநிதி, ‘ஸ்டாலின்தான் என்னுடைய அரசியல் வாரிசு’ எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்தப் பேட்டி கழகத்துக்குள் கலகத்தை ஏற்படுத்திவிட்டது. பேட்டியைப் படித்துவிட்டு அழகிரி கொதித்துப் போனார். 20-ம் தனது ஆதரவாளர்களுடன் வீட்டில் ஆலோசனை நடத்தியிருக்கிறார். ‘தலைவர் பேட்டியைப் படிச்சீங்களா’ என ஆதரவாளர்களிடம் கேட்க, யாராலும் பதில் சொல்ல முடியவில்லை. ‘நான் எவ்வளவோ கட்சிக்கு செய்திருக்கிறேன். இவ்வளவு புறக்கணிப்புக்குப் பின்னாலும் அமைதியாக இருக்கிறேன். இருந்தாலும் என்னைக் கண்டுகொள்ள வேண்டாம் என சொல்லியிருக்கிறார் அதைத்தான் தாங்க முடியவில்லை’ என விரக்தியாக சொல்லியிருக்கிறார் அழகிரி.
அழகிரியின் மனசாட்சி என சொல்லப்படும் முன்னாள் மண்டலத் தலைவர் இசக்கிமுத்து ‘கட்சிக்காக அழகிரி எவ்வளவோ தியாகம் செய்திருக்கிறார். அதைத் தலைமை கண்டுகொள்ளவே இல்லை. அண்ணனைக் கட்சியைவிட்டு நீக்கி மூன்று வருடங்களாகிவிட்டன. அப்படியிருந்தாலும், தலைவரை சாதியை சொல்லி இழிவாகப் பேசிய வைகோ கொடும்பாவியை எரித்துப் போராட்டம் நடத்த தொண்டர்களை அனுப்பியவர் அழகிரி. கட்சிக்கு துரோகம் செய்தவர்களை, கட்சி உடைய காரணமானவர்களை, தலைவர் குடும்பத்தையே இழிவாகப் பேசியவர்களை அரவணைத்துக் கொண்ட தலைவர், அழகிரியை மட்டும் அரவணைத்து செல்வதில் என்ன தயக்கம்? அவரை தடுப்பது யார்?’ என சீரியஸாகக் கேள்வி எழுப்பியிருக்கிறார் இசக்கிமுத்து.’’
‘‘இதற்கு எதிர் ரியாக்‌ஷன் என்னவாம்?’’

‘‘கருணாநிதி தற்போது உடல்நிலைக் குன்றி சிரமப்படுகிறார். அவரது இரண்டு கைகளில் உள்ள முட்டியிலும், முதுகிலும் கொப்பளங்கள் வந்துள்ளன. இதனால் உட்கார முடியாமல் படுத்தே உள்ளார். வயது காரணமாகவும், அவருக்கு சிகிச்சை தரும் மருத்துவர்களை அடிக்கடி மாற்றுவதாலும், சிகிச்சை முறைகளை மாற்றுவதாலும் அலர்ஜி வந்துள்ளது என்றும் கூறுகிறார்கள். ஸ்டாலின், துரைமுருகன், பொன்முடி ஆகியோர் மட்டுமே கருணாநிதி இருக்கும் அறைக்கு சென்று பார்த்து வருகின்றனர். கட்சிக்காரர்கள் யாராலும் கருணாநிதியைப் பார்க்க முடியவில்லை. ராசாத்தி அம்மாளும், கனிமொழியும் தினமும் இரண்டுமுறை கோபாலபுரம் வந்து கருணாநிதியைப் பார்த்துக்கொள்கின்றனர். அறிவாலயம், சி.ஐ.டி காலனி என எங்கும் செல்லமுடியாமல் கருணாநிதி வீட்டிலே உள்ளாராம். அதனால் இப்போதைக்கு எந்த ரியாக்‌ஷனும் இல்லை.’’  விகடன்,காம்

கருத்துகள் இல்லை: