ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

ஜெ.,வின் 'ஸ்டீரியோ டைப்' பிரசாரம்: அ.தி.மு.க.,வினர் அதிருப்தி

மக்களை ஓரிடத்திற்கு அழைத்து வந்து, அரசு சாதனைகளை பட்டியலிடும் ஜெயலலிதாவின் பிரசாரம், மக்களை கவராதது, கட்சியினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அனைத்து கட்சிகளுக்கும் முன், அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியலை, ஏப்., 4ம் தேதி, ஜெயலலிதா வெளியிட்டார். அன்றே தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை அறிவித்தார். அடுத்து ஏப்., 9ம் தேதி, சென்னை தீவுத்திடலில் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார்.  எல்லாவற்றையும் காணொளி காட்சி முலம் திறந்து வைக்கும் ஜெயலலிதா, இந்த தேர்தலிலும் காணொளி காட்சி முலம் வேட்பாளர்களை அறிமுகம் செய்துவிட்டு வாக்கையும் சேகரிக்க வேண்டியது தானே .தேர்தல் நேரத்தில் மட்டும் ஊர் ஊராக நேரில் வந்து ஓட்டு கேட்கும் இவர்கள் ஆட்சியில் ஏறியவுடன் மக்களை ( மக்கள் படும் துயரங்களை ) நேரில் சந்திக்காமல் போவது ஏனோ ? ( வெள்ளத்தில் மக்கள் சிக்கி தவித்த போது இது தான் நடந்தது )


பயணம் துவக்கம்< அதைத் தொடர்ந்து, கடலுார் மாவட்டம், விருத்தாசலம்; தர்மபுரி; விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஆகிய இடங்களில், அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்துள்ளார்.
அனைத்து இடங்களிலும், பொதுக்கூட்டம் நடந்த இடத்திற்கு, கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அழைத்து வரப்பட்டனர். ஜெயலலிதா, மாலை, 3:00 மணிக்கு வர உள்ள நிலையில், காலை, 10:00 மணிக்கே, ஆட்களை கொண்டு வந்து, நாற்காலியில் அமர வைத்தனர்.
விருத்தாசலத்தில், வெயிலில் மயங்கி, இருவர் இறந்தனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும், மாலை இருள் சூழ்ந்த பிறகு, ஹெலிகாப்டரில்

செல்ல முடியாது என்பதால், ஜெயலலிதாவின் தேர்தல் பிரசார நேரம் மாற்றப்படவில்லை.
அவர் பேசிய அனைத்து இடங்களிலும், அரசு அளித்த வாக்குறுதிகள், நிறைவேற்றிய திட்டங்கள் போன்றவற்றை பட்டியலிடுகிறார். அதன்பின், அவர் அறிமுகப்படுத்தும் வேட்பாளர்களின் தொகுதிகளில், மேற்கொள்ளப்பட்ட பணிகளைபட்டியலிடுகிறார்.கடைசி சட்டசபை கூட்டத்தொடர் வரை, தமிழகத்தில் பூரண மதுவிலக்கு சாத்தியமல்ல என அறிவித்து விட்டு, தற்போது தேர்தலுக்காக, மீண்டும் ஆட்சிக்கு வந்தால், படிப்படியாக பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என, ஜெயலலிதா கூறுவதை, மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

மக்கள் சோர்வு


மேலும், அவரது பேச்சில் உத்வேகம் இல்லாததும், ஏற்கனவே செய்ததாக கூறிய பணிகளை பட்டியலிடுவதும், மக்களை சோர்வடைய செய்கின்றன. கடந்த முறை இருந்த எழுச்சி, தற்போது இல்லை. ஜெயலலிதா மட்டும் மேடையில் அமர்வதும், வேட்பாளர்கள் அனைவரும், மேடைக்கு கீழே அமர வைக்கப்படுவதும், விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளன. அவரை காண வரும் மக்கள், உச்சி வெயிலில் பரிதவிக்க, அவர் 'ஏசி' இயந்திரங்கள் சூழ அமர்ந்து, எழுதி வைத்திருப்பதை படிப்பது, மக்களிடம் எடுபடவில்லை. அவரது பிரசார பொதுக்கூட்டம், மக்களை கவர்வதற்கு பதில், மக்களிடம்
அதிருப்தியை தோற்றுவித்து உள்ளது. இதனால், அ.தி.மு.க.,வினர் என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்து வருகின்றனர்.

ஆள் சேர்க்க முடியாமல் திணறல்

சேலம், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 17 தொகுதிகளின் வேட்பாளர்களை< ஆதரித்து, சேலம் - சங்ககிரி சாலை, மகுடஞ்சாவடி. அருகே உள்ள, கூத்தாண்டிபாளையத்தில், வரும், 20ம் தேதி, மாலை, 3:00 மணிக்கு, முதல்வர் ஜெயலலிதா பிரசாரம் செய்கிறார்
கூட்டம் நடக்கும் இடம், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய திறந்தவெளி பகுதி. அங்கு, மரங்கள் அதிகம் இல்லாததால், வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். சில நாட்களாக, வெயிலின் அளவு, 105 டிகிரியாக உள்ளது. மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால், வெயிலின் கொடுமை தாங்காமல், பலர் வீட்டை விட்டு வெளியே செல்லவே தயங்குகின்றனர்.
இந்நிலையில், ஜெயலலிதா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்றால், குறைந்தது, 4 மணி நேரமாவது, அங்கு இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. வெயிலுக்கு ஒதுங்க நிழல் கிடையாது.
இதனால், அ.தி.மு.க.,வினர் அழைத்தாலும், கூட்டத்திற்கு செல்வதை பலர் தவிர்த்து வருகின்றனர். பெரும்பாலும், கிராமப்பகுதிகளில் இருந்தே அதிகம் பேர் அழைத்து வரப்படுவர். தற்போது, அவர்களும் வர முடியாது என கைவிரிப்பதால், சேலம் மாவட்ட நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளனர்.- நமது சிறப்பு நிருபர் -  தினமலர்.com

கருத்துகள் இல்லை: