புதன், 20 ஏப்ரல், 2016

பெங்களூரில்.கலவரம்.....பி.எப்., கட்டுப்பாட்டுக்கு எதிராக போராட்டம்



பஸ்கள் எரிப்பு, போலீஸ் ஸ்டேஷன் சூறை பெங்களூரு,: பி.எப்., எனப்படும் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில், பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வருவதைக்கண்டித்து, பெங்களூரில், 'கார்மென்ட்ஸ்' தொழிலாளர்கள் நடத்தியப் போராட்டத்தில் கலவரம் வெடித்தது. பஸ்கள் தீவைக்கப்பட்டன; போலீஸ் ஸ்டேஷன் சூறையாடப்பட்டது. சமூக பாதுகாப்பு திட்டமான, பி.எப்., எனப்படும் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை, பிப்ரவரி, 10ம் தேதி முதல் அறிமுகம் செய்யப்படும் என, மத்திய அரசு அறிவித்திருந்தது. பலத்த எதிர்ப்பைத் தொடர்ந்து, இது ஏப்ரல், 30ம் தேதி வரை நிறுத்திவைக்கப்பட்டது.
 இந்த புதிய கொள்கைக்கு, நாடு முழுவதும், பல்வேறு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள பல்வேறு கார்மென்ட்ஸ் நிறுவனங்களில், 12 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர்.

விரட்டியடிப்பு:மத்திய அரசின் புதிய கொள்கையால், தங்களுக்கு மிகப் பெரிய பாதிப்பு ஏற்படும் என, கடந்த இரு தினங்களாக, ஆயிரக்கணக்கான கார்மென்ட்ஸ் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.நேற்று காலை, 6:30 மணிக்கு, பெங்களூரு பொம்மனஹள்ளியில் போராட்டம் துவங்கியதும், போலீசார் அவர்களை விரட்டியடித்தனர். பின், காலை, 10:00 மணிக்கு சிங்கசந்திராவில் போராட்டத்தை துவக்கினர். அவர்களையும் போலீசார் விரட்டியடித்தனர். இதையடுத்து, பெங்களூரு ரூரல் பகுதி யிலிருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர் ஹெப்பகோடி போலீஸ் நிலையம் முன்பாக போராட்டத் தில் ஈடுபட்டனர்.

தடியடி நடத்தியதால், ஆத்திரமடைந்த தொழிலாளர்கள், போலீசார் மீது கற்களை வீசினர். வளாகத்தில் இருந்த, 10க்கும் மேற்பட்ட போலீஸ் வாகனங்கள் சேதமடைந்தன. பல வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. போலீஸ் ஸ்டேஷனையும், போராட்டக்காரர்கள்
சூறையாடினர். இதில் பல போலீசார் காயமடைந்தனர்.

இதையடுத்து, கர்நாடக மாநில ரிசர்வ் போலீசார் வரவழைக்கப்பட்டனர். பின், போராட்டக்காரர்களை எச்சரிக்கும் வகையில், வானத்தை நோக்கி, 70 முதல், 80 ரவுண்டு சுட்டனர். சிறிது நேரம் அமைதியாக இருந்த போராட்டக்காரர்கள், மீண்டும் கோபமடைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதே போன்று மைசூரு ரோடு நாயண்டஹள்ளி, துமகூரு ரோடு, பீன்யா தொழிற்பேட்டை, ஜாலஹள்ளி கிராசில் தொழிலாளர்கள் சாலை மறிய லில் ஈடுபட்டனர்.பெங்களூருசிர்சி சர்க்கிளிலிருந்து சுதந்திர பூங்கா வரை ஊர்வலம் புறப்பட்ட தொழிலாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். ஏராளமான அரசு பஸ்கள் சேதமடைந்தன. மேலும், மூன்று பஸ்கள், ஒரு போலீஸ் வேனுக்கு தீ வைக்கப்பட்டன.

இந்தப் போராட்டம் மற்றும் வன்முறையால், பெங்களூரு வில் சாலை மற்றும் மெட்ரோ போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கர்நாடகா - - தமிழகம் தேசிய நெடுஞ்சாலையில், ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஓசூரில் 100 பஸ்கள் நிறுத்தம்:பெங்களூரில் நடந்த போராட்டம் காரணமாக, தமிழகத்தில் இருந்து ஓசூர் வழியாககர்நாடக மாநிலத்துக்கு செல்லும், 100க்கும் மேற்பட்ட பஸ்கள், ஓசூரில் நிறுத்தப்பட்டன.மாலையில் பதற்றம் சற்று தணிந்ததை அடுத்து, படிப்படியாக பஸ்கள் இயக்கப்பட்டன.

நிருபர் மீது தாக்குதல்:போராட்டம் நடத்திய, கார்மென்ட்ஸ் பெண் ஊழியரை, போலீசார் தாக்கினர். இதை படம் எடுத்த, நமது நிருபர் அர்வின் குமாரை, அங்கிருந்த, போலீஸ் எஸ்.ஐ.,யும், ஏட்டும் தாக்கினர். அடையாள அட்டையை காண்பித்தும், அதை பறித்து வைத்து கொண்டு, தலையில் அடித்து, கழுத்தை பிடித்து தள்ளியதில், அவரது சட்டை கிழிந்தது. படம் பிடித்த மொபைல் போனையும் பிடுங்கிக் கொண்டனர்.

அதன் பின்னர், அவரை ஹெப்பகோடி போலீஸ் நிலையத்தில் பல மணி நேரம் அமர வைத்தனர். ஆபாச வார்த்தைகளாலும் திட்டினர். தகவலறிந்த உயர் போலீஸ் அதிகாரிகள் சிலர், ஹெப்ப கோடி போலீஸ் நிலையத்துக்கு வந்து தலையிட்டதைத் தொடர்ந்து, அவர் விடுவிக்கப்பட்டார்.

பி.எப்., பணம் தப்பியது!: நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பலத்த எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து, புதிய பி.எப்., கொள்கையை திரும்பப் பெறுவதாக, மத்திய அரசு நேற்று மாலை அறிவித்தது. இதனால், கோடிக்கணக்கான சந்தாதாரர்கள் பயனடைவர்.

பி.எப்., கணக்கில் உள்ள பணத்தை, சந்தாதாரர்கள் முன்கூட்டியே எடுப்பதற்கு, பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, புதிய கொள்கையை மத்திய அரசு கொண்டு வந்தது. பிப்., 10ம் தேதி முதல், அமலாகும் என அறிவிக்கப்பட்ட இந்த கொள்கை, பலத்த எதிர்ப்பை தொடர்ந்து, ஏப்., 30ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

நாடு முழுவதும் எழுந்த கடும் எதிர்ப்பு மற்றும் போராட்டங்களை தொடர்ந்து, ஜூலை 31ம் தேதி வரை ஒத்திவைப்பதாக, நேற்று காலையில் அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், ''கட்டுப்பாடுகள் விதிக்கும் புதிய கொள்கை திரும்பப் பெறப்படுகிறது,'' என, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாருதத்தாத்ரேயா, நேற்று மாலை அறிவித்தார்.

இதுகுறித்து, அவர் கூறியதாவது:பல்வேறு தொழிற்சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, இந்த புதிய கட்டுப்பாட்டு கொள்கை திரும்பப் பெறப்படுகிறது; பழைய முறையே தொடரும்.
இவ்வாறு தத்தாத்ரேயா கூறினார்.

சர்ச்சையான கொள்கை:
சர்ச்சையை ஏற்படுத்திய, புதிய கொள்கையில் கூறப் பட்டி ருந்த முக்கிய அம்சங்கள்:
* தொடர்ந்து இரண்டு மாதங்கள் வேலையில் இல்லாதவர்கள் உள்ளிட்டோர், பி.எப்., தொகையை முழுவதுமாக எடுப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது
* சந்தாதாரர் செலுத்தும் பணம் மற்றும் அதற்கான வட்டியை மட்டுமே திரும்ப பெற முடியும். நிறுவனங்கள் செலுத்தும் பணத்தை, 58 வயதில் தான் பெற முடியும்
* சந்தாதாரர்கள், 54 வயதை பூர்த்தி செய்யும்போது, மொத்த பி.எப்., தொகையில் இருந்து, 90 சதவீதத்தை எடுத்துக் கொள்ளலாம். மீதி தொகையை, 58 வயதில்தான் பெற முடியும்.

கருத்துகள் இல்லை: