செவ்வாய், 19 ஏப்ரல், 2016

2 நாட்களில் சசிகலா தரப்பு வாதம் நிறைவு.. தேர்தலுக்கு முன்பு, சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு?

டெல்லி: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் விரைவில் தீர்ப்பு தேதியை சுப்ரீம்கோர்ட் அறிவிக்க வாய்ப்புள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை கர்நாடக ஹைகோர்ட் விடுதலை செய்ததை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.  இவ்வழக்கில் முதலில் கர்நாடக தரப்பு வாதம் நடைபெற்றது. ஆச்சாரியா, தாவே போன்ற மூத்த வழக்கறிஞர்கள் கர்நாடக தரப்பு வாதத்தை முன் வைத்தனர். இதையடுத்து ஜெயலலிதா தரப்பில் நாகேஷ்வரராவ் வாதம் செய்தார். ஜெயலலிதா தரப்பு வாதம் நிறைவடைந்த நிலையில், இன்று சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் சார்பில் சேகர் நாப்தே தனது வாதத்தை முன்வைத்து வருகிறார்.  
இவர் தனது வாதத்தை வரும் வியாழக்கிழமை முடிக்க உள்ளதாக இன்று கோர்ட்டில் தெரிவித்தார். இதையடுத்து, கர்நாடக தரப்பு மீண்டும், பதில் வாதம் செய்ய நீதிபதி அவகாசம் தருவார். இந்த பதில் வாதத்தை, வெள்ளிக்கிழமையோ அல்லது சில நாட்கள் கழித்தோ கர்நாடகா முன்வைக்க முடியும். இந்த வாதம், எழுத்துப்பூர்வமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேரில் வாதிடவும் குறுகிய கால அளவில் வாய்ப்பு தரப்படலாம் எனவும், தெரிகிறது. இதன்பிறகு தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும். அநேகமாக அடுத்த வாரத்தில், தீர்ப்பு தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக, வழக்கில் தொடர்புள்ள வக்கீல்கள் சிலர் தெரிவிக்கிறார்கள். மே 16ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தீர்ப்பு அதற்கு முன்பே வெளியாக வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.

Read more at://tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: