புதன், 20 ஏப்ரல், 2016

விசிக 2-வது பட்டியல்: திருமாவளவன் காட்டுமன்னார் கோவிலில் போட்டி

ஆர்.கே.நகரில் தேமுதிக மக்கள் நலக் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மோதிரம் சின்னத்தில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவி போட்டியிடுவார் என அக்கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.
தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி- தமாகா அணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஏற்கெனவே 11 தொகுதிகளுக்கு அக்கட்சி வேட்பாளர்களை அறிவித்துவிட்டது.
இந்நிலையில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், "ஆர்.கே.நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மோதிரம் சின்னத்தில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை முன்னாள் துணை வேந்தர் வசந்தி தேவி போட்டியிடுவார். இவர் பொது வேட்பாளராக களம் காண்கிறார்.

மோதிரம் சின்னத்தில் போட்டியிட்டாலும் அவர் மக்கள் நலக் கூட்டணியின் பொது வேட்பாளரே. காட்டுமன்னார் கோவிலில் நான் போட்டியிடுகிறேன். 15 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப்பேரவை தேர்தலில் நான் போட்டியிடுகிறேன்" என்றார்.
முதல்வரை எதிர்ப்பதே முழு காரணம் அல்ல:
ஆர்.கே.நகரில் முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுவதால் அவரை எதிர்ப்பதற்காகவே விடுதலை சிறுத்தைகள் அத்தொகுதியில் போட்டியிடுகிறதா என நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்த திருமாவளவன், "முதல்வரை எதிர்ப்பதற்காக மட்டுமே ஆர்.கே.நகர் தொகுதியில் நாங்கள் போட்டியிடவில்லை.
எங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் 8 தொகுதி பொதுத் தொகுதி. அதில் ஆர்.கே.நகரும் ஒன்று. முதல்வரை எதிர்க்க வேண்டும் என்பதைவிட மாற்றத்தை ஏற்படுத்தவே அத்தொகுதியில் போட்டியிடுகிறோம்" என்றார்.
3 புள்ளிகளில் இணைந்த கூட்டணி
திருமாவளவன் மேலும் கூறும்போது, "ஊழல் ஒழிப்பு, மது ஒழிப்பு, கூட்டணி ஆட்சி என்ற மூன்று புள்ளிகளில் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி- தமாகா அணி இணைந்துள்ளது. பிஹாரில் ஒரே நாளில் பூரண மதுவிலக்கு அமலாகியுள்ளது. தமிழகத்தில் படிப்படியாக மட்டுமே சாத்தியம் என்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால் தமிழகத்தில் தேமுதிக - மநகூ - தமாகா கூட்டணி ஆட்சி அமைத்தால் பூரண மதுவிலக்கு அமலாகும்" என்றார்.
'பழிவாங்கும் நடவடிக்கை'
திமுக தலைவர் கருணாநிதியை விமர்சித்தது தொடர்பாக மக்கள் நலக்கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ விளக்கமளிக்குமாறு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், "சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் தேர்தல் ஆணையம் தன்னியல்பாக இதுபோல் நோட்டீஸ் அனுப்பியிருப்பது இதுவே முதல் முறை என தோன்றுகிறது. வைகோ ஏற்கெனவே வருத்தம் தெரிவித்துவிட்ட நிலையில் இந்த நோட்டீஸ் தேவையில்லாத நடவடிக்கை, பழிவாங்கும் போக்கு" என்றார். /tamil.thehindu.com

கருத்துகள் இல்லை: