அது பற்றி கவலைப்படாத அ.தி.மு.க தரப்பிலோ, பத்து கோடியில் இரண்டு கோடி ரூபாய் பிரச்சார செலவுக்காக பயன் படுத்தப்படும் என்கிறார்கள். இதில் கணிசமான பணம் ஜெ.வின் பிரச்சாரக் கூட்ட செலவுகளுக்காக பயன்படுத்தப்படும். இரண்டு கோடியில் மிச்சமிருக்கும் தொகையை வேட்பாளர், தேர்தல் திருவிழாவில் திரளும் அ.தி.மு.க. வினருக்கு கொடுக்க வேண்டும். அதில் பொதுக்கூட் டம், தெருமுனைக்கூட்டச் செலவுகள் உள்ளிட்டவை அடங்கும். இந்தச் செலவுகளை ஒவ்வொரு குக்கிராம
அளவிலும் கண்காணிக்க பூத் கமிட்டிகள் இயங்கு கின்றன. இந்தக் கமிட்டிகள் ஒன்றிய அளவில்- மாவட்ட அளவில் அமைக்கப்பட்ட மேல் கமிட்டிகள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. இவை அனைத்தையும் மாநில அளவில் சசிகலா கண்காணிக்கிறார்.
ஒரு நபருக்கு ரூ.500அ.தி.மு.க.வின் இத்தகையத் தேர்தல் களச் செயல்பாட்டை ஜெ.வின் பிரச்சார பொதுக்கூட் டம் நடந்த தர்மபுரியில் நாம் நேரில் காண முடிந்தது. பொதுக்கூட்டத்திற்காக கிட்டதட்ட 1300 பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களில் சுமார் 52,000 பேர் திரட்டப்பட்டனர். தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலிருந்தும்
சராசரியாக 50 பேர் வீதம் அழைத்து வரப்பட்டனர். ஒரு வாகனத்துக்கு வாடகை 15,000 ரூபாய் என்ற அளவில் செலவுக் கணக்கு கொடுத்துள்ளனர் அ.தி.மு.க.வினர். அதன்படி 2 கோடி ரூபாய் வாகனங்களுக்கு செலவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வாகனங்களில் அழைத்துவரப்படு வோருக்கு சாப்பாட்டுச் செலவு, குடிதண்ணீர் செலவு, கையில் கொடுக்கும் பணம் என தலைக்கு 500 ரூபாய் செலவு செய்ய அ.தி.மு.க. தலைமை அனுமதித்துள்ளது. அதன்படி சுமார் மூன்றரை கோடி ரூபாயை மாவட்ட தேர்தல் கமிட்டி, ஒன்றிய தேர்தல் கமிட்டி மூலம் பூத் கமிட்டி களுக்கு வழங்கியுள்ளது அ.தி.மு.க. தலைமை. இப்படி ஜெ. கூட்டத்துக்கு ஆட்களைத் திரட்ட மட்டும் ஐந்தரை கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதை நம்மிடம் பேசிய அ.தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகள் தெரிவித்தார்கள். ஒதுக்கப்பட்ட பணம், எந்த வகையில் செலவிடப்படுகிறது என்பதை அறிய தர்மபுரி மாவட்டத்தின் நாயக்கன்கொட்டாய் கிராமத்தின் சுற்றுப் புறங்களில் களமிறங்கினோம்.
பூத் கமிட்டி வாரியாக விநியோகம் நாம் சந்தித்த அ.தி.மு.க.வின் கிராமப்புற பூத் கமிட்டித் தலைவர்களெல்லாம் 12-ந் தேதி இரவே ஒவ்வொரு கிராமத்திற்கும் வாகனங்கள் தயார் என மாவட்ட வி.ஐ.பி.யான முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல் தெரிவித்துவிட்டார் என்றனர்.
கிருஷ்ணகிரி மா.செ.வான கோவிந்த ராஜும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனு சாமியும் அந்த மாவட்டத்திற்கானப் பேருந்து களை ஏற்பாடு செய்ததாகத் தெரிவித்தார்கள். கூட்டத்திற்கு ஆட்களை அழைத்து வருவதற்காக மதியம் 12 மணிக்கே வாகனங்கள் அந்தந்த கிரா மங்களுக்கு வந்துவிடும் என்றும் அவர்களிடம் சொல்லப்பட்டிருந்தது. கூட்டத்திற்கு வரும் ஆட்களுக்கான செலவான தலைக்கு 500 ரூபாய் 12-ஆம் தேதி இரவு பூத் கமிட்டி தலைவர்களுக்கு பல்வேறு ஆட்கள் மூலம் தரப்பட்டதையும் தெரிவித்தனர் பூத் கமிட்டி உறுப்பினர்கள்.
தி.மு.க., பா.ம.க., கம்யூனிஸ்ட் போன்ற எதிர்க்கட்சிகள் பலமாக உள்ள இந்த மாவட்டங்களில் அவர்களின் எதிர்ப்பு ஏதுமின்றி, தேர்தல் கமிஷனையும் ஏமாற்றியபடி ஒவ் வொரு கிராமத்திலுள்ள பூத் கமிட்டி நிர்வாகிகளிடம் சுமார் மூன்றரை கோடி ரூபாய் எந்த சப்தமும் இல்லாமல் இரண்டு மாவட் டங்களில் உள்ள கிராமங்களுக்கு போய்ச் சேர்ந்திருப்பதை நாம் நேரடியாக அறிய முடிந்தது. கட்சித் தலைமை கொடுத்த தொகையை அ.தி.மு.க.வினர் வெற்றிகரமாக அந்த கிராமத் திலிருந்து பொதுக்கூட்டத்திற்கு அழைத்துவரும் மக்களுக்கு செலவு செய்ததையும் நம்மால் புகைப்பட ஆதாரத்துடன் திரட்ட முடிந்தது.
கமகம பிரியாணி-கையில் நோட்டுதர்மபுரி மாவட்ட முன்னாள் அமைச்சர் அன்பழகனின் சொந்த ஊரான கெரகோடஹள்ளி மற்றும் காரிமங்கலம், பாலக் கோடு, நாயக்கன்கொட்டாய், புளியம்பட்டி, திம்பம்பட்டி ஆகிய கிராமங்கள் பொதுக்கூட்டம் நடந்த 13-ஆம் தேதி காலையில் பிரியாணி வாசத்தில்தான் கண் முழித்தன. மன்னன்கொட்டாயை அடுத்துள்ள போகரஹள்ளி கிராமத்து மக்களுக்காக அ.தி.மு.க.வினர் சமைத்த பிரியாணி விருந்தை நாம் நேரடியாகவே பார்த்தோம். அங்கிருந்த ஒரு கோழிப்பண்ணையின் பின்புறம் மறைவான இடத்தில் ஆயிரம் பேருக்கு சிக்கன் பிரியாணியை, நான்கு அடுப்பு களில் பெரிய பெரிய பாத்திரங்களை வைத்து தயார் செய்து கொண்டிருந்தனர். பிரியாணியை சமைத்து அதை பேக்கிங் செய்து கொண்டிருந்த மாவட்ட வழக்கறிஞர் ஒருவர், "" தேர்தல் கமிஷனின் பார்வையிலிருந்து தப்பிப்பதற்காக ரகசியமாகச் செய்கிறோம். இப்படி சாப்பாடு, தண்ணீர் போன்றவை கொடுத்து கூட்டங் களுக்கு மக்களை அழைத்துவரக் கூடாது என தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. நீங்க போட்டோ புடிச்சுப் போட்டு எங்கள மாட்டி விடாதீங்க'' என்றார் அவர்.
ஆள் பிடிக்கும் டெக்னிக்""கூட்டத்திற்குப் போவதற்கு முன்பு இந்த பிரியாணியை மக்களைச் சாப்பிட வைத்துவிடுவோம்' என்ற அவரிடம், ""இந்தச் செலவெல்லாம் போக, கூட்டத்துக்கு வரும் மக்க ளுக்கு எவ்வளவு பணம் தருவார்கள்'' என கேட்டதற்கு... ""தர்மபுரி மாவட்டம் வறட்சியான மாவட்டம். இங்கு நூறு நாள் வேலை திட்டத் தில் பங்குபெற்றால் ஆள் ஒன்றுக்கு 130 ரூபாய் என கொடுப்பார்கள். அதைக் கொடுத்தாலே எங்கள் மக்கள் எங்கு அழைத்துச் சென்றா லும் வருவார்கள். இந்தப் பொதுக் கூட்டத்திற்கு 100-ல் இருந்து 200 ரூபாய் வரை தருவோம். 50 ரூபாய் பிரியாணிப் பொட்டலம், 40 பேருக்கு 2 மூட்டை தண்ணீர் பாக்கெட் என நபர் ஒருவருக்கு அதிகபட்சம் 300 ரூபாய் செலவு செய்வோம். 500 ரூபாயில் 200 ரூபாயை கிளைக்கழக செயலாளர் தேர்தல் செலவுக்காக ஒதுக்கி வைத்துக்கொள்வார்'' என்று மேல்மட்டத்திலிருந்து கொடுக்கும் பணத்தை அடிமட்ட நிர்வாகிகள் கணக்காக செலவு செய்யும் ரகசியத்தை போட்டுடைத்தார் அந்த அ.தி.மு.க.காரர்.புளியம்பட்டியில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டி ருந்த வாகனத்தில் மதியம் 1 மணி வரை ஏற ஆட்கள் வரவில்லை. ""இதே மாம்பழக் கட்சிக்காரங்க (பா.ம.க.) இந்தப் பகுதியில் பொதுக் கூட்டம் நடத்துனா இந்த வண்டி யெல்லாம் பத்தாது. குடும்பம் குடும்பமா கிளம்பிப் போவோம். அவங்க காசெல்லாம் தரமாட்டாங்க. சாப்பாடு, தண்ணி மட்டும்தான் தருவாங்க. அதுக்கே அவ்வளவு ஜனம் போகும். அ.தி.மு.க. வண்டியில போறவங்க எல்லாம் அ.தி.மு.க. காரங்க இல்ல. இலைக்கு ஓட்டுப் போடுறவங்களுமில்லை. காசு கொடுக் குறாங்க, போறாங்க அவ்வளவு தான்'' என்றனர் அந்த ஊர் இளைஞர்கள்.
புளியம்பட்டி, குறிஞ்சிப்பட்டி போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் திரட்டப்பட்ட மக்கள் பலருக்கு அ.தி.மு.க. துண்டு களை இலவசமாக அளித்து தற்காலிக அ.தி.மு.க.வினராக மாற்றியதோடு பெண்களுக்கு பச்சை நிறத்தில் இலை யுடன் ஜெ. படம் போட்ட தொப்பியும் அளித்து கூட்டத்திற்கு வாகனங்களில் ஆடு, மாடுகளைப் போல அழைத்து வந்தார்கள் அ.தி.மு.க.வினர்.கூட்டத்துக்கு போகும் வழியில் அங்கங்கே மரநிழலில் நிறுத்தி, சாப்பாடு பொட்டலங்களை கொடுத்தனர். பெண்கள் உடனடியாக சாப்பிட்ட னர். பொதுக்கூட்ட மைதானத்தில் வாகனத்தை நிறுத்தியபோது, பொதுமக்களுக்கு தலைக்கு நூறு, இருநூறு என பணம் கொடுத்தார்கள், ஒவ்வொரு கிராம அ.தி.மு.க. நிர்வாகிகள். அதை வாங்கிக் கொண்ட பெண்கள், மொட்டை வெயிலில் போடப்பட்டிருந்த நாற்காலிகளை நோக்கிச் செல்ல, ஆண்களோ கையில் பிரியாணி பொட்ட லத்துடன் அருகிலிருந்த ஒயின்ஷாப்புகளில் குவிந்து அதகளம் செய்தனர்.
குளுகுளு ஜெ- கோடை வெயிலில் மக்கள்தர்மபுரியிலிருந்து பென்னாகரம் செல்லும் சாலையில், கடந்த வருடம் +2 வினாத்தாள்களை லீக் செய்தார்கள் என பரபரப்பாக காவல்துறை யின் விசாரணைக்குள்ளான டி.என்.எல்.ஓட்டல் வளாக உரிமையாளர்களுக்கு சொந்தமான இடத்தில் 18 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப் பட்ட கான்கிரீட் ஹெலிகாப்டர் தளத்தில் சரியாக 2.15 மணிக்கு 2 ஹெலிகாப்டர்கள் வந்து இறங்கின. அதில் இரண்டாவதாக வந்த ஹெலிகாப்டரி லிருந்து இறங்கினார் ஜெ.
ஹெலிபேடில் ஜெ.வை சந்திக்க காரில் வந்த தம்பிதுரையை 2,500 போலீசார் அடங்கிய படையுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்த ஏ.டி.ஜி.பி. திரிபாதி, "உங்களது பெயர் வரவேற் பாளர்கள் லிஸ்டில் இல்லை. வேண்டுமென்றால் இறங்கி நடந்துசெல்லுங்கள்' என தடுத்து நிறுத்தி, உத்தரவிட... சுட்டெரிக்கும் வெயிலில் ஓட்டமும் நடையுமாக போய் ஜெ.வை வரவேற்றார் தம்பிதுரை. கொளுத்தும் கோடைவெயிலின் தாக்கம் கொஞ்சமும் தெரியாதபடி குளுகுளு வசதி செய் யப்பட்ட மேடைக்கு வந்தார் ஜெ. குளிர்காற்று படும்படி சசிகலா அமர வைக்கப்பட்டிருந்தார். சமீபத்தில் பதவி பறிக்கப்பட்ட மாஜி ஐவரணி பழனியப்பன் தனது மனைவி மற்றும் அம்மாவுடன் ஜெ.வின் பார்வையில் படும்படி எதிரில் வெயிலில் அமர்ந்திருந்தார். கூட் டத்திற்கு கொண்டு வரப்பட்ட மக்கள் மயக்கம் அடையும் அளவுக்கு முகத்தில் வெயில் அடித்தது. ஜெ.வின் பார்வையில் படும்படி அமர்ந் திருந்த கிருஷ்ணகிரி மாவட்ட மகளிரணி யினர் மட்டும் ஜெ.வின் பேச்சுக்கு கைதட்டி கொண்டிருந்தனர். 12 மணி முதல் ஜெ. வரும் வரை சுட்டெரிக்கும் வெயிலில், கம்பித் தடுப்புகளுக் கிடையிலான நாற்காலிகளில் உட்காரவைக்கப்பட்டு தவித்துக்கொண்டிருந்த மக்கள், ஜெ. பேச ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் தடுப்புகளை உடைத்து வெளியே போக ஆரம்பித்தார்கள். கிட்டதட்ட பாதி கூட்டம், தங்களை அழைத்துவந்த வாகனங்களை நோக்கி நகர்ந்தது.
விருத்தாசலம் கூட்டத்தில் மக்களது அசைவு களை போலீசார் தடுத்ததால் 2 பேர் மரணம் அடைந்தார்கள். 20-க்கும் மேற்பட்டோர் நெரிசலில் சிக்கி காயமடைந்தார்கள். அதனால் தர்மபுரி கூட்டத்தில் வெளியே போக விரும்பும் மக்களை தடுக்க வேண்டாம் என ஏ.டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டார். மக்கள் கலைந்து கொண்டிருந்த நிலையில் ஜெ.வின் பேச்சில் அ.தி.முக. அரசின் சாதனைகளை பற்றிய விவரங்கள் அதிகம் இடம் பெற்றன. சொன்னதை செய்தேன், சொல்லாத தையும் செய்தேன் என அவர் கொண்டு வந்த அம்மா பிராண்டுகள் பற்றி வர்ணித் தார். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தைக் கொண்டு வர தி.மு.க. முயற்சி செய்யவில்லை என குற்றம் சாட்டினார். விளைநிலங்கள் வழியாக கெயில் எரிவாயு திட்டம் நடைமுறைப்படுத்த விடமாட் டேன் என உறுதி கூறினார். படிப்படியாக மதுவிலக்கு மற்றும் ஒவ்வொரு சட்டமன்ற வாரியாக நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் பற்றி ஜெ. பேசி முடிக்கும் போது மணி மூன்றரையாகிவிட்டது.
அடுத்த கட்ட விநியோகம்!சசிகலாவோடு ஏ.சி. காரில் ஹெலிபேடு சென்று, ஹெலிகாப்டரில் ஏறினார். மூன்று மணி நேரத்திற்கும் மேலாக வெயிலில் மக்கள் தவித்த நிலையில், ஹெலிகாப்டரின் கதவுகள் மூடப்படும் 2, 3 விநாடிகள்கூட வெயிலின் தாக்கத்தைப் பொறுக்கமுடி யாமல், கையளவு மின்விசிறியைக் கொண்டு, முகத்திற்கு ஜிலுஜிலு காற்று வீச வைத்தார் ஜெ. கையளவு ஃபேனும், ஹெலிகாப்டரின் இறக்கைகளும் சுழல, அது பறக்கும் உயரத்திற்கு தகுந்தபடி அ.தி.மு.க வேட்பாளர்கள் குனிந்தும், நிமிர்ந்தும், அண்ணாந்தும் கும்பிடு போட்டனர்.
பிரச்சாரக் கூட்டம் என்ற பெயரில் பண விநியோகத் தை தொடங்கியுள்ள அ.தி.மு.க மேலிடம், தேர்தல் நாள் நெருங்கும்போது, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க ஒவ்வொரு தொகுதிக்கும் ஒதுக்கப்பட்ட 10 கோடியில் பிரச்சாரத்துக்கான 2 கோடி போக மீதி 8 கோடி ரூபாயை அந்தந்த தொகுதியில் இருக்கும், கார்டனுக்கு நெருக்கமான தொழிலதிபர்களிடம் அனுப்பி வைத்து கடைசி நேரத்தில் கட்சிக்காரர்களிடம் கொடுக்க உத்தரவிட்டுள்ளது என்கிறார்கள் அ.தி.மு.க.வினரே.கோடிக்கணக்கில் செலவு செய்து பொதுக்கூட்டம், கடைசி நேர பண விநியோகம் எனத் திட்டமிட்டு செயல்படும் அ.தி.மு.க.வின் தலைவர்கள் "இதெல்லாம் தேர்தல் கமிஷனுக்கு தெரியும். என்ன பண்ணிட முடியும்' என்கிறார்கள் சவாலாகவே.
-தாமோதரன் பிரகாஷ், வடிவேல்
படங்கள் : ஸ்டாலின்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக