சனி, 4 ஏப்ரல், 2015

ஸ்மிரிதி இரானி உடைமாற்றும் அறையில் கேமராவை கண்டுபிடித்தார்


கோவாவில் உள்ள ஒரு ஜவுளி கடையில் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா இருந்ததை மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கண்டுபிடித்தார். இதுதொடர்பாக போலீசார் கடை மேலாளர் உள்பட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள ரகசிய கேமரா< மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி ஸ்மிரிதி இரானி விடுமுறையில் தனது கணவர் சுபின் இரானியுடன் கோவாவுக்கு சென்றுள்ளார். நேற்று காலை அவர் கண்டோலிம் என்ற இடத்தில் உள்ள ‘பேப் இந்தியா’ என்ற ஜவுளி கடைக்கு உடைகள் வாங்க சென்றார். சில உடைகளை வாங்கிய அவர் அங்குள்ள உடைமாற்றும் அறைக்கு (டிரையல் ரூம்) சென்றார். அப்போது அவர் அந்த அறையில் ஒரு சிறிய ஓட்டையும், அதற்குள் ரகசிய கேமரா மறைத்து வைக்கப்பட்டு இருந்ததையும் கண்டுபிடித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுபற்றி தனது கணவரிடம் தெரிவித்தார்.


போலீசார் விசாரணை

பின்னர் அவர் கோவாவில் உள்ள பாரதீய ஜனதா தலைவரும், எம்.எல்.ஏ.வுமான மைக்கேல் லோபோவுக்கு தொடர்பு கொண்டு விஷயத்தை கூறினார். லோபோ சிறிது நேரத்தில் போலீசாருடன் அந்த கடைக்கு வந்தார். இது தொடர்பாக போலீசில் லோபோ ஒரு புகாரும் கொடுத்தார்.

போலீசார் அந்த அறையை ஆய்வு செய்து அங்கிருந்த ரகசிய கேமராவையும், அந்த கேமராவில் பதிவாகும் காட்சிகளை சேமித்து வைத்துள்ள ஒரு ‘ஹார்டு டிஸ்க்’கையும் கைப்பற்றினார்கள். அந்த கடையின் ஊழியர் ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த கேமரா 4 மாதங்களுக்கு முன் பொருத்தியது தெரியவந்தது. அங்கு பதிவாகும் காட்சிகள் மேலாளர் அறையில் உள்ள கம்ப்யூட்டரில் ஒளிபரப்பாகிறது.

ஆபாச காட்சிகள்

தகவல் கிடைத்து பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்களும் அங்கு விரைந்தனர். மைக்கேல் லோபோ எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி, பேப் இந்தியா கடையில் உடைகள் வாங்க வந்தபோது அங்குள்ள உடைமாற்றும் அறையில் ரகசிய கேமரா இருந்ததை கண்டுபிடித்துள்ளார். அவருக்கு என்னைத் தெரியும் என்பதால் உடனே அவர் தனது கணவரிடம் கூறிவிட்டு, எனக்கு தகவல் தெரிவித்தார்.

இதுதொடர்பாக நான் போலீசில் புகார் கூறியுள்ளேன். அந்த கேமராவில் பதிவான காட்சிகளையும் நாங்கள் சோதித்து பார்த்தோம். அதில் ஏற்கனவே உடை மாற்றிய பலரது வயிற்றுக்கு மேலே உள்ள பகுதிகள் பதிவாகி இருக்கிறது என்று லோபோ கூறினார்.

4 பேர் கைது

போலீசார் கடை ஊழியர் மற்றும் மேலாளர் மீது வழக்கு பதிவு செய்தனர். அந்த கடைக்கு சீல் வைத்து கடை முழுவதும் தீவிரமாக சோதனை நடத்தி வருகிறார்கள். மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி தெரிவித்த தகவல்கள் சாட்சி வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கடை மேலாளர் உள்பட 4 பேரை கைது செய்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

கோவா முழுவதும் உள்ள ஜவுளி கடைகளில் தீவிர சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு உமேஷ் கூறினார்.

முதல்-மந்திரி உத்தரவு

கோவா முதல்-மந்திரி லட்சுமிகாந்த் பர்சேகரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘‘நான் இப்போது பெங்களூரில் இருக்கிறேன். மத்திய மந்திரி ஸ்மிரிதி பற்றிய தகவல் கிடைத்தது. குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகளுடன் நான் தொலைபேசியில் பேசியிருக்கிறேன்’’ என்றார்.

இந்த ஜவுளி கடையில் உடைமாற்றும் அறையில் ரகசிய கேமரா கண்டுபிடிக்கப்பட்டது இது முதல்முறை அல்ல என்றும் கூறப்படுகிறது. மத்திய மந்திரி விழிப்புடன் செயல்பட்டதால் இந்த ஆபத்தில் இருந்து அவர் தப்பியுள்ளார்.

ஆனாலும் ஒரு மத்திய மந்திரியே இதனை நேரடியாக கண்டுபிடித்து அவரது நடவடிக்கையின் பேரில் புகார் செய்யப்பட்டு இருப்பதால் நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  dailythanthi.com/

கருத்துகள் இல்லை: