வியாழன், 2 ஏப்ரல், 2015

தினமும் காவிரியில் 1,400 மில்லியன் லிட்டர் கழிவு நீர் தமிழகத்திற்குள் பாய்கிறது! கர்நாடக அமைச்சரின் ஒப்புதல் வாக்குமூலம்! CRIME

பெங்களூரு: காவிரி நதிநீர் ஆணைய ஒப்பந்தப்படி, தமிழகத்துக்கு காவிரி நீர் அனுப்புவதாக கூறி வரும், கர்நாடகா தற்போது, தினமும் 1,400 மில்லியன் லிட்டர் கழிவு நீரையும், அனுப்பி வருவதாக, அம்மாநில மேலவையில் நீர்ப்பாசன துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி கூறியது சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. இதுகுறித்து அமைச்சர் சிவராஜ் தங்கடகி கூறுகையில், பெங்களூருவிலுள்ள தனியார் நிறுவனங்கள், குடியிருப்பு பகுதிகளில் நாள்தோறும் குடிநீர் குழாய்கள், போர்வெல்கள் மூலமாக, 1,950 மில்லியன் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தி வருகின்றன. இதில், 1,482 மில்லியன் லிட்டர் தண்ணீர், கழிவு நீராக பல்வேறு வகையில் ஆறுகள், கால்வாய்கள் வழியாக தமிழகத்துக்குள் செல்கின்றன. தமிழகத்துக்கு ஆறுகள், கால்வாய்கள் மூலம் வீணாக செல்லும் கழிவு நீரையும் மறுசுழற்சி மூலம் சுத்தப்படுத்தி, கோலார், சிக்பல்லாபூர் மாவட்டங்களிலுள்ள வறண்ட ஏரிகளுக்கு திசை திருப்பி அவற்றை நிரப்பி பயன்படுத்தவும், கர்நாடகா அரசு திட்டமிட்டுள்ளது. காவிரியில் கர்நாடகா கழிவு நீரை அனுப்புவதாக அம்மாநில அமைச்சரே வெளிப்படையாக கூறியுள்ளது தமிழக விவசாயிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தினமலர்.com

கருத்துகள் இல்லை: