மலையும் மலையும் சார்ந்த இடமும் எதுவென்று
கேட்டால் குறிஞ்சி என்று சொல்வோம். பாலும் பால் சார்ந்த இடமும் எதுவென்று
கேட்டால் என்ன சொல்வீர்கள்? பார்ப்பனியம் என்று சொல்கிறது தேசிய மாதிரி
ஆய்வு கழகம் (National Sample Survey Organization). இதுபற்றிய செய்தி,
இந்து ஆங்கில நாளேட்டில் 19-03-2015 அன்று “உண்ணும் உணவை சாதியும்
தீர்மானிக்கிறது” எனும் தலைப்பில் வெளிவந்திருக்கிறது
பால் பொருட்களுக்கான நுகர்வு பார்ப்பன ஆதிக்க சாதிகளிடையேதான் மிகுந்து காணப்படுகிறது.
குறிப்பாக பாலும் பால் சார்ந்த பொருட்களுக்காகவும் ஒவ்வொரு சாதிகளும் செலவிடும் தொகையைக் கணக்கிடுற பொழுது, மாதம் ஒன்றுக்கு தனிநபர் செலவினமாக, கிராமப் புறங்களில் சீர் மரபினர் 61 ரூபாயும், பட்டியல் வகுப்பினர் 89 ரூபாயும், பிற்படுத்தப்பட்ட சாதிகள் 119 ரூபாயும் உயர் சாதிகள் 156 ரூபாயும் செலவிடுகின்றனர். இதே நகர்ப்புறமாக இருக்கிற பொழுது, சீர் மரபினர் 122 ரூபாயும், பட்டியல் வகுப்பினர் 140 ரூபாயும், பிற்படுத்தப்பட்ட சாதிகள் 154 ரூபாயும் உயர் சாதிகள் 154 ரூபாயும் செலவிடுகின்றனர்.
சுருக்கமாகப் பார்க்கிற பொழுது கிராமப்புறங்களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் உயர் சாதிகள் மட்டுமே பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களுக்காக ஒட்டு மொத்த தாழ்த்தப்பட்டவர்களின் செலவிடும் தொகையைச் செலவிடுகின்றனர். நகர்ப்புறங்களில் வாழ்வியல் சூழ்நிலைகள் கிராமங்களை விட வேறாக இருப்பினும் பால் பொருட்களுக்கான நுகர்வு பார்ப்பன ஆதிக்க சாதிகளிடையேதான் மிகுந்து காணப்படுகிறது.
வெண்ணெய் திருடித்தின்ற யாதவ குலத்து கிருஷ்ணனின் பெயரில் இயங்கும் ஸ்ரீ கிருஷ்ணா இனிப்பகம் ஹை கிளாஸ் பார்ப்பனர்களுக்காக பிரேத்யகமாக நேந்துவிடப்பட்ட ஒன்று. இதுதவிர “கும்பகோணம் டிகிரி காப்பியின் ரகசியம் தெரியுமா?” என்று பஞ்சாமி ஐயரின் சிறப்பு குறித்து மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு மகாமத்யமே பாடி இருக்கிறது. ஏழை ஆதிக்க சாதிகள் என்றாலும் அம்மையப்ப முதலியார்-கோதாவரி குடும்பம், காபி பொடி டப்பாவைச் சுரண்டுவதைக் காட்டுவதன் மூலமாக 80-களில் வெளிவந்த படங்கள் பார்ப்பனிய பண்பாட்டைக் கச்சிதமாக நிறுவி வந்திருக்கின்றன. மற்றபடி பலகாரம் சாப்பிட்டு நரசுஸ் காபி குடிக்கிற பேஷ் பேஷ் சாதிகளைத்தவிர மற்றவர்களுக்கு நீச்சத்தண்ணிதான் நீராகாரம்!
ஆக தாழ்த்தப்பட்டவர்கள் என்று வருகிற பொழுது பால் மற்றும் பால் சார் பொருட்கள் ஆதிக்க சின்னமாகத்தான் இருக்கிறது.
சான்றாக அம்பேத்கர் “சாதியை ஒழிப்பது எப்படி?” எனும் நூலில் தலித்துகளுக்கு இழைக்கப்படும் கொடுமை என்று கீழ்கண்ட சம்பவத்தை முன்வைப்பார்;
“ஜெய்ப்பூர் சமஸ்தானத்தில் சக்வாராவில் மிக சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்தது. தீர்த்த யாத்திரை சென்று வந்த தீண்ட்த்தகாதவர் ஒருவர் தன்போன்ற இதர தீண்டத்தகாதவர்களுக்காக ஒரு மதக் கடமையாக சிறப்பான விருந்து ஒன்றை ஏற்பாடு செய்தார். விருந்திலே பறிமாறப்பட்ட பலவித உணவுகளில் நெய்யும் ஒன்று. என்ன நடந்தது தெரியுமா?
தீண்டத்தகாதோர் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது நூற்றுக்கணக்கான இந்துக்கள் தடிகளோடு அந்த இடத்துக்கு விரைந்தனர். உணவைக் கொட்டிக் கவிழ்த்தனர். சாப்பிடுவதை விட்டுவிட்டு தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடியவர்களை நையப்புடைத்தனர். ஆதரவற்ற தீண்டத்தகாதவர்கள் மீது இதுபோன்ற கொலைபாதகச் செயல் நடந்தது ஏன்? அதற்குக் கூறப்பட்ட காரணம் என்னவென்றால் விருந்தளித்தவர் விருந்திலே நெய் சேர்க்கும் அளவுக்கு ‘திமிர்’ பிடித்தவராக இருந்தாராம்! விருந்தாளிகளும் துணிந்து நெய் சாப்பிடும் அளவுக்கு விவரங் கெட்டவர்களாக இருந்திருக்கிறார்கள்!
நெய் பணக்காரர் பயன்படுத்தும் ஆடம்பரப் பொருள் என்றால் ஒத்துக் கொள்ளலாம். ஆனால் அது ஒருவரின் சமூக அந்தஸ்தை உயர்த்திக் காட்டும் பொருள் என்று யாராவது நினைப்பார்களா? சக்வாரா இந்துக்கள் அப்படித்தான் நினைத்தார்கள். அதாவது தீண்டத்தகாதவர்கள் அவர்களின் உணவில் நெய்விட்டுக் கொண்டதின் மூலம் தம்மை அவமதித்து விட்டதாகவே சாதி இந்துக்கள் நினைத்துக் கொண்டார்கள். அதற்காகவே தீண்டத்தகாதவரை இப்படி பழி வாங்கினார்கள். நெய் என்பது இந்துக்களின் கவுரவப் பிரச்சனை. எனவே தீண்டத்தகாதவர்கள் நெய் வாங்கும் அளவுக்கு வசதி படைத்திருந்தாலும் கூட அதைப் பயன்படுத்தக் கூடாது. நெய் அவர்களுக்கு உரியது அல்ல. இந்த நினைப்புதான் இந்துக்களை தீண்டத்தகாதவர்களுக்கு எதிராக நிறுத்தியது. இது 1936 ஏப்ரல் முதல் வாரத்தில் நடந்தது.”
அம்பேத்கர் சுட்டிக்காட்டும் காலனிய காலத்து கொடூரத்திற்கும், 2015-ல் NSSO காட்டும் தரவுகளுக்கும் ஏதேனும் வித்தியாசம் இருக்கிறதா? இதைத்தான் காலந்தோறும் பார்ப்பனீயம் என்று சுட்டிக்காட்டுகிறோம். உணவு சாதியின் குறியீடாக நிற்பதற்கு இவை இரண்டு மட்டும் சான்றுகள் அல்ல. பண்பாட்டுத் தளத்தில் பார்ப்பன இந்துமதம் முன்னிறுத்தும் தெய்வங்களும் இப்படித்தான்.
பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பரந்தாமன், பார்ப்பனியத்தின் ஐகான் என்பதை இஸ்கான் குழுவினர் பரப்பிவருவதை அறிவோம். இதுதவிர பாற்கடலை கடைந்து எடுக்கும் அமுதத்திற்காக முப்பத்து முக்கோடி அய்யர்களின் சார்பில், விஷ்ணு அரக்கர்களின் உழைப்பை அபகரிக்கும் பொருட்டு மோகினி அவதாரமே எடுத்திருக்கிறார். இதற்கு மணிகண்டனே சாட்சி!
நிலவுடமைச் சமூகத்தில் பார்ப்பனீயத்தின் பால் மீதான ஆதிக்கத்தை இராச இராசன் பெருமையோடு எழுதி வைத்தவிட்டுப்போன கல்வெட்டுகளிலிருந்து அறியலாம். பார்ப்பனர்களுக்கு பிரம்மதேயம் கொடுக்கிற இராசஇராசன் ஹிரண்ய கர்ப்ப தானமும் கொடுத்திருக்கிறான். ஆனால் உழைக்கிற மக்களோ சாவா மூவாப் பேராடுகள் எனும் பெயரில் கோயில் விளக்கேற்றுவதற்கு உழக்களவு நெய் தரும் பொருட்டு கோயிலிலேயே காலத்திற்கும் அடிமையாக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தான் ‘வெட்டிக்குடிகள்’ என்று வரலாற்றில் அறியப்படுகிறார்கள்.
பண்பாட்டுத் தளத்தில் பார்ப்பனியத்தின் ஆதிக்கம் பால் என்று வருகிற பொழுது எப்படியெல்லாம் இருக்கிறது என்பதற்கு நாம் ஒரு பட்டியலே போடலாம். ஆனால் இப்பதிவின் நோக்கம் அதுமட்டுமன்று. இன்றைய மறுகாலனியாதிக்க சூழ்நிலையில் பார்ப்பனிய பண்பாட்டு ஆதிக்கம் எப்படி முன்னகர்த்தி எடுத்துச் செல்லப்படுகின்றது, அது எப்படி ஏகாதிபத்தியத்திற்கு உவப்பாக இருக்கிறது என்பதை பால் மற்றும் பால் சார் பொருட்களைக் கொண்டே இப்பதிவில் விளக்குவதும் நமது நோக்கம்.
இரண்டு மாதங்களுக்கு முன்பாக “வேத காலத்தில் விமானத் தொழில் நுட்பம்” என்று இந்திய அறிவியல் பேரவையில் இந்துத்துவ காலிகள் வெட்கமின்றி அறிக்கை ஒன்றை வாசித்தனர். ஒட்டுமொத்த உலகமும் எள்ளி நகையாடிய நிகழ்வு அது! வேத காலத்திலேயே 60-க்கு 60 அடியில் விமானங்கள் இருந்ததாகவும் அவற்றில் சில 200 அடிக்கு பெரியதாகவும், 40 சிறு எஞ்சின்களைக் கொண்டதாகவும் இருந்தது என தனது பங்களிப்பை நல்கினர். அதில் நாம் அதிகம் கவனிக்காத விசயம் என்னவென்றால் மகரிசி பரத்வாஜ், விமானிகளுக்கான டயட்டையும் சொல்லியிருந்தாராம்! அது என்ன டயட் தெரியுமா? பசும் பால், எருமைப் பால், ஆட்டுப்பால். இதுபோக விமானிகளின் உடை முழுக்கவும் வெஜிடேரியன் என்றும், அது நீர் வாழ் தாவரங்களால் உருவாக்கப்பட்டது என்றும் முன்மொழிந்திருந்தனர். ‘அவிங்கயெல்லாம் விஜிடேரியன்மா’ என்று வடிவேல் சொல்வதைத்தான் அழுத்தமாக முன்வைத்திருந்தனர். இந்த பால் மேட்டர் அல்லது பார்ப்பனியம் எங்க வரைக்கும் ஊடுருவி நிற்கிறது என்று பார்த்தீர்களா?
இரண்டாவது சம்பவம் இன்னும் சுவாரசியமானது. இது நடந்தும் ஒரு மாதம் தான் ஆகிறது. சாஸ்த்ரா பல்கலைக் கழகம் தர்ப்பையின் மகத்துவம் குறித்து நானோ தொழில்நுட்பம் அடிப்படையில் ஒர் ஆய்வு ஒன்றை நடத்தியிருக்கின்றனர். அதற்கு அவர்கள் பயன்படுத்திய பொருள் தயிர்! தர்ப்பை என்பது ஒரு புல் வகை. இதை வேதகாலத்தில் புனிதப் பொருளாக பயன்படுத்தியதற்கு காரணம் இதன் நானோ மகத்துவம் தான் காரணம் என்கிறது ஆய்வு.
திவசத்தின் போது ஐயர்கள் தங்கள் விரல்களில் மோதிரம் போன்று மாட்டிக்கொள்வார்கள். ஏனெனில் தீய சக்திகள் ஏதும் அண்டாதாம்! முக்கியமாக அரக்கர்கள் யாரும் பாற்கடல் அமுதத்திற்கு சண்டையிட்டைதைப் போன்று பூசையின் பலன்களையெல்லாம் திரட்ட முடியாதாம்! அனைத்து பலன்களும் திவசம் கொடுப்பவருக்கே போய்ச்சேருமாம்!
முன்னோர்களை விரட்டிவிட்டு முன்னோர்களுக்கு திதி கொடுக்கிற இந்தக் கூத்து நம்ம மக்களுக்கும் புரியாது. ஏன்னா திவசம் கொடுக்குறவன் பூணுல் போட்டுத்தான் திவசம் கொடுக்கணும்! முதல்ல ஒரு சூத்திரனுக்கு தன்னோட பெத்தவங்களுக்கு திதி கொடுக்கிற உரிமையே இல்லன்றதுனாலதான் பூணுலே போடறதாக சொல்றாங்க! இதுல தன்மானத்த தொலைச்சுபுட்டு தர்ப்பைய பத்தி சொன்னா எவனாவது கேட்பானா? ஆனா இங்க மேட்டரு வேற.
இப்பேர்பட்ட தர்ப்பையின் சிறப்பை சாஸ்த்ரா பல்கலைக் கழக பண்டிதர்கள் எலக்ட்ரான் நுண்ணோக்கி வைத்தெல்லாம் பார்த்தாலும் கூட அவர்களுக்கு முதன்மையாக உதவியது தயிர் தான். சூரிய கிரகணத்தின் போது உணவைப் பாதுகாக்கும் முக்கிய கதிர்வீச்சு தடைபடுதாம். இதனால் உணவுப் பொருள் பல்லுயிர் பெருக்கத்தால் சீக்கிரம் கெட்டுப்போய்விடுகிறதாம்! இதைத் தீர்ப்பதற்கு அஞ்சாறு தர்ப்பையக் கிள்ளி தயிர்ல போட்டா தயிர் லேட்டா புளிக்குமாம். ஏன்னா, தர்ப்பையோட நானோ பண்புகள் காரணமாக பல பாக்டீரியாக்கள் தர்ப்பையால கவரப்படுதாம்! இதுதான் மேட்டரு! இவ்வளவு காத்திரமான ஆய்விற்கு நானோ, பயோடெக்னாலஜியெல்லாம் உள்ள வந்தாலும் ஆய்விற்கு என்ன பயன்படுத்தினார்கள்? சாட்சாத் தயிர்தான்! இந்த ஆய்விற்கு நிதி வழங்கியது சாஸ்த்ரா பல்கலைக்கழகமுன்னு செய்தி போட்டது மவுண்ட் ரோடு மகா விஷ்ணு.
இந்தியாவில் நானோ தொழில்நுட்பம் தர்ப்பை, தயிர் என்கிற அளவிற்கு இருக்க காரணம் என்ன? இங்க அந்த வசதிகள் எல்லாம் அவாகிட்டதான் இருக்கு! அவாளுக்கு சுட்டுப்போட்டாலும் சயின்ஸ் வராது! கட்டுரையோட ஆரம்பத்துல உயர் சாதிகள் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களுக்கு அதிகம் செலவிடுறதா மட்டும் தான் பார்த்தோம். ஆனா அவாளோட சிந்தனையே கோமியம், தயிர், நெய், பாலைத்தாண்டி இல்லைன்றது தான் இங்கு நிருபணமாகுது. ஆனா இருக்குற ஐ.ஐ.டி, அறிவியல் நிறுவனங்களில் எல்லாம் இவா தான் இருக்கா! அதுவும் எப்படி இருக்கான்னா? ஆளும் வர்க்கத்தோட தொங்கு சதையா இருக்கா!
இதுல தாழ்த்தப்பட்டவர்களுக்கு மறுக்கப்பட்டது பால் தயிர் மட்டுமல்ல. கல்வியும் தான். சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தில் இப்படி புல்லரிக்கும் புல்லாய்வு நடைபெறுகிற பொழுது தமிழ் நாட்டில் உள்ள ஆதிதிராவிட மாணவர்கள், பள்ளிக்கூடம் சரியில்லைன்றதுனாலே படிப்பை பாதியிலே நிப்பாட்டுகிறார்களாம்! 2014-2015 ஆதிதிராவிட நலத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் படி தமிழ் நாட்டில் மொத்தம் 798 ஆதி திராவிட ஆரம்ப பள்ளிகளில் மொத்தம் 62,110 மாணவர்கள் பயில்கின்றனராம். ஆனால் 81 உயர்நிலைப்பள்ளிகளில் 19,465 மாணவர்கள் மட்டுமே பயில்கின்றனராம்.
மொத்தத்தில் மூன்றில் ஒருபங்கு மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்துவதற்கு முதன்மையான காரணம் பள்ளிகளின் மிகவும் மோசமான பராமரிப்பு தான் என்கிறது சமீபத்திய ஆய்வு. மத்திய அரசு இவர்களின் நலன்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகையான 14,757 இலட்சத்தில் இது வரை மாநில அரசுகள் 8,838 இலட்சங்களை மட்டுமே பயன்படுத்தியிருக்கின்றனவாம். 2005-2006இல் 1,54,040 ஆக இருந்த பயனாளிகள், 06-02-2014 கணக்கின் படி 19,525 ஆக சுருக்கப்பட்டிருக்கின்றனர் என்றால் இந்த அரசு யாருக்கானதுன்னு தெளிவா தெரியும்!
இனிமேலாவது நம்ம நாட்டுல அறிவியல் வளர்ச்சி! இட ஒதுக்கீட்ல தலித்துகள் பங்கு கேட்குறாங்க! தனிநபர் வருவாய் உயர்ந்திருக்குன்னு சொல்லாதீர்கள்! இதைவிட வெட்கக்கேடான விசயம் எதுவும் இருக்க முடியாது!
ஆக ஒரு விசயம் மிகத் தெளிவு. உண்மையில் நாம் அனைவரும் பாலுக்காக செலவழிக்கிற தொகையை அதிகரிக்க வேண்டும்! அப்போதுதான் பார்ப்பனியத்திற்கும் மறுகாலனியாதிக்கத்திற்கும் பாடை கட்டி பால் ஊற்றி இறுதி சடங்கு செய்ய முடியும்.
– இளங்கோ
குறிப்புகள் எடுக்கப் பயன்பட்ட ஆதாரங்கள்
- Caste determines spending on food, choice of work: NSSO
- Here Dalits denied basic education
- ‘Darbha’ grass, a natural preservative
- ‘Rishi has given guidelines to make planes‘
- கும்பகோணம் டிகிரி காபி ரகசியம் தெரியுமா?
- சாதியை ஒழிப்பது எப்படி? – அம்பேத்கர்
- தமிழர்கள் இந்துக்களா?- தந்தை பெரியார்
- வரலாறும் வக்கிரங்களும் –ரொமீலா தாப்பர் வினவு.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக