செவ்வாய், 21 அக்டோபர், 2014

பி ஆர் பழனிசாமி கலெக்டர் சகாயத்துக்கு சொன்னது : உன்னைவிட பல்வேறு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் எங்களுக்கு சலாம் அடித்துச் செல்கிறார்கள்.

( மினி தொடர்: பகுதி-2) சகாயம் சந்தித்த சவால்
காலங்கள் உருண்டு ஓடியதும் சகாயம் மதுரைக்கு ஆட்சியராக வந்த சமயத்தில், அடிக்கடி அங்கு வந்த கிரானைட் புகார்கள் வரிசையில் தினபூமி நாளிதழ் ஆசிரியரும் சகாயத்துக்கு புகார் அனுப்ப, பல்வேறு புகார்கள் வந்ததையொட்டி கலெக்டராக இருந்த சகாயம் ஒருநாள் விசாரணைக்காக தெற்குத்தெரு பிஆர்பி நிறுவனத்துக்குச் செல்கிறார்.
அங்கு நடந்தவற்றை அப்படியே சொல்லுகிறார் பெயர் சொல்ல விரும்பாத வருவாய்த்துறை அலுவலகர் ஒருவர். “முதன்முதலாக மேலூர் பகுதிகளுக்கு ஆய்வுக்குச் சென்ற சகாயம் மலைகளை வெட்டி கேக்கு துண்டுகள் போல் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கிரானைட் கற்கள், விவசாயம் செய்ய முடியாத அளவுக்கு பாழ்பட்டு கிடந்த விவசாய நிலங்கள், நீர் போக வழியின்றி அடைக்கப்பட்டிருந்த பாசன கால்வாய்கள், கழிவு கற்களால் நிரம்பி கிடந்த கண்மாய்கள், 1000 அடிகளுக்கு மேல் பள்ளமாக தோண்டப்பட்ட கிரானைட் குவாரிகள், அதில் பச்சைப்பசேல் என தேங்கி கிடந்த நீர், வெடிமருந்துகளால் இடிந்து கிடந்த வீடுகள், இதயநோய், அரிப்புநோய், தோல்நோய், குழந்தையின்மை என்று பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த மக்களை பார்த்து கடும் வேதனையுடன் கோபத்தின் உச்சத்துக்கு சென்று, பிஆர்பியை சந்திக்க தெற்குத்தெருவிலுள்ள அவரது நிறுவனத்துக்கு பொதுமக்கள் சிலருடன் செல்கிறார். அப்போது வாசலில் நின்ற பிஆர்பி.யின் அடியாட்கள் கலெக்டர் சகாயத்தின் காரை உள்ளே விட மறுக்கிறார்கள்.

பிறகு காரில் இருந்து இறங்கி சில மீட்டர் தூரம் நடந்தே சென்று பிஆர்பியின் அலுவலகத்துக்குள் நுழைகிறார். அப்போது தேவலோக சொர்க்கம்போல் காட்சியளித்த அந்த அலுவலகத்தைப் பார்த்து மிரண்டு போனார். அதன்பின் பிஆர்பியை சந்திப்பதற்காக தயாரானபோது, கலெக்டரை உள்ளே விடாமல் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக காக்க வைக்கிறார் பிஆர்பி மகன் சுரேஷ்குமார்.
சளைக்காத சகாயமும் பொறுமையாக காத்திருந்தார். பிறகு சகாயத்தை உள்ளே வரவழைத்த சுரேஷ்குமார், உன்னைவிட பல்வேறு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் எங்களுக்கு சலாம் அடித்துச் செல்கிறார்கள். இதுவரை 17 முறை ஜனாதிபதி விருது வாங்கி இருக்கிறோம். இந்தியாவின் எல்லா முக்கியமான அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் எங்களுக்கு வேண்டப்பட்டவர்கள் என்று தாறுமாறாக பேசி மிகவும் தரக்குறைவாக நடந்து கொண்டார்.

பொறுமையிழந்த சகாயம், அங்கிருந்து வெளியேறி நேரடியாக களப்பணியில் இறங்கி கிரானைட் ஊழல்கள், அதனால் அரசுக்கு ஏற்பட்ட இதுவரை சுமார் 16,338 கோடிகள் நஷ்டம் எனவும், நன்றாக இந்த ஊழலை விசாரித்தால் இன்னமும் அதிகமாக வாய்புகள் இருக்கிறது என்றும், இனி வரும் காலங்களில் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய விவரங்களை உள்ளடக்கிய 26 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தயாரித்து அரசுக்கு அனுப்பி வைக்கிறார். அதன்பிறகுதான் கிரானைட் பூதம் வெளியே கிளம்பி பூதாரகரமாக வெடிக்க ஆரம்பித்து” என்றார் .

பிஆர்பி.யின் தளபதிகள்


பிஆர்பிக்கு உறுதுணையாக இருந்து செயல்பட்ட வருவாய்துறை, காவல்துறை உள்பட பல அரசு துறைகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரிகள், ஊழியர்கள் கோடிக்கணக்கில் சொத்துக்களை வாங்கி குவித்து, கறுப்பு பணத்தை இன்றளவும் வைத்துள்ளனர். இவர்கள் மற்றும் பிஆர்பி பினாமிகள் என்று பார்த்தால் 50க்கும் மேற்பட்ட நபர்கள் மீது இன்றும் அரசு நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது என்கிறார்கள் கிரானைட் முறைகேடு பற்றி அறிந்தவர்கள்.

உலக நாடுகளுக்கு பறந்த கற்கள்


ஒவ்வொரு நாடுகளும் தனித்தன்மையான கலரில் உள்ள கற்களை விரும்புகின்றன. சீனாவுக்கு ரா சில்க், மில்க் ஒயிட், இத்தாலிக்கு க்ரீன் சேடு, ப்ளு சேடு, ஆஸ்திரேலியாவுக்கு ராயல் ப்ளூ, காஷ்மீர் ஒயிட், அமெரிக்காவுக்கு மெஜூரா, எல்லோ கோல்டு, கனடாவுக்கு க்ரீன், அரபு நாடுகளுக்கு காஷ்மீர் ஒயிட், மில்க் ஒயிட் என 2006க்கு பிறகு மிக அதிகமான கற்கள் பாலிஷ் செய்து தூத்துக்குடி துறைமுகம் வழியாக டின் எண், ஜிஎஸ்டி எண்களை போலியாக வாங்கி, போலி பெயர்களில் சுங்க வரி, கலால் வரி என அரசுக்கு கட்ட வேண்டிய வரிகளை கட்டாமல் கள்ளத்தனமாக மில்லியன் கணக்கில் பறந்து இருக்கிறது. இது சம்பந்தமாக நீதியரசர் சந்துரு 2008ல் அளவுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்ததான விவரங்களை ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவருக்கு உத்தரவு பிறப்பித்தார். ஆனால் அந்த உத்தரவுக்கு மேல்முறையீடு செய்து மேலும் கிரானைட் கற்கள் உலகநாடுகளுக்கு பறந்து கொண்டே இருந்தது. இந்த தொழில் மூலம் பெட்ரோல், மண்ணெண்ணெய் என்று எரிபொருள்களை அரசு மானியத்தில் சலுகையாக பெற்று வந்தது பிஆர்பி தரப்பு.

மலைகளை முழுங்கிய ‘மகாபாதகன்’

பிஆர்பி தரப்பு பல்வேறு உலக நாடுகளில் இருந்து கோடிக்கணக்கான இயந்திரங்களை இறக்குமதி செய்து பெரும் மலைகள், புராதான சின்னங்கள், தொல்லியல் துறைக்குச் சொந்தமான மலைப்படுகுகள் என்று இயற்கை வளங்களை விழுங்கி விட்டது. இதன்படி திருவாதவூர் மலை, ஓதுவார்மலை, அரிட்டாபட்டி கழிஞ்சமலை, பெருமாள்மலை, ஐந்துமலை, நவனிப்பட்டி மூக்காண்டிமலை, கீழையூர் வெள்ளூத்து மலை, பஞ்சபாண்டவர் மலை, பொக்கிஷமலை, புறாக்கூண்டு மலை, முல்லா மலை, கச்சராயன்பட்டி அறிவுமலை, திருச்சுனைமலை (அகஸ்தியர் தவமிருந்த மலை), கிடாரிப்பட்டி மாப்பாறை மலை என்று கிட்டத்தட்ட 48 சதுர கி.மீ தூரத்தில் இருந்த மலைகளை இருந்த இடமே தெரியாமல் மொத்தமாக முழுங்கி விட்டனர்.
காணாமல் போன கண்மாய்கள்

கீழையூர் பகுதிகளில் 3 கண்மாய்கள், கீழவளவு பகுதியில் 6 கண்மாய்கள், மலம்பட்டி கிராமத்தில் 8 குளங்கள் என்று ஒவ்வொரு கிராமத்திலும் இருந்து வந்த நீருற்றுகள், குளங்கள், ஊருணிகள், பாசன வாய்க்கால்கள் என்று 90க்கும் மேற்பட்ட நீர்நிலை ஆதாரங்கள் அனைத்திலும் கிரானைட் கழிவு கற்களை கொட்டி நாசப்படுத்தி, நச்சாக்கி ஆலை கழிவுகளை விட்டு விவசாய மண்ணை மலடாக்கி, இரு போகமாய் விளைந்து வந்த மேலூர் பகுதி இன்று நிலங்கள் வெடித்து பாலைவனமாய் மாறிக்கிடக்கிறது விவசாயம் செய்ய முடியாமல். இதனால் விவசாய தொழில் செய்து வந்த இளைஞர்கள் வட்டிக்கு கடன் வாங்கி துபாய், சிங்கப்பூர், மலேசியா என்று கட்டிட வேலைக்கும், கால்நடைகள் மேய்க்கவும் சென்று விட்டனர். ஆண்கள் இல்லாத கிராமமாக காட்சியளிக்கிறது.

கல்லுக்குள் புதைந்து கிடக்கும் மர்ம மரணங்கள்

ஒவ்வொரு புதிய இயந்திரம் வாங்கும்போதும் சாலையில் அநாதையாக திரிகின்ற மனநலம் பாதித்த நபர்களையும், வெளிமாநிலத்தவர்களையும் ஒவ்வொரு அமாவாசை, பவுர்ணமிக்கும் நரபலி கொடுப்பதாக தகவல் வந்தது. அதனையொட்டி பிஆர்பி நிறுவனத்தில் வேலைபார்த்த டிரைவர்கள், சாலைகளில் அநாதையாக திரிந்தவர்களை ஏற்றி வந்து குடோனில் அடைத்து வைத்து சாப்பாடு போட்டு பராமரித்து தேவையானபோது நரபலி கொடுத்ததாக மீடியாக்களிடம் தெரிவித்து பரபரப்பை உண்டாக்கினார்கள். ஒரு சில மர்ம மரணங்கள் இன்றளவும் விடை தெரியாத மர்மமாகவே இருக்கிறது. அதில் முக்கியமானது சகாயத்திடம் கார் டிரைவராக வேலை பார்த்த முருகேசன் என்பவரது மரணம். இந்த சம்பவங்களுக்கு எல்லாம் போதிய ஆதாரமில்லாததால், வழக்குகளில் சிக்காமல் தப்பித்தது பிஆர்பி தரப்பு. இருந்தாலும் எந்நேரமும் இந்த மரணங்களின் உண்மை தூசி தட்டப்படலாம்.

பாய்ந்த வழக்குகள்


கிரானைட் ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததும் சகாயம் அதிரடியாக மதுரையிலிருந்து தூக்கி அடிக்கப்பட்டதும், அந்த இடத்துக்கு அன்சுல் மிஸ்ரா வந்தார். சகாயம் தொட்ட பணியை மிக செம்மையாக செய்தார். தினசரி அடிக்கும் வெயிலில் காலை சூரியன் உதித்தும் கல்குவாரிக்கு வந்து மாலை சூரியன் மறையும் வரை தீவிரமாக களத்தில் இறங்கியதோடு, அனைத்து ஒட்டு மொத்த துறைகளையும்  உடனடியாக களத்தில் இறக்கினார். காவல், வருவாய், கனிமம், பொதுப்பணி உள்ளிட்ட அரசுத்துறைகளை ஒருங்கிணைந்து அனைத்து கிரானைட் குவாரிகளிலும் சோதனை நடத்தி, ஜிபிஎஸ் கருவிகள், ஆளில்லா விமானங்கள் மூலம் ஆய்வு செய்து, கிரானைட் முறைகேடுகளை துல்லியமாக கண்டறிந்தார்.

பின்னர் இதுதொடர்பாக மாவட்டம் முழுவதும் 92 வழக்குகள் பதிவு செய்து பி.ஆர்.பழனிச்சாமி,அழகிரி மகன் துரை தயாநிதி, ஜிஜி கிரானைட் கோபாலகிருஷ்ணன் உள்பட பலரை போலீஸார் தேடியது.வழக்கு போட்டதும் ,அழகிரி மகன் துரை தயாநிதி மட்டும் போலீசாரின் கைதுக்கு சிக்காமல் எஸ்கேப் ஆக, பழனிசாமி, கோபாலகிருஷ்ணன் உள்பட சிலரை கைது செய்து அதிர வைத்தார். அப்போது எஸ்.பி.யாக இருந்த பாலகிருஷ்ணனும் இதற்கு ஒத்துழைப்பு கொடுத்தார். கிரானைட் கற்களை குளோபல் டெண்டர் மூலம் ஏலம் விட்டு அரசுக்கு வருவாய் ஈட்டித்தரும் பணியில் ஈடுபட்டிருந்தபோது கிரானைட் முதலைகளின் அரசியல் சக்தியால் அன்சுல் மிஸ்ரா தூக்கி வீசப்பட்டார். அதன்பிறகு கிணத்துக்குள் போட்ட கல்லாய் போனது கிரானைட் வழக்குகள்.

குற்றப்பத்திரிக்கையில் கோட்டை விட்ட போலீஸ்

கிரானைட் வழக்குகளை மட்டும் கவனிப்பதற்கென டிஎஸ்பிக்கள் சரவணக்குமார், மணிரத்னம், இன்ஸ்பெக்டர்கள் ஜெயக்கொடி (சிவகங்கை), பிரகாஷ் (ராமநாதபுரம்), ஜான் பிரிட்டோ (மதுரை), வேணுகோபால் (மதுரை) உள்ளிட்டோரைக் கொண்ட சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இவர்கள் மொத்தமுள்ள 92 வழக்குகளில் 12 வழக்குகளில் மட்டுமே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். அந்த சமயத்தில் பி.ஆர் பழனிச்சாமி உள்ளிட்ட சிலர் தங்கள் மீதான 47 வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய ஐகோர்ட் மூலம் தடை உத்தரவு பெற்றனர். இதனால் மீதமுள்ள 31 வழக்குகளின் விசாரணையை இழு இழுவென பல மாதங்களாக இழுத்துக் கொண்டிருந்தது தனிப்படை போலீஸ். இதன் பின்னணியில் பிஆர்பி தரப்பு இருப்பதாக சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள். இதில் ஒரு சிலரின் சொத்து மதிப்பும் ,மேலூர் காவல் நிலையத்தில் வேலை பார்த்த அதிகாரிகளின் சொத்து மதிப்பு எங்கேயோ இருக்கிறதாம். காவல் துறையில் முணுமுணுக்கும் கூடுதல் செய்தி இது.
-சண். சரவணக்குமார்

'குளோபல் டெண்டரில் குளறுபடி செய்த கலெக்டரும் ,பிசு பிசுத்து போன வழக்குகளும்'- நாளை...

கிரானைட் கொள்ளையும்... கிறுகிறுக்க வைக்கும் பின்னணியும்! ( மினி தொடர்: பகுதி-1)
  விகடன்.com

கருத்துகள் இல்லை: