சனி, 25 அக்டோபர், 2014

மகனின் உயிரை காப்பாற்ற கல்லீரல் தானம் தந்த தாய்

மகனின் உயிரைக் காப்பாற்ற தனது கல்லீரலின் ஒரு பகுதியை உறுப்பு தானம் செய்துள்ளார் பாசக்கார தாய்.மைசூரை சேர்ந்தவர் பிரிரானா (34). இவரது மகன் ஸ்ரேயாஸ் (10), கடந்த 2 மாதங்களாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தான். மைசூர் நகரில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் காண்பித்தும், ஸ்ரேயாசுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை தெளிவாக கண்டறிய முடியவில்லை.அதைத் தொடர்ந்து ஸ்ரேயாஸ் பெங்களூரில் உள்ள பிஜிஎஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகளை செய்த மருத்துவர்கள் சிறுவனின் கல்லீரல் பாதிக்கப்பட்டு, வயிற்றின் அடிப்பகுதியில் நச்சுநீர் கசிவதையும் கண்டறிந்தனர். உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடுகள் நடந்தது.
இருப்பினும் ஸ்ரேயாசுக்கு பொருத்த மான கல்லீரல் கிடைக்காததால், அறுவை சிகிச்சை தாமதமானது.

சிறுவனின் உடல்நிலை மிகவும் மோசமாக தொடங்கியது. இந்நிலையில் அவரது தாய் பிரிரானா தனது கல்லீரலை தானமாக வழங்குவதாக மருத்துவர்களிடம் தெரிவித்தார். இருப்பினும் உயிருடன் இருக்கும் போது கல்லீரல் தானமாக வழங்க வேண்டும் என்றால் அவர்கள் குறைந்தபட்சம் 70 சதவீத உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்.

பிரிரானாவுக்கு மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில், அவர் முழு உடல் ஆரோக்கியத் துடன் இருந்ததால் அவரது கல்லீரலை ஸ்ரேயாசுக்கு பொருத்த மருத்துவர்கள் முன்வந்தனர்.இது குறித்து பிஜிஎஸ் மருத்துவமனையின் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சோனல் ஆஸ்தனா கூறுகையில், ஆரம்ப கட்டத்திலேயே உரிய சிகிச்சை அளிக்கப்படாததால், சிறுவனின் கல்லீரல் பாதிப்பு அதிகமாக இருந்தது. உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருந்தது. 

ஆனால் சிறுவனுக்கு பொருத்த கல்லீரல் கிடைக்காத என்ற நிலை ஏற்பட்ட போது தனது மகனை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் சிறுவனின் தாய் பிரிரானா தனது கல்லீரலை வழங்க முன்வந்தார். உயிருடன் இருக்கும் போது ஒரு நபர் தனது கல்லீரலை தானமாக வழங்க வேண்டும் என்றால், அவர் குறைந்த பட்சம் 70 சதவீத உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். ஏனென்றால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள சுமார் 10 முதல் 12 மணி நேரம் வரை தேவைப்படும்.

மேலும் அவருக்கு மனரீதியான அறிவுரைகளும் வழங்கப்பட்டது. பின்னர் அறுவை சிகிச்சை 10 மணி நேரம் நடந்தது. பிரிரானாவின் கல்லீரலில் இருந்து 50 சதவீதம் பெறப்பட்டு, ஸ்ரேயாசுக்கு பொருத்தப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்து  இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 

தற்போது தாய் மற்றும் மகன் இருவரும் நலமாக உள்ளனர் என்றார்.அறுவை சிகிச்சைக்கு பின்னர் பேசிய பிரிரானா கூறியதாவது, எனது உடல்நலத்தை காட்டிலும் எனது மகனின் உடல்நலம் எனக்கு மிகவும் அவசியம். அவன் அவதிப்படுவதை என்னால் பார்க்க முடியவில்லை. டாக்டர்கள் எனது கல்லீரலை பொருத்த முடிவு செய்ததும் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். என் வாழ்க்கையை காட்டிலும் எனது மகனின் வாழ்க்கை மிகவும் முக்கியம் என்றார். nakkheeran,in

கருத்துகள் இல்லை: