ஞாயிறு, 19 அக்டோபர், 2014

மகாராஷ்டிரா ஹரியானா தேர்தல் முடிவுகள் ! ஹரியானாவில் பாஜக பெரும்பான்மை ! மகாராஷ்ட்ராவில் இழுபறி ?

புதுடில்லி : அரியானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங் களுக்கு நடந்த சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள், இன்று எண்ணப்படுகின்றன. இந்த இரண்டு மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்கப் போவது யார் என்பது, இன்று மாலைக்குள் தெரிந்துவிடும்.மகாராஷ்டிரா, அரியானா ஆகிய மாநிலங்களில், கடந்த 15ல், சட்டசபை தேர்தல்கள் நடந்தன. மகாராஷ்டிராவில், ஆட்சியில் இருந்த காங்., - தேசியவாத காங்., கூட்டணியில் முறிவு ஏற்பட்டதால், அங்கு, ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.


குற்றச்சாட்டு:அதேபோல், எதிர்க்கட்சி கூட்டணியான, சிவசேனா - பா.ஜ., கூட்டணியிலும் தொகுதி பங்கீடு விவகாரத்தில் சிக்கல் ஏற்பட்டதால், அந்த கூட்டணியும் முறிந்தது. இதையடுத்து, இந்த நான்கு கட்சிகளும் தனித் தனியாக போட்டியிட்டன. பிரசாரத்தின்போது, ஒவ்வொரு கட்சியும், மற்ற கட்சிகள் மீது சரமாரியாக குற்றம் சாட்டின.அரியானாவில், முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி நடக்கிறது. இங்கு, பா.ஜ., புதிய சக்தியாக உருவெடுத்துள்ளதால், காங்கிரசுக்கும், பா.ஜ., வுக்கும், இடையே தேர்தல் பிரசாரத்தின்போது அனல் வீசியது.

விறுவிறுப்பு:இந்த இரண்டு கட்சிகளும் தவிர, சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சிங் சவுதாலாவின் இந்திய தேசிய லோக்தளம் கட்சியும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.ஓட்டுப் பதிவின் போது பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் நடக்கவில்லை. அரியானா வில், விறுவிறுப்பாக ஓட்டுகள் பதிவாகின. இங்கு, 73 சதவீத ஓட்டுகள் பதிவாகின.மகாராஷ்டிராவில் நகர்ப்புறங்களில் ஓட்டுப் பதிவு மந்தமாகவே இருந்தது. ஒட்டுமொத்தமாக, 64 சதவீத ஓட்டுகள் பதிவாகின.தேர்தலுக்கு பின் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளில், இரண்டு மாநிலங்களிலும், பா.ஜ.,வுக்கு அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப் பட்டது. ஒரு சில கருத்துக்கணிப்புகளில், மகாராஷ்டிராவில் தொங்கு சட்டசபை ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.'ஆட்சி அமைக்கப் போவது யார்?' என, இரு மாநில அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமல்லாது, பொதுமக்களிடமும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எதிர்பார்ப்பு:மத்தியில் பா.ஜ., தலைமையிலான அரசு பதவியேற்ற பின் நடக்கும் முதல் சட்டசபை தேர்தல் என்பதால், நாடு முழுவதும் இந்த தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்வதற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், இந்த இரண்டு மாநில தேர்தல்களிலும் பதிவான ஓட்டுகள், இன்று காலை எண்ணப்படுகின்றன. இதற்காக விரிவான ஏற்பாடுகளும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இன்று காலை, 11:00 மணிக்கு முன்னணி நிலவரம் தெரிய வரும். மாலைக்குள் இரண்டு மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்று தெரிந்து விடும்.

முதல்வர் வேட்பாளர் யார்?
மகாராஷ்டிராவில், 288 சட்டசபை தொகுதிகள் உள்ளன. பெரும்பான்மைக்கு, 145 தொகுதிகளில் வெற்றி பெறுவது அவசியம்.அரியானாவில், 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில், பெரும்பான்மைக்கு, 46 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.மகாராஷ்டிராவில், எந்த கட்சியும், தன் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. பா.ஜ., சார்பில், தேவேந்திர பட்நாவிஸ், ஏக்நாத் கட்சே, வினோத் தாவ்தே, பங்கஜா முண்டே ஆகியோர், முதல்வர் வேட்பாளருக்கான போட்டியில் உள்ளனர். அரியானாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், தற்போதைய முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவே, மீண்டும் முதல்வராவார் என தெரிகிறது. பா.ஜ., சார்பில் அபிமன்யூ, ராம்பிலால், அனில் விஜ் ஆகியோர், முதல்வர் வேட்பாளருக்கான போட்டியில் உள்ளனர். தினமலர்.com

கருத்துகள் இல்லை: