புதன், 22 அக்டோபர், 2014

கடற்படை ஊழலை அம்பலப் படுத்திய வீரருக்கு அடிஉதை: மனைவி கண்ணீர்:வேடிக்கை பார்த்த தமிழக போலீசார்

திருநெல்வேலி: நெல்லை கடற்படை அதிகாரியின் ஊழலை வெளிக்கொணர்ந்த வீரரை மனநோயாளி என கூறி அதிகாரிகள் தாக்கியுள்ளனர். அவரது மனைவி புகார் கொடுத்தும் தமிழக போலீசார் நடவடிக்கை எடுக்க முடியாமல் வேடிக்கை பார்த்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணத்தில் இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ்.,கட்டபொம்மன் தளம் உள்ளது. 1990 முதல் செயல்பட்டுவரும் இந்த மையத்தில் இந்தியாவின் கடல்பகுதி முழுவதையும் கண்காணிக்கும் 13 உயர்கோபுரங்கள் உள்ளன. இங்கு கமாண்ட்டென்ட் தலைமையில் நூற்றுக்கணக்கான படைவீரர்கள் பணியாற்றுகின்றனர். இங்கு ஒடீசாவை சேர்ந்த சுனில்குமார் சாகு 32, என்பவர் படைவீரராக பணியாற்றி வருகிறார். இந்த கடற்படை தளத்தில் அதிகாரிகள் பல்வேறு ஊழல்களை செய்துள்ளனர். குறிப்பாக ஒரு தனியார் நிறுவனம் இலவசமாக வழங்கிய தொலைக்காட்சி பெட்டிகளை பணத்திற்கு வாங்கியதாக கணக்கு காட்டியது,
அங்கு பராமரிப்பு பணிகள் நடத்தாமலேயே நடந்ததாக லட்சக்கணக்கில் பில் போட்டு பணம் எடுத்தது தொடர்பாக கடற்படைவீரர் சுனில்குமார் சாகு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்கள் பெற்றாராம். இதனை அறிந்த அதிகாரிகள் அவரை , கடுமையாக தாக்கியுள்ளனர். அவரை கடற்படை வளாகத்தில் உள்ள போலீஸ் மையத்தில் விசாரிப்பதாக கூறி தாக்கி ஒரு கைதியை போல நடத்தியுள்ளனர். அனைத்து கடற்படை வீரர்களும் அங்கு குடும்பத்துடன் வசிக்கின்றனர்.
சுனில்குமாருக்கு நடந்த கொடுமை குறித்து அவரது மனைவி ஆர்த்தி கடற்படை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவருக்கு மனநோய் ஏற்பட்டுள்ளது எனவே விசாகபட்டணத்தில் உள்ள கடற்படை ஆஸ்பத்திரிக்கு அனுப்ப உள்ளதாக தெரிவித்துவிட்டனர். எனவே ஆர்த்தி, விஜயநாராயணத்தில் உள்ள தமிழக போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பால்ராஜ் உள்ளிட்ட போலீசார் அங்கு சென்றனர். ஆனால் கடற்படை அதிகாரிகள் தமிழக போலீசாரையோ, உளவுத்துறை அதிகாரிகளையோ உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

இதுகுறித்து ஆர்த்தி நம்மிடமும் பேசினார். சுனில்குமார் சாகு, திடமான 32 வயது கடற்படைவீரர். ஊழலை அம்பலப்படுத்தியதற்காக அவர் மீது அபாண்டபழி சுமத்தி தாக்கி மனநோயாளி பட்டம் சூட்டுவதாக சக கடற்படைவீரர்களின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

உறவினர் போராட்டம்:>நெல்லை கடற்படை அதிகாரியின் ஊழலை வெளிக்கொண்டு வந்த சுனில்குமார் என்பவரை சிறைபிடித்ததை கண்டித்து, அவரின் மனைவி மற்றும் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாங்குநேரி-திசையன்விளை சாலையில் நடக்கும் இந்த போராட்டத்தால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தினமலர்.com

கருத்துகள் இல்லை: