புதன், 22 அக்டோபர், 2014

எஸ்.பி.பட்டிணம் காவல் நிலையக் கொலை – எஸ் ஐ காளிதாஸ் வசமாக மாட்டினார் ! போட்டோ புருப் !

இராமநாதபுரம் மாவட்டம், எஸ்.பி.பட்டிணம் காவல் நிலையத்தில் சையது முகமது (வயது 22) சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் உண்மை அறியும் குழு அறிக்கை டந்த 14/10/2014 அன்று இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், சுந்தர பாண்டியன் பட்டிணம் (எஸ்.பி.பட்டிணம்) காவல் நிலையத்தில், எஸ்.பி. பட்டிணம் ஊரைச் சேர்ந்த விதவைத் தாய் சையது அலி பாத்திமாவின் 22 வயது மகன் சையது முகமது சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான உண்மை விவரங்களை அறியும் பொருட்டு கீழ்க்கண்ட நபர்கள் கொண்ட உண்மை அறியும் குழு (Fact Finding Team) அமைக்கப்பட்டது.<

  • சே.வாஞ்சிநாதன், வழக்கறிஞர், மதுரை உயர்நீதிமன்றம்
  • ச.முருகன், வழக்கறிஞர், சிவகங்கை மாவட்ட நீதிமன்றம்
  • சு.சீனிவாசன், வழக்கறிஞர், சிவகங்கை மாவட்ட நீதிமன்றம்
  • சி.மன்மதன், வழக்கறிஞர், மதுரை மாவட்ட நீதிமன்றம்
  • லி.அலாவுதீன், வழக்கறிஞர், புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றம்
  • கோ.நாகராஜன், அமைப்பாளர், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்கள்
  • மேற்கண்ட குழு கடந்த 18/10/2014 அன்று சம்பவ இடமான எஸ்.பி.பட்டிணம் சென்று, கொல்லப்பட்ட சையது முகமதுவின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், சம்பவத்தின் போது காவல் நிலையத்தின் முன்பிருந்தோர், உடலை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் சம்பவ இடத்தின் அருகிலிருந்தோர், காவல்துறை அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்து, சம்பவ இடத்தைப் பார்வையிட்டு வாக்குமூலங்களைப் பதிவு செய்தது. உரிய புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது.
    உண்மை அறியும் குழுவின் ஆய்வு
    [படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
    மேற்படி சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி விசாரணை தொடங்கியுள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கை (Post – Mortem Report), இராசயன ஆய்வறிக்கை, நீதித்துறை நடுவர் விசாரணை அறிக்கை இன்றும் வெளி வரவில்லை. ஆகவே எமது உண்மையறியும் குழு, மக்களை நேரடியாகக் கேட்டறிந்ததன் அடிப்படையில் இவ்வறிக்கையை முதற்கட்ட அறிக்கையாக (Preliminary Report) வெளியிடுகிறோம்.
    எஸ்.பி.பட்டிணம், ரவுண்டானா – ஆலமரம் அருகே இருந்த நபர்கள் சொன்னது
    1. சாலிகு த/பெ சித்திக்
    2. நைனா முகம்மது த/பெ அமானுல்லா
    3. அப்துல் பாகி த/பெ சையது அபுபக்கர்
    4. சாதிக் த/பெ அப்துல் மன்னா
    எஸ்.பி.பட்டிணம் சுமார் 9000 இசுலாமியர்கள் மட்டுமே வசிக்கும் ஊர். இவ்வூரில் இதுவரை பெரிய பிரச்சனைகள் என்றுமே வந்தது இல்லை. இப்போது நடந்த பிரச்சனை மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.
    தகராறு நடந்த ஒர்க்சாப்
    தகராறு நடந்த ஒர்க்சாப்
    14/10/2014 காலை சுமார் 10.30 – 11.00 மணிக்கு ரவுண்டானா – ஆலமரம் அருகே வந்த (இறந்து போன) சையது முகமது, சாலிகுவிடம் பைக் கேட்க, அருள்தாஸ் ஒர்க்சாப்பில் சென்று எடுத்துக் கொள்ளச் சொல்லி, போனில் அருள்தாசிடமும் சொல்லியுள்ளார். அதன்பின், எஸ்.பி.பட்டிணம் மெயின் ரோட்டில், காவல் நிலையம் எதிரில் உள்ள அருள்தாசின் ஒர்க்சாப்புக்குச் சென்ற சையது முகமது, அருள்தாசிடம் பைக்கைக் கேட்டுள்ளார். அருள்தாஸ், சிறிது நேரம் கழித்து வரச் சொல்லியுள்ளார். சிறிது நேரம் கழித்துச் சென்றபோது, மீண்டும் சிறிது நேரம் கழித்துச் வரச் சொல்லியுள்ளார். மறுபடியும் 10 நிமிடம் கழித்து வரச் செல்ல, அதன்பின் 10 நிமிஷம் கழித்துச் சென்றபோது, உரிமையாளரிடம்தான் வண்டியைத் தருவேன் என அருள்தாஸ் சொல்ல, சையது முகமது இதை, முன்பே சொல்ல வேண்டியதுதானே, என வாக்குவாதம் செய்துள்ளார். இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டு, எடுக்கப்போன பைக் கீழே விழுந்துள்ளது. அருகில் உள்ளோர் விலக்கி விட, (இறந்து போன) சையது முகமது, மீண்டும் ரவுண்டானா – ஆலமரத்திற்கு வந்துள்ளார்.
    கொலை நடந்த காவல் நிலையம்
    [படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
    பின்பு சுமார் 1.00 – 1.30 மணிக்கு மீண்டும் அருள்தாஸ் ஒர்க்சாப்புக்குச் சென்ற சையது முகமது, அருள்தாசிடம் வாக்குவாதம் செய்துள்ளார். உடனே அருள்தாஸ் போலீசிடம் சொல்ல, எஸ்.பி.பட்டிணம் காவல் நிலையத்திலிருந்து வந்த ஏட்டு துரைக்கண்ணு, காவல் இளைஞர் படையைச் சேர்ந்த மகாலிங்கம், ரவி ஆகியோர், சையது முகமதுவை அடித்து, இழுத்துச் சென்றுள்ளனர். அதன்பின் மாலை சுமார் 5 மணிக்கு, அவரை காலில் சுட்டதாகச் சொல்லி தகவல் கிடைத்தது. நாங்கள் காவல்நிலையம் சென்று பார்க்க அவரது உடலை ஆம்புலன்சில் தூக்கிப் போட்டு கொண்டு சென்றனர். அதுவரை யாரையும் காவல் நிலையத்தில் விடவில்லை.
    ஏற்க்கனவே இசுலாமிய இளைஞர்கள் கபடிப் போட்டி நடத்தியபோது எஸ்.ஐ காளிதாஸ் வந்திருந்தார். அப்போது உற்சாகத்தில் இளைஞர்கள் கூச்சலிட்டபோது, “அந்தப் பக்கம் வாங்க உங்களை கவனிச்சுக்கிறேன்” என்றார். அதன்பின் சம்பவத்திற்கு ஒரு வாரம் முன்பிருந்து, பைக்குகளைப் பிடித்து வசூல் வேட்டை நடத்தி வந்தார். சினிமா ஹீரோ போல, பைக்கில் வந்து எல்லாரையும் விரட்டுவார். சமீபகாலமாக டிரான்ஸ்பர் கேட்டு வந்தார். சம்பவத்தன்று எஸ்.பி.யைப் பார்த்து டிரான்ஸ்பர் கேட்டுள்ளார். எஸ்.பி. மறுக்கவே கோபமாய் வந்துள்ளார். சையதுவை சுட்டுக் கொன்றபோது மது அருந்தி இருந்துள்ளார்.
    எஸ்.ஐ. காளிதாஸ், தனது பேஸ்புக்கில் நரேந்திர மோடி, சுப்பிரமணிய சுவாமியை ஆதரித்துள்ளார். அனுமன் சேனாவையும் ஆதரித்துள்ளார். சம்பவம் நடந்த சில மணி நேரத்தில் எஸ்.ஐ. காளிதாசின் பேஸ்ஃபுக் அக்கவுண்ட் முடக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த போஸ்டிங்குகள் நீக்கப்பட்டுள்ளது. இது பெருத்த சந்தேகத்தை உண்டாக்குகிறது. தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகளும், இக்கொடூர கொலைச் சம்பவத்தைக் கண்டித்த நிலையில் பிஜேபியின் H.ராஜா, இந்து முன்னணி இராமகோபாலன் ஆகியோர் எஸ்.ஐ.க்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதை சரியாக விசாரிக்க வேண்டும்.
    இறப்பதற்கு முன் காவல் நிலையத்தில் சையது முகமதுவைச் சந்தித்த சையது த/பெ அமானுல்லா :-
    சம்பவம் நடந்த சார்பு ஆய்வாளர் அறை
    சம்பவம் நடந்த சார்பு ஆய்வாளர் அறை
    காலையில் அருள்தாஸ் ஒர்க்சாப்பில் நடந்த பிரச்சனையை நான் விலக்கி விட்டேன். பின்பு சையது முகமது ரவுண்டானா ஆலமரத்திற்கு வந்துவிட்டான். என்னிடம் ரூ.100/- கேட்டு வாங்கினான். மறுபடியும் பிரச்சனை எனக் கேள்விப்பட்டு, காவல் நிலையம் சென்றேன். அப்போது நேரம் சுமார் 3 மணியிருக்கும். அப்போது காவல் நிலையத்தில் (இறந்த) சையது முகமது ஜட்டியுடன் உட்கார்ந்திருந்தான். அவனுக்கு இருபுறமும், இரு போலீசார் சேர் போட்டு உட்கார்ந்திருந்தனர். சையதுவின் கண்ணுக்கு அருகில் ஒரு காயம் இருந்தது.
    “சாப்பாடு வேண்டுமா?” எனக் கேட்டேன்.
    “வேண்டாம், சிகரெட் வாங்கிக் கொடு” என்றான். வாங்கிக் கொடுத்தேன். ஜட்டியோடு சென்று பாத்ரூமில் சிகரெட் குடித்தான்.
    “நான் கொடுத்த 100 ரூபாய் எங்கே?” எனக் கேட்டேன்.
    “சட்டைப் பாக்கெட்டில் உள்ளது, எடுத்துக்கோ” என்றான்.
    எடுத்துக்கொண்டு “என்ன பிரச்சனை” என்று கேட்டேன்.
    அதற்கு சையது முகமது, “என்னை ஏன் பிடித்து வைத்துள்ளார்கள் எனப் போலீசு எனக்குப் பதில் சொல்ல வேண்டும்” என்றான். பின்பு நான் வந்து விட்டேன்.
    ரமேஷ் த/பெ காளிமுத்து
    நான் ஆயுர்வேதிக் பட்டம் படித்து, பார்மசிஸ்ட்டாக உள்ளேன். கடந்த 14/10/2014 அன்று மாலை சுமார் 5-5.15 மணிக்கு என்னை ஒரு போலீஸ்காரர் காவல்நிலையம் வரச் சொன்னார். உடனே நான் காவல் நிலையம் சென்றேன். எஸ்.ஐ காளிதாசுக்கு இடது கை, மற்றும் இடது பக்க வயிற்றில் சிறு கீறல்கள் இருந்தன. எஸ்.எஸ்.ஐ பரமசிவனும் இன்னும் 4 போலீசாரும் இருந்தனர். எஸ்.ஐ.காளிதாஸ் பஞ்சு கேட்டார். நான் இதற்கு மருத்துவம் பார்க்கக் கூடாதென்று சொன்னேன். அப்போது எஸ்.ஐ அறை ஓரத்தில் ஒருவர் தூங்குவது போலப் படுத்திருந்தார். உடனே நான் வந்து விட்டேன். பின்பு காரில் வந்த எஸ்.ஐ எனது கடையில் பஞ்சு வாங்கிச் சென்றார்.
    இறந்த சையது முகமதுவின் தாய் சையது அலி பாத்திமா உடல் நிலை பாதிக்கப்பட்டு அழுது கொண்டே பேச முடியாமல் இருந்தார். அவருடன் இருந்த இப்பிரச்சனையில் எழுத்துப் பூர்வமாகப் புகார் கொடுத்துள்ள சையது முகமதுவின் தாய்மாமா சகுபர் அலி
    சையதின் தாய்
    சையதின் தாய்
    எனது அக்கா மகன்தான் இறந்து போன சையது முகமது. வீட்டில் மூத்த மகன். எனது அக்கா தனது கணவர் இறந்து விட்டதால் மிகவும் கஷ்டப்பட்டு குழந்தைகளை வளர்த்தார். இறந்த சையது, சென்னையில் முன்பு டிரைவராக வேலை பார்த்தான். 14/10/2014 காலை வெளியே சென்றவன், மதிய சாப்பாட்டிற்கு வரவில்லை. 1.30 மணிக்கு காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீசாரும், அதன் பின் வந்த எஸ்.ஐ காளிதாசும், சையதுவைக் கடுமையாகத் தாக்கி, பின்பு கொடூரமாகச் சுட்டுக் கொன்றுள்ளனர். எங்கள் குடும்பத்திற்கு தகவல் சொல்லவில்லை. எஸ்.ஐ காளிதாஸ் ஏட்டு துரைக்கண்ணு, தனபால், அய்யப்பன், SSI பரமசிவம், காவலர்கள் ரவி, மகாலிங்கம் உள்ளிட்டோரே இச்சம்பவத்திற்குப் பொறுப்பு.
    மறுநாள் 15/10/2014 அன்று காலை தொண்டி காவல் நிலையத்திலிருந்து வந்த ஆய்வாளர் துரைப்பாண்டியன், தவறு நடந்து விட்டது என்று சொல்லி திருவாடானை டி.எஸ்.பி  பி. சேகர் கொடுத்த கடித்தைக் கொண்டு வந்தார். அதில் “இன்று 14.10.2014-ம் தேதி மாலை 15.00 மணிக்கு எஸ்.பி.பட்டிணம் காவல் நிலைய கு.எண் 90/2014 வழக்கில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட தங்களது மகன் சையது முகமது காயம்பட்டு அதன் தொடர்பாக இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பும் வழியில் இறந்துவிட்டார் என்பதனையும் இது தொடர்பாக எஸ்.பி.பட்டிணம் காவல் நிலைய கு.எண் 91/2014 பிரிவு 176(1) CrPC வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று இருந்தது.
    எஸ்.பி கடிதம்
    இவ்வாறு நடந்த கொலையை டி.எஸ்.பி.யும், ஆய்வாளரும் மறைக்க முயற்சிக்கிறார்கள். இது என்ன நியாயம்? எனது புகாரில் வழக்குப் பதிவு செய்யவில்லை. நஷ்ட ஈடு கொடுப்பது தீர்வல்ல. காளிதாஸ் எஸ்.ஐ.யை கொலை வழக்கில் தண்டிக்க வேண்டும். எஸ்.பி., டி.ஐ.ஜி. ஐ.ஜி ஆகியோர் கொலை வழக்கு பதிவு செய்கிறேன் எனச் சொன்னார்கள். இன்றுவரை செய்யவில்லை. உயர் அதிகாரிகளே வாக்குறுதியை மீறலாமா?
    சாட்சியம் அளித்த பொதுமக்கள்
    [படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
    ஆசாத்(27) த/பெ ராஜா ஆம்புலன்ஸ் டிரைவர்
    ஆம்புலன்ஸ் டிரைவர்
    ஆம்புலன்ஸ் டிரைவர்
    சம்பவத்தன்று தொண்டியில் இருந்தேன். சுமார் 4.45 மணிக்கு எஸ்.பி பட்டிணம் காவல் நிலையத்திலிருந்து, “உடனே 5 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் வேண்டும். காயமானவரை கொண்டு செல்ல வேண்டும்” எனக் கேட்டார்கள், ஸ்டேஷன் பி.சி பேசினார். உடனே நான் காவல் நிலையம் சென்றேன். வண்டியை விட்டு இறங்கக் கூடாதெனச் சொல்லி விட்டார்கள். அதன்பின் சிறிது நேரத்தில் 2 போலீசார், ஒருவர் உடலை வண்டியில் தூக்கிப் போட்டார்கள்.
    உடனே நான், “காயம்பட்டவர் என்றுதானே சொன்னீர்கள், உடலை ஏற்றுகிறீர்களே” எனக் கேட்டேன்.
    “ஒன்றும் பேசக் கூடாது” எனச் சொல்லி விட்டனர்.
    அப்போது எஸ்.ஐ காளிதாஸ், ஒரு காரில் ஏறிச் சென்றார். உடனே, அங்கிருந்த உயர் போலீசு அதிகாரி, “வண்டியை எங்கும் நிறுத்தக் கூடாது” என்றார்.
    என்னுடன் வந்த போலீசார் எனது செல்போனைப் பறிமுதல் செய்தனர். பின்பு திருப்பாலைக்குடி காவல் நிலையத்தில் சுமார் 1 மணி நேரம் வண்டியை நிறுத்தி என்னை நகரவிடாமல் 2 போலீசார் என்னருகே நின்று கொண்டனர். அதன்பின் எஸ்.பி மயில்வாகனன் அங்கு வந்து உடலைப் பார்த்தார். நிறைய போட்டோக்கள் எடுத்தார்கள். நானும் எட்டிப் பார்த்தேன். இறந்தவர் உடலில் நிறையக் காயங்கள் இருந்தன.
    ஆம்புலன்ஸ்
    இறந்த சையது முகம்மது கொண்டு செல்லப்பட்ட ஆம்புலன்ஸ்
    ஜாகிர் உசேன் த/பெ சிக்கந்தர்
    சுமார் 4.50 மணிக்கு ரத்தினம் என்பவர் “காவல் நிலையத்தில் பிரச்சனை, அலறல் சத்தம், வெடிச் சத்தம் கேட்டது” என்றார். உடனே நான் காவல் நிலையம் சென்றேன். காலில் ஒருவரைச் சுட்டு, ஆம்புலன்சில் அனுப்பியதாகச் சொன்னார்கள். அதன்பின் இறந்து விட்டதாகச் சொன்னார்கள். உடனே அவ்வழியே சென்ற தினத்தந்தி நிருபரை நிறுத்தி செய்தியைச் சொன்னேன். அப்போது காவல் நிலையத்துக்கு புகார் கொடுக்க வந்த காரைக்குடியைச் சேர்ந்த ஒருவர், “பெரிய அநியாயம், அடிச்சு, சுட்டுக் கொன்னுட்டாங்க” எனச் சொன்னார். அவரை நிருபரிடம் சொல்லச் சொன்னேன். நடந்ததைச் சொன்ன அவர் பெயர் சொல்ல மறுத்து விட்டார்.
    ஒரு வாரம் முன்பு பக்ரித் பண்டிகைக்கு நாகூர்கனி என்பவர் காவல் நிலையத்திற்குப் பணம் கொடுத்துள்ளார். ஆனால் சில நாட்களில் அவரது தம்பியையே காவல் நிலையத்தில் பிடித்து வைத்து விட்டனர். இதைப் பொது இடத்தில் (இறந்த) சையது சத்தமாகப் பேசினாராம். இந்தக் கோபம் போலீசாருக்கு இருந்திருக்கலாம்.
    ரத்தினம் த/பெ ராசு / (சம்பவம் நடந்தபோது காவல் நிலைய வளாகத்தில் இருந்தவர்)
    14/10/2013 அன்று மதியம் 3 மணிக்கு, தண்ணி டேங்க் கட்டும் வேலைக்கு, எஸ்.பி பட்டிணம் காவல் நிலையத்தில் கூப்பிட்டதால் இடத்தைப் பார்க்கச் சென்றேன். காவல் நிலையத்தின் பின்புறமாகச் சுற்றி வந்து கொண்டிருந்தபோது இரண்டு போலீசார் ஒருவரை கைகளைப் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தனர். அவர் திமிறிக் கொண்டிருந்தார். இதை சன்னல் வழியாக நான் பார்த்தேன். பின்பு சிறிது நேரத்தில் அலறல் சத்தம் கேட்டது. பிறகு வெடி, வெடிக்கும் சத்தம் கேட்டது. மூன்று, நான்கு முறை கேட்டது. சத்தம் எஸ்.ஐ அறையிலிருந்து வந்தது. பின்பு வேகமாக வெளியே வந்த எஸ்.ஐ. ஸ்டேசன் வாசலில் இருந்த மெக்கானிக் அருள்தாஸ், அவரது மாமனார், இன்னும் புகார் கொடுக்க வந்திருந்த சிலரை “எல்லாம் வெளியே போங்க” எனச் சத்தம் போட்டு விரட்டி விட்டார். நானும் வெளியே ஓடி வந்து விட்டேன்.

    எஸ்.ஐ காளிதாஸ்
    சபீர் அலி த/பெ.குத்புதீன், 1-வது வார்டு கவுன்சிலர் இப்ராகிம் ஷா
    கொல்லப்பட்ட சையது மீது குற்ற வழக்கு ஏதும் இல்லை, சில சமயம் குடித்து விட்டு சிலரிடம் சத்தமாகப் பேசுவார். யாருடனும் பெரிய தகராறுகள் செய்ய மாட்டார். பலருக்கு உதவுவார். சமீபத்தில் பஸ் தீ பிடித்தபோது, மேலே ஏறி, தீயை அணைத்து பலரைக் காப்பாற்றினார்.
    சம்பவத்தன்று ஆயிரக்கணக்கானோர் காவல் நிலையம் முன்பு கூடியிருந்தோம். பெரும் கூட்டம் கூடியதால் தாமாகவே சிலர் கடைகளை அடைத்தனர். வேறு எந்தப் பிரச்சனையும் இல்லை. எஸ்.பி., டி.ஐ.ஜி, ஐ.ஜி, சொன்னவுடன் கலைந்து போய்விட்டோம். பிஜேபி தலைவர் எச்.ராஜா பல தவறான தகவல்களைச் சொல்கிறார். கிழக்கு கடற்கரை சாலையில் பேருந்துகளை மறித்து, குறிப்பிட்ட சில வகுப்பினரை இறக்கி நாங்கள் தாக்க முயன்றதாகவும், எஸ்.பி. பட்டிணத்திலும், இராமநாதபுரத்திலும் இந்துக்களின் கடைகளை அடித்து நொறுக்குவதாகவும் சொல்லியுள்ளார். இது அபாண்டமான குற்றச்சாட்டு. பொய்யான தகவல்களைச் சொல்லி, பிரச்சனையைத் திசை திருப்புகின்ற எச்.ராஜா மீது வழக்குத் தொடர உள்ளோம்.
    ஒர்க்சாப் வைத்திருக்கும் மெக்கானிக் அருள்தாஸ்
    எஸ்.பி.பட்டிணம் காவல் நிலையம் எதிரில் உள்ள அருள்தாசின் ஒர்க்சாப் அடைக்கப்பட்டிருந்தது. அவரின் செல் எண்ணில் தொடர்பு கொண்டபோது அங்கேயே இருங்கள் வருகிறேன் எனச் சொன்னார். ஆனால் வரவேயில்லை.
    காவல் துறையினரிடம் கேட்டது
    எஸ்.பி.பட்டிணம் காவல் நிலையத்தில் சம்பவ அறையைப் பார்த்து அங்கிருந்த பாரா ஏட்டு ஆசைக் குமாரிடம் கேட்ட போது,  நானும், இரண்டு போலீசார் மட்டும்தான் உள்ளோம். ஸ்டேசனில் வேறு யாருமில்லை. சம்பவத்தன்று பணியில் இருந்தவர்களை சிபிசிஅய்டி எஸ்.பி. திருவாடானை விருந்தினர் மாளிகையில் விசாரித்துக் கொண்டுள்ளார். அனைத்துப் போலீசாரும் அங்கு உள்ளனர் நான் சம்பவம் சமயத்தில் இங்கு இல்லை.
    திருவாடானை விருந்தினர் இல்லத்தில் இருந்த டி.எஸ்.பி சேகர்
    இப்போது சிபிசிஅய்டி எஸ்.பி சம்பவத்தன்று பணியில் இருந்த போலீசாரை விசாரித்து வருகிறார். அந்த வேலையில்தான் நானும் உள்ளேன். இச்சம்பவத்தில் மூன்று வழக்குகள் போடப்பட்டுள்ளது. பாரா காவலரிடம் சார்பு ஆய்வாளர் காளிதாஸ் “தன்னைத் தாக்க வந்ததால் சையதை சுட்டுக் கொன்றதாகச்” சொல்லியுள்ளார். அதன்படி பாரா காவலரிடம் புகார் பெற்று கு.வி.ந.ச.பிரிவு 176(1)-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மெக்கானிக் அருள்தாஸ் மற்றும் சார்பு ஆய்வாளர் காளிதாஸ் புகார்களின் பேரில் இரண்டு வழக்குகள் இறந்த சையது மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதித் துறை நடுவர் விசாரணையும் நடந்து வருகிறது. எல்லாம் பாதியில்தான் உள்ளன. இப்போது சிபிசிஅய்டி எஸ்.பியுடன் செல்ல வேண்டியுள்ளதால் விரிவாகப் பேச முடியாது. இன்னொரு நாள் வாருங்கள் பேசலாம்.
    மேற்கண்ட விசாரணையில் கண்டறிந்த உண்மைகள் :-
    1. இராமநாதபுரம் மாவட்டம், எஸ்.பி.பட்டிணம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்ட சையது முகமது என்ற 22 வயது இளைஞர், காவல் நிலையத்தில் ஜட்டியோடு அமர வைக்கப்பட்டு, பின்பு கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவத்திற்கு சார்பு ஆய்வாளர் காளிதாஸ், சிறப்பு சார்பு ஆய்வாளர் பரமசிவம், தலைமைக் காவலர்கள் துரைக்கண்ணு, அய்யப்பன், தனபால், இளைஞர் காவல் படைக் காவலர்கள் ரவி, மகாலிங்கம் ஆகியோரே பொறுப்பு.
    2. விசாரணைக் கைதி சையது முகமது சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் மாண்புமிகு உச்சநீதிமன்றம் பி.யூ.சி.எல் – எதிர் – மகாராஷ்டிரா அரசு வழக்கில் உருவாக்கிய ‘காவல் மோதல் சாவுகளில்’ (Police Encounters) கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள், காவல் நிலைய மரணங்கள் தொடர்பான காவல்துறை நிலையாணை 151-ன் கீழான விதிகள் மீறப்பட்டுள்ளன. இது கடுமையான நீதிமன்ற அவமதிப்புக் குற்றமாகும்.
    3. சந்தேகம் ஏதுமின்றி, தான் சுட்டுக் கொன்றதை சார்பு ஆய்வாளர் காளிதாஸ் ஏற்றுக் கொண்டு பாராக் காவலர் புகார் அளித்த நிலையில், கு.பி.ந.ச. பிரிவு 176(1)-ன் கீழ் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டது தவறானது, உள்நோக்கம் கொண்டது.
    4. கொலை வழக்கு பதிவு செய்வோம் என மக்களிடம் உறுதியளித்த இராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி மற்றும் இராமநாதபுரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோர் அதனை மீறியது கடும் கண்டனத்திற்குரியது.
    5. காவல் நிலையத்திலேயே சையது முகமது இறந்து விட்டார். ஆனால் ‘இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பும் வழியில் இறந்து விட்டார்’ எனக் குறிப்பிட்டு, சையது முகமதின் தாயார் திருமதி செய்யதலி பாத்திமாவிற்கு திருவாடனை உட்கோட்ட, காவல் துறை துணை கண்காணிப்பாளர், தொண்டி காவல்நிலைய ஆய்வாளர் துரைப்பாண்டியன் மூலம் கடிதம் கொடுத்திருப்பது, வழக்கின் உண்மைகளை மறைத்து குற்றவாளிகளைப் பாதுகாக்கும் குற்றமாகும்.
    6. சுட்டுக் கொல்லப்பட்ட சையது முகமது மீது குற்ற வழக்குகள் ஏதுமில்லை. அவர் எஸ்.பி.பட்டண காவல் நிலைய ரவுடிகளின் பட்டியலில் உள்ளவர் அல்ல.
    7. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா சொல்லியுள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை. சம்பவத்தன்று எந்த வன்முறையும் நிகழவில்லை. நடந்த சம்பவங்கள் குறித்து நேரடியாகத் தெரியாமல் மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் எச். ராஜா தெரிவித்த கருத்துக்கள் பொறுப்பற்றது, கடும் கண்டனம், நடவடிக்கைக்குரியது.
    8. சார்பு – ஆய்வாளர் காளிதாசின் பேஸ்புக் கணக்கு சிறிது காலம் முடக்கப்பட்டு, போட்டோ, பதிவுகள் நீக்கப்பட்டுள்ளது,சந்தேகத்திற்கும், விசாரணைக்குரியதாகவும் உள்ளது.
    பரிந்துரைகள்
    1. விசாரணைக் கைதி சையது முகமதின் கொலைக்குக் காரணமான சார்பு ஆய்வாளர் காளிதாஸ், சிறப்பு சார்பு ஆய்வாளர் பரமசிவம், தலைமைக் காவலர்கள் துரைக்கண்ணு, அய்யப்பன், தனபால், இளைஞர் காவல் படைக் காவலர்கள் ரவி, மகாலிங்கம் ஆகியோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு உடனே கைது செய்யப்பட வேண்டும். அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும்.
    2. கொலைச் சம்பவத்தை மறைத்து திசை திருப்ப முயன்ற திருவாடனை காவல் துணை கண்காணிப்பாளர் பி.சேகர், தொண்டி காவல் நிலைய ஆய்வாளர் துரைப்பாண்டியன், மற்றும் இதற்கு உறுதுணையாய் இருந்த இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில் வாகனன் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். உடனடியாக மூவரையும் தமிழக அரசு பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.
    3. தவறான தகவல்களைச் சொல்லி, மதப் பிரச்சனையைத் தூண்டி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் பா.ஜ.க. தேசிய செயலர் எச்.ராஜா மீது தமிழக அரசு இந்திய தண்டணைச் சட்டம் பிரிவு 153-ஏ-ன் கீழ் வழக்குப் பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    4. சார்பு ஆய்வாளர் காளிதாசின் பேஸ் புக் பதிவுகள் நீக்கப்பட்டது குறித்தும், அவருக்கு பி.ஜே.பி – ஆர்.எஸ்.எஸ் அரசியல் சார்பு உள்ளதா? என்பது குறித்தும் சிபிசிஐடி எஸ்.பி. விசாரிக்க வேண்டும்.
    5. சுட்டுக் கொல்லப்பட்ட சையது முகமதுவின் குடும்பத்தினருக்கு ரூ 20 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும். வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சையது முகமது குடும்பத்தினரிடம் உடனே ஒப்படைக்க வேண்டும்.
    6. தமிழகத்தில் அதிகரித்து வரும் லாக் – அப் மரணங்களுக்கு தமிழக அரசு காவல்துறைக்கு அளித்துவரும் அத்துமீறிய அதிகாரமும் சலுகைகளுமே காரணமாக உள்ளது. அரசு இதனை உடனடியாகக் கட்டுப்படுத்துவதுடன் உச்சநீதிமன்றத் தீர்ப்பு, தேசிய மனித உரிமை ஆணைய உத்தரவுகளை நடைமுறைப்படுத்த வேண்டும். அமல்படுத்தாத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    7. மாநில மனித உரிமை ஆணையம் இவ்வழக்கினை தானே எடுத்துக் கொண்டு விசாரிப்பதுடன், சி.பி.சி.ஐ.டி விசாரணையைக் கண்காணிக்க வேண்டும்.
    நாள்: 20.10.2014
    உண்மை அறியும் குழுவிற்காக
    சே.வாஞ்சி நாதன்
    ண்மை அறியும் குழுவின் அறிக்கை 20.10.2014 காலை 10.30 மணிக்கு மதுரை உயர்நீதிமன்றம் முன்பு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
    ஆர்ப்பாட்ட போஸ்டர்
    மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் உண்மை அறியும் குழு அறிக்கையை மதுரை உயர்நீதிமன்ற முன்னாள் வழக்கறிஞர் சங்கத் தலைவரும், மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் உறுப்பினருமான வழக்கறிஞர் திருநாவுக்கரசு வெளியிட்டார்.
    அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு உண்மை அறியும் குழுவின் முடிவுகளை குழுவுக்குத் தலைமையேற்ற மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்ட துணைச் செயலர், வழக்கறிஞர் வாஞ்சி நாதன் விளக்கினார். பின்பு முழக்கங்கள் எழுப்பப்பட்டு ஆர்ப்பாட்டம் தொடங்கியது.
    தொடக்கத்தில் உரையாற்றிய வழக்கறிஞர் வின்சென்ட் அவர்கள் “எஸ்.பி.பட்டிணம் காவல் நிலையத்தில் நடந்த படுகொலை மிகப்பெரிய மனித உரிமை மீறல். மோடி ஆட்சியில் சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு மாநில அரசுகள் உடந்தையாக இருந்து வருகின்றன. அனைவரும் இதற்கு எதிராகப் போராட வேண்டும்” என்றார்.
    அதனைத் தொடர்ந்து பேசிய வழக்கறிஞர் திருநாவுக்கரசு  “எஸ்.பி.பட்டிணம் காவல் நிலையத்தில் நடந்தது புதிய நிகழ்வல்ல. தமிழகத்தில் தொடர்ந்து நடந்து வரும் நிகழ்வுகளின் தொடர்ச்சிதான் இது. ஏற்கனவே பரமக்குடியில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு பலர் கொல்லப்பட்டனர். வெள்ளத்துரை என்ற காவல்துறை அதிகாரி பலரை சுட்டுக் கொன்றுள்ளார். அதேபோல் இச்சம்பவமும் நடந்துள்ளது. பட்டப் பகலில் நடந்த இக்கொலையில் முதலில் அடித்துக் துவைத்துவிட்டு, பின்பு சுட்டுக் கொன்றுள்ளனர். காவல்துறை உயரதிகாரிகளின் துணையோடுதான் இச்சம்பவம் நடந்துள்ளது. இதற்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்” என்றார்.
    இறுதியில் பேசிய வழக்கறிஞர் வாஞ்சி நாதன்  உண்மை அறியும் குழுவாகச் சென்றபோது கண்டறிந்த செய்திகளை விளக்கிப் பேசினார். குறிப்பாக, கொல்லப்பட்ட சையது முகமதுவை போலீசார் தாக்கியது, அவர் உடம்பில் காயங்கள் இருந்தது, திருவாடனை டி.எஸ்.பி. சேகர், தொண்டி காவல் நிலைய ஆய்வாளர் துரைப் பாண்டியன் ஆகியோர் நடந்த கொலையை மறைக்க முயன்றது, அதற்கு எஸ்.பி. மயில்வாகனன் உறுதுணையாய் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாகக் குறிப்பிட்டார்.
    மேலும் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலர் எச். ராஜா கூறிய குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்பதை உண்மை அறியும் குழு நேரடியாக கண்டறிந்ததாகச் சொன்னார். இக்கொலையில் சம்பந்தப்பட்டுள்ள சார்பு ஆய்வாளர் காளிதாஸ் உள்ளிட்ட அனைத்துக் குற்றவாளிகளும் தண்டிக்கப்படும்வரை மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் போராட்டம் தொடரும் என்றார்.
    ஆர்ப்பாட்டத்தில் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள், மனித உரிமைப் பாதுகாப்பு மைய உறுப்பினர்கள், மக்கள் கலை இலக்கியக் கழகம், பெண்கள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, ஒத்தக்கடை எவர்சில்வர் பட்டறை தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
    sp-patnam-demo-6[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
    தகவல்
    மனித உரிமைப் பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
    மதுரைக் கிளை.

    கருத்துகள் இல்லை: