வியாழன், 3 ஏப்ரல், 2014

நாத்திகர்களை பயங்கரவாதிகளாக அறிவித்துள்ள சவுதி மன்னர்

சவுதி மன்னர் அப்துல்லா கடவுள் மறுப்பாளர்களையும், நாத்திகவாதிகளையும் பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளதாக மத்திய கிழக்கு மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகளுக்கான மனித உரிமை கண்காணிப்பகம் கவலை தெரிவித்துள்ளது.
அண்டை நாடான சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போரில் கலந்து கொள்ள சவுதியில் இருந்து பலர் செல்கின்றனர். அங்கு அதிபருக்கு எதிராக போராடிவரும் குழுவினருடன் இணைந்து ஆயுதப்போராட்டத்தில் அவர்கள் ஈடுபடுகின்றனர்.
சிரியாவில் போராட்டம் நடத்தி விட்டு தங்கள் நாட்டுக்கு வரும் சவுதி வாசிகள் இங்கும் மன்னராட்சி முறைக்கு எதிராக புரட்சி மற்றும் போராட்டங்களில் இறங்கி விடக்கூடாதே... என்ற அச்சத்தில்தான் மன்னர் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கருதப்படுகிறது.
இந்த புதிய அறிவிப்பின்படி, சவுதியில் அல்லது எந்த வெளிநாட்டிலும் இஸ்லாமிய மத அடிப்படைவாதத்தை தழுவி நடைபெறும் ஆட்சியை எதிர்த்து கேள்வி கேட்பவர்கள், அதிருப்தி தெரிவிப்பவர்கள், போராட்டம் நடத்துபவர்கள் ஆகியோர் இறை மறுப்பாளர்கள் (நாத்திகர்கள்) என்று கருதப்படுவார்கள்.
பொது மக்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் இத்தகைய நாத்திகவாதிகளை பயங்கரவாதிகளாகக் கருதி, 3 ஆண்டு முதல் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க இந்த புதிய அறிவிப்பு வழிவகை செய்கிறது.

கருத்துகள் இல்லை: