சனி, 5 ஏப்ரல், 2014

சாவித்திரி முதலில் காதலில் வென்று பின் வாழ்க்கையில் தோற்றார்!


ஜெமினிகணேசன், 1947 வாக்கில் தாம்பரம் கிறிஸ்துவக் கல்லூரியில் பார்த்து வந்த ‘வேதியியல்’ பேராசிரியர் (கெமிஸ்ட்ரி புரபசர்) வேலையைவிட்டு ஓர் உறவினர் மூலம் எஸ்.எஸ்.வாசனுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இதன் மூலம் ஜெமினி ஸ்டுடியோவில் அவர் வேலைக்கு சேர்ந்தார்.
ஜெமினி ஸ்டூடியோ ‘கேஸ்டிங் டிபார்ட்மெண்டில்’ (நடிகர் – நடிகையரைத் தேர்ந்தெடுக்கும் இலாகா) பணிபுரிந்து கொண்டிருந்த£ர்.
அப்போது, தெலுங்கு நாயுடு இனத்தைச் சேர்ந்த ஒருவர், 12 வயதுடைய ஒரு சிறுமியை சினிமாவில் சேர்ப்பதற்காக அழைத்து வந்து அவரிடம் அறிமுகப்படுத்தி நடிப்பதற்கு ‘சான்ஸ்’ கேட்டார்.
பாவாடை தாவணி அணிந்திருந்த அந்தப் பாப்பாவிடம் பேசிப்பார்த்த கணேசன் (ஜெமினி) சொன்னது:–
ஜெமினி:– ‘‘முகம் நல்ல களையாகவும், கண்ணு துருதுருன்னும் இருக்கு. நல்லா பேசுது. பாத்தா சூட்டிகையா தெரியிது. ஆனா வயசுதான் ரெண்டுங்கெட்டானா இருக்கு. இந்த வயசுக்கேத்த வேஷம் வந்தா கூப்பிடுறேன். எதுக்கும் இன்னும் ஒண்ணு ரெண்டு வருஷங் கழிச்சி வந்து பாருங்க’’ என்று சொல்லி புகைப்படத்தை வாங்கி நோட்டுப் புத்தகத்தில் ஒட்டி குறிப்பு எழுதி வைத்தார்.
‘இரண்டுங்கெட்டான்’ வயதுடைய இதே பெண் இன்னும் ஆறு ஆண்டுகள் கழித்து 1953–ல் பருவம் பூத்துக் குலுங்கும் பதினெட்டு வயது அழகுக் கதாநாயகி ஆகி, அவருடன் அதே ஜெமினிகணேசன் நாயகனாக நடிக்கப்போகிறார் – படத்தில் மட்டும் அல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் காதலித்துக் கைப்பிடித்து ‘இளையதாரம்’ ஆக்கிக்கொள்ளப் போகிறார் என்பதை அப்பொழுது அவர் அறிந்திருக்கவில்லை.

‘‘இன்னார்க்கு இன்னார் என்று
எழுதி வைத்தானே தேவன் அன்று’’

– கவியரசர் கண்ணதாசன்
அன்றைய அந்தப் பிறை நிலாதான், பின்நாட்களில் பவுர்ணமி நிலாவாகிப் பட உலகில் பளிச்சிட்ட ‘நடிகையர் திலகம்’ சாவித்திரி!
அந்தப்பாவாடை தாவணியை ஜெமினி ஸ்டூடியோவிற்கு அழைத்து வந்து முன்னாள் கெமிஸ்ட்ரி புரபசரிடம் அறிமுகப்படுத்தி ‘சான்ஸ்’ கேட்டவர் சாவித்திரியின் பெரியப்பா ‘சவுத்திரி!’
சாவித்திரி விஷயத்தில் கண்டிப்பும், கறாரும் கொண்ட ‘கார்டியனான’ இதே சவுத்திரி பின்நாளில் சாவித்திரி – ஜெமினி காதலுக்கும், கல்யாணத்திற்கும் முட்டுக்கட்டையாக இருந்தார்.
முட்டுக்கட்டைகளை எல்லாம் தகர்த்தெறியும் சக்தி மோகத்திற்கு உண்டு என்பதை பாவம் – அந்த முதியவர் அறிந்திருக்கவில்லை. அதனால்தான் அவர் தோற்றார். சாவித்திரி முதலில் காதலில் வென்று பிறகு வாழ்க்கையில் தோற்றார்!
1965–ல் ஒரு சமூக நல அமைப்பு சிறந்த கணவர் – மனைவி ஜோடியைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. அதில் ஜெமினிகணேசன் – சாவித்திரி கலந்து கொண்டு, எல்லோராலும் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, சிறந்த தம்பதியருக்கான முதல் பரிசைப் பெற்றனர்.
சாவித்திரி மிக நன்றாக கார் ஓட்டுவார். சென்னை சோழவரத்தில் ஆண்டுதோறும் நடக்கும் கார் பந்தயத்தில் ஒருமுறை சாவித்திரி கலந்து கொண்டு முதல் பரிசை வென்றார்!
1963–ல் எட்டயபுரத்தில் நிகழ்ந்த பாரதி விழாவில் ஜெமினி, சாவித்திரி கலந்து கொண்டு நன்கொடை வழங்கினர். விழாவிற்குத் தலைமை வகித்த முதல்வர் பெருந்தலைவர் காமராஜர், அவர்களை வாழ்த்திப் பாராட்டிப் பேசினார்.
சாவித்திரி முறையாக பரதநாட்டியம் கற்றுக்கொண்டதால் அழகாக ஆடுவார். வாகினி – விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரித்த ஒரு தெலுங்குப்படத்தில் ஒரு காட்சியில் நடனம் ஆடுவதற்காக வந்த இவரின் நடிப்புத் திறமையைப் பார்த்தறிந்த பின்னர்தான், நாகிரெட்டி சக்ரபாணியார் சாவித்திரியை தாங்கள் தயாரித்த பல படங்களில் கதாநாயகியாக நடிக்கச் செய்து, தங்கள் நிறுவனத்தின் ஆஸ்தான கதாநாயகியாக ஆக்கிக்கொண்டனர்.
சாவித்திரிக்கு ஜோடியாக தெலுங்குப்படங்களில் ஏ.நாகேஸ்வரராவ், என்.டி.ராமராவும், தமிழ்ப்படங்களில் ஜெமினிகணேசனும் நடித்தனர்.
மைசூர் கிருஷ்ணராஜ சாகர் கண்ணம்பாடி அணைக்கட்டையும், அதைச் சார்ந்த அழகிய ‘பிருந்தாவனம்’ பூங்காவையும், பெங்களூரில் ‘விதான் சவுதா’ மாளிகையையும் மற்றும் பல நேர்த்தியான கட்டிடங்களையும் நிர்மாணித்தவர் விஸ்வேஸ்வரய்யா. கர்நாடகாவின் ஈடு இணையற்ற புகழ் பெற்ற பொறியியல் வல்லுநரான விஸ்வேஸ்வரய்யாவின் 101–வது பிறந்த நாளில் அவரை வணங்கி ஆசி பெறுவதற்கென்றே ஜெமினிகணேசன், சாவித்திரி தம்பதியினர் பெங்களூர் சென்று அவரைக்கண்டு ஆசி பெற்று வந்தனர்.
இப்படியெல்லாம் இணைந்து குறைவில்லாத செல்வமும், குழந்தை பாக்கியமும் பெற்றுக் குதூகலமாக வாழ்ந்து வந்த அவர்களின் குடும்ப வாழ்க்கையில் கொடிய விதி விளையாடி அவர்களை விலக்கி வைத்து வேடிக்கை பார்த்தது.
பல வெற்றிப்படங்களில் கதாநாயகியாக நடித்து, தெலுங்கு, தமிழ்ப்பெண்களைப் பெரிதும் கவர்ந்து, புகழும் பொருளும் சம்பாதித்த ‘நடிகையர் திலகம்’ சாவித்திரி, சொந்தமாகத் தயாரித்த ஒரே ஒரு படத்தினாலும், தன்னைச் சூழ்ந்திருந்த சூழ்ச்சிக்காரர்களின் சொல்பேச்சைக் கேட்டும் ஏமாந்துபோய் சொத்தின் பெரும் பகுதியை இழந்தார்.
‘எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம்’ என்பதற்கு இணங்க, பல பாவிகளின் நயவஞ்சகத்தினால் சாவித்திரி மன அமைதியும், உடல் நலமும் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டார்.
உயர் சர்க்கரை நோயை (ஹை டயாப்டிஸ்) தணிப்பதன் பொருட்டு தினமும் காலையில் வெறும் வயிற்றோடு ‘இன்சுலின் இஞ்செக்ஷன்’ போட்டுக்கொள்ள நேரிட்டது. அது தனக்குத்தானே செலுத்திக்கொள்ளக்கூடிய ஊசி மருந்தாகும்.
காலை ஆகாரத்தைத் தயாராக வைத்துக்கொண்டு, ஊசி போட்டுக்கொண்ட உடனே உண்ணவேண்டும். இல்லையென்றால் அந்த ஊசியின் வீரிய விளைவால் விபரீதம் உண்டாகி விடும்!
பட்டத்து ராணிபோல வாழ்ந்து, அதிகாலையில் கண் விழித்துக் காலைக் கடன்கள் முடித்த பின்னர் பழரசம் அருந்திப் படப்பிடிப்பிற்கு தனது படகுபோன்ற காரை (எண்: எம்.எஸ்.இஸட் 444) ஓட்டிச்சென்ற அந்த அழகு தேவதை இப்பொழுது உறங்கி எழுந்ததும் ஊசி போட்டுக்கொள்ள வேண்டிய அவல நிலைக்கு ஆளானார்!
போதாத காலத்தின் காரணமாக போகாத ஊருக்குப் போய்க்கொண்டிருந்தஅவரின் பின்நாளைய சில செய்கைகளை அண்ணன் என்னிடம் தெரிவித்து ‘‘நீ அவளுக்கு புத்திமதி சொல். நீ சொன்னால் ஒருவேளை அவள் கேட்கக்கூடும்’’ என்றார்.
அவர் கூறியதன் பேரில் நான் உண்மையான உள்ளன்போடும், மிக மென்மையான முறையிலும் சொல்லியது அவருக்குப் பிடிக்கவில்லை. ஆகவே, நாளடைவில் அவர் மெல்ல மெல்ல என்னைத் தவிர்க்கத் தொடங்கியதை நான் தெரிந்து கொண்டேன்.
அப்படியும் மனம் கேட்காமல் ஒருநாள் அண்ணியைப் பார்க்க அவர் வீட்டிற்குச் சென்றேன். அங்கிருந்த ஒரு புதிய பணிப்பெண்ணிடம் என் பெயரைச் சொன்னேன்.
அவள் அறைக்குள் சென்று திரும்பி வந்து என்னிடம், ‘அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. அதனால் யாரும் தன்னைத் தொந்தரவு செய்யவேண்டாம்னு சொல்லச் சொன்னாங்க’ என்றாள்.
நான் புரிந்து கொண்டு திரும்பிவிட்டேன். இதை அண்ணனிடம் தெரிவித்தேன். அதைக்கேட்டு அவர் மனம் வருந்தி மவுனம் சாதித்தார்.
இடைக்காலத்தில் எந்த மொழிப்படத்திலும், எந்தச் சிறுவேடத்திலும் அந்த நிகரற்ற ‘நடிகையர் திலகம்’ நடிக்க விரும்பி, ஒரு மலையாளப்படத்திலும், கன்னடப்படத்திலும் நடித்தார். மலையாளப்படத்தில் தனக்குப் பொருந்தாத வேடத்தில் நடித்துப் புகழ் பங்கம் உண்டாக்கிக்கொண்டார்.
கடைசியாக ‘ஆறாத காயா’ என்ற கன்னடப்படத்தில் நடிப்பதற்காக சாவித்திரி தன் மகன் சதீஷுடன் மைசூருக்குச் சென்றார். படப்பிடிப்பு முடிந்து திரும்பி பெங்களூர் வந்து ஓய்வுக்காக ‘சாளுக்யா’ என்ற ஓட்டலில் மகனுடன் தங்கினார். மறுநாள் காலையில் வழக்கம்போல இன்சுலின் ஊசி போட்டுக்கொண்டவர், உடனே சாப்பிடவேண்டும் என்பதை மறந்து நேரத்தைக் கடத்திவிட்டதால் மயக்கமடைந்து உணர்விழந்து விழுந்து விட்டார்.
இதை அறிந்த ஓட்டல் நிர்வாகத்தினர் பெங்களூரில் இருக்கும் சரோஜாதேவிக்கு தகவல் தெரிவிக்கவே, அவர் உடனே புறப்பட்டு ஓட்டலுக்கு வந்து, சாவித்திரியை ஆஸ்பத்திரியில் சேர்க்க ஏற்பாடு செய்தார். பின்னர், இந்த விஷயத்தை ஜெமினிகணேசனுக்குத் தெரிவிக்க சென்னைக்குத் தொலைபேசித் தொடர்பு கொண்டார். அந்தச் சமயத்தில் அவர் ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக மலேசியா சென்றிருந்தார்.
சரோஜாதேவி தன் செல்வாக்கைக்கொண்டு மலேசியாவிலிருந்த ஜெமினிகணேசனுடன் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். உடனே அவர் புறப்பட்டு பெங்களூர் வந்து, மயக்கம் தெளியாத – சுய உணர்வற்ற நிலையிலிருந்த சாவித்திரியை சென்னைக்கு கொண்டு வந்து, நுங்கம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தார்.
அதிலிருந்து தொடர்ந்து ‘கோமா’ என்னும் நினைவற்ற நிலைக்கு ஆளாகி விட்ட அவரை அங்கிருந்து அண்ணா நகரில் அவர் வசித்த வாடகை வீட்டிற்குக் கொண்டு வந்து அவருக்கென்று தனியாக ஒரு செவிலியை நியமித்து அண்ணன் கவனித்து வந்தார்.
அண்ணியை நான் பார்க்கவேண்டும் என்று அண்ணனிடம் சொன்னேன். அதற்கு அவர், ‘வேண்டாம். இப்போ அவ இருக்கிற நிலையைப்பாத்தா நீ  தாங்கமாட்டே’ என்றார். ‘பரவாயில்லை. அண்ணியை நான் பார்த்தே ஆகணும்’ என்றதன் பேரில் அண்ணன் என்னை அழைத்துச்சென்றார்.
அறைக்குள் நுழைந்து என் அன்பிற்கினிய அருமை ‘பாசமலரைப்’ பார்த்தேன். ‘கோமா’ நிலையிலேயே ஒரு ‘கோட்டுச் சித்திரம்’போல கட்டிலில் கிடந்தார். தெய்வீகக்களையோடு மின்னிய அந்தத் தேவதையின் முகம் தீயிலிட்ட மலர்போல கருகிக் காய்ந்துபோயிருந்தது. உதிரம் குன்றி, உடல் வெளுத்து, உதிர்ந்து விழுந்த ஒரு சருகாக அவரது சரீரம் போர்வையோடு போர்வையாக, இருக்கும் இடம் தெரியாமல் இருந்தது.
‘‘மனம் போல் மாங்கல்யம்’’ அணிந்து ‘‘மஞ்சள் மகிமை’’யுடன் ‘மாதர்குல மாணிக்கம்’ ஆக ‘மகாதேவி’யாக வாழ்ந்து மகிழ்ந்த அந்த ‘எங்கள் வீட்டு மகாலட்சுமி’யின் இன்றைய நிலையைக் கண்ணால் கண்டதும் அண்ணன் சொன்னதைப்போல, துன்பம் தாங்க  முடியாமல் துடித்து வாய்விட்டு அழுதேன், அழுதேன்! என் விழிகள் ரத்தக் கோளங்கள் ஆகி இமைகள் வீங்கும் வரை அழுதேன்!
‘இதுக்குத்தான் நான் அப்பவே சொன்னேன். உன்னால் தாங்கமுடியாதுன்னு – நீ கேக்கலே. முப்பது வருஷமா உயிருக்கு உயிரா நீ நேசிச்ச உன் அண்ணியைப் பாத்திட்டீல்ல. போதும். வா போகலாம்’ என்று அண்ணன் கண்ணீருடன் என்னைக் கைத்தாங்கலாக அணைத்தபடி அழைத்துவந்து காரில் அமர்த்தினார்.
இத்தனை ஆண்டுகளில் எத்தனை – எத்தனையோ ஆயிரம் தடவைகள் நாள் தவறாமல் நான் பார்த்து வந்த என் ‘பாசமலரை’ உயிரும் உடலுமாகப் பார்த்தது அதுதான் கடைசித்தடவை! அதன் பிறகு அந்த அன்பின் வடிவத்தை நான் உயிரோடும் பார்க்கவில்லை – உடலோடும் பார்க்கவில்லை!
அன்றைக்கே எனக்குள் நான் முடிவு செய்துவிட்டேன். ‘விதி’யின் மேற்பார்வையில், ‘காலதேவன்’ அண்ணி சாவித்திரியின் இறுதி நாட்களை விரல் விட்டு எண்ணிக் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறான் என்பதை.
‘நடிகையர் திலகம்’ என்னும் துருவநட்சத்திரம் தோன்றிய அதே டிசம்பர் மாதம் 1981–ம் ஆண்டு கிறிஸ்துமஸ் விழாவுக்கு அடுத்த 26–ந்தேதி அண்ணன் தொலைபேசி வாயிலாக எனக்கு தெரிவித்த துயரச் செய்தி:–
நீண்ட மாதங்களும் நாட்களுமாக நினைவிழந்த அந்த நிலையிலும், தனது இன்னுயிரை இழுத்துப்பிடித்து மூச்சுவிட்டுக் கொண்டிருந்த என் அன்பிற்கினிய அருமை அண்ணி, மேற்கொண்டும் தாக்குப்பிடிக்க முடியாமல், இத்தனை நாட்களாக இருத்தி வைத்திருந்தது போதும் என்று – இன்று ஒரேயடியாக தன் மூச்சை நிறுத்திக்கொண்டு விட்டார்.
கேட்கக்கூடாத செய்தியைக் கேட்டு நான் அழவில்லை. துன்பத்தால் துடிக்கவில்லை, துயரத்தால் வெடிக்கவில்லை. எதிர்பாராமல் இடி விழுவது என்பது ஒன்று! எதிர்பார்த்து இடி விழுவது என்பது ஒன்று! இது நான் எதிர்பார்த்த இடி! ஆகவே அமைதியாக மவுனம் காத்தேன். அவருடைய இறுதி யாத்திரையில் நான் கலந்து கொள்ளவும் இல்லை.
அதற்குக் காரணம் அந்தக் காலத்திலேயே நாற்பதாயிரம் ரூபாய் அதிக விலை மதிப்புடைய அசல் வைரமாலையை அணிந்து ஜொலித்த அண்ணி சாவித்திரியின் கழுத்தில் இன்று ‘மரண மாலைகள்’ போடப்பட்டிருக்கும் அந்தக் காணக்கூடாத காட்சியைக் கண்டால், எங்கே மயக்கமடைந்து விழுந்து வைத்து, அங்கே ஓர் அசம்பாவிதம் நிகழ்வதற்குக் காரணமாகி விடுவேனோ என்ற அச்சம்!
ஆகவே, அந்தச் ‘சந்திரஹார’ சாவித்திரியை சடலமாகப் பார்க்க நான் விரும்பவில்லை.
அண்ணன் உயிரோடு கொண்டுபோய் அண்ணா நகர் வாடகை வீட்டில் வைத்த அண்ணியை உயிரற்ற உடலாகக்கொண்டு வந்து நுங்கம்பாக்கம் தன் வீட்டில் வைத்திருந்து, அங்கிருந்து இறுதி யாத்திரைக்கு ஏற்பாடு செய்தார்.
அண்ணனின் மூத்த தாரம் பாப்ஜி  அம்மாவும், இரண்டாவது தாரமும், நடிகையுமான புஷ்பவல்லி அம்மாவும் சாவித்திரியின் சடலத்தைக் கண்டு குமுறி அழுதனர். மற்றும் நடிகைகள் அஞ்சலிதேவி, மனோரமா முதலியோரும் வந்திருந்தனர்.
மறுநாள் காலையில் நான் அண்ணனிடம் துக்கம் விசாரிக்க அவர் வீட்டிற்குச் சென்றேன். என்னைக் கண்ட மாத்திரத்தில் கட்டிப்பிடித்துக்கொண்டு கதறியவர், என் கையைப்பற்றி அழைத்துக்கொண்டு கூடத்திற்குச் சென்று காட்டினார். அங்கு எப்பொழுதோ ஒரு ஓவிய ரசிகர் தன் கைத்தூரிகையால் வரைந்து அன்பளிப்பாக அனுப்பியதும், அண்ணிக்கு மிகவும் பிடித்ததுமான அவருடைய அழகோவியம் ரோஜாமலர் மாலை அணிவிக்கப்பட்டு இருந்தது!
அதன் முன் மண்டியிட்டு அமர்ந்தேன். எவ்வளவு நேரம் அழுதேன் என்று எனக்கே தெரியாது இறுதியில் ஒருவாறாக அண்ணன் என்னை தேற்றினார்.
மாதங்களில் சாவித்திரி மார்கழி!
மலர்களில் அவர் மல்லிகை!
என் அன்பிற்கினிய அருமை அண்ணியே! ‘புனர்ஜன்மம்’ – ‘மறுஜன்மம்’ என்றெல்லாம் ‘பவுராணிகர்’களால் (புராண விரிவுரையாளர்) உரைக்கப்படும் ‘அடுத்த பிறவி’ என்று ஒன்று உண்டு என்றால், அதில் நான் தந்தையாகவும், நீ என் மகளாகவும் – அல்லது நீ தாயாகவும், நான் உன் மகனாகவும் பிறக்கவேண்டும்! அன்னையின் மடியிலும், ஆண்டவரின் திருவடியிலும் உன் சத்திய ஆன்மா, நித்திய இளைப்பாற்றம் காண்பதாக!
முதல்  மனைவியின்  பெருந்தன்மை
பிராப்தம் சினிமா படம் தோல்வி, அதனால் ஏற்பட்ட பண நெருக்கடி, வருமானவரி சோதனை, ஜெமினியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு போன்ற வற்றால் சாவித்திரி வேதனையில் இருந்த நேரம் அது. கடன்களை அடைக்க தனது மாளிகையை விற்கும் நிலையும் அவருக்கு வந்தது.
இந்த நிலையில் சாவித்திரி தன் மகள் விஜியை நெல்லூரைச் சேர்ந்த தனது சொந்த ஒன்றுவிட்ட அண்ணாவின் பிள்ளை கோவிந்தராவுக்கு திருமணம் செய்து வைக்கத் தீர்மானித்து கணவரிடம் தெரிவித்தார்.
அப்பொழுது விஜி பத்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தது. ‘பதினைந்து வயது தானே ஆகுது. கல்யாணத்துக்கு இப்போ என்ன அவசரம்? படிச்சி முடிக்கட்டும் அப்புறம் பார்த்துக்கலாம்’ என்று ஜெமினிகணேசன் சொன்னார்.
ஆனால், சாவித்திரி தன் மகள் திருமண விஷயத்தில் உறுதியாக இருந்தார். மாப்பிள்ளை வீட்டாருடன் பேசி முகூர்த்த நாளும் குறித்து முடிவு செய்து விட்டு தன் கணவரிடம் தெரிவித்தார்.
எதிர்பாராதவிதமாக அதே தேதியில் ஜெமினி கணேசன் தென்ஆப்பிரிக்காவில் நடக்க இருந்த சினிமா விழாவில் கலந்து கொள்வதாக முன்னதாக ஒப்புதல் கொடுத்திருந்தார். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்திருந்தார்.
இதன் காரணத்தினால் தவிர்க்க முடியாத சங்கட நிலை ஏற்பட்டு, தன் மகளின் திருமண விழாவில் பங்கேற்க இயலாது என்று தெரிவித்து, தென்ஆப்பிரிக்காவுக்குப் புறப்பட்டுப் போய்விட்டார் ஜெமினி.
ஜெமினிகணேசன் தென் ஆப்பிரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றபிறகு, சாவித்திரி நுங்கம்பாக்கத்தில் உள்ள அவருடைய வீட்டிற்குச் சென்று மூத்தவரான ‘பாப்ஜி’ என்கின்ற திருமதி அலமேலு அம்மாவைச் சந்தித்தார்.
பட்டுப்புடவை, மஞ்சள் குங்குமம், கனிகள் முதலிய சம்பிரதாய மரியாதைகளுடன் அவர் காலில் விழுந்து நமஸ்கரித்து, தனது மகள் விஜய சாமுண்டீஸ்வரியின் திருமணத்தை தந்தைக்குத் தந்தையாகவும், தாய்க்குத் தாயாகவும் முன்நின்று நடத்தி வைத்து அவளை ஆசீர்வதிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொண்டார்.
பண்பும், பதிபக்தியும் நிறைந்த பதிவிரதா சிரோமணியான பாப்ஜி அம்மாள், ‘இது உன் மகள் கல்யாணம் அல்ல; என் மகள் கல்யாணம்’ என்று கூறி, சாவித்திரியின் வேண்டுகோளை ஏற்று சந்தோஷத்துடன் தன் சம்மதத்தைத் தெரிவித்தார்.
15 வயது நிறைந்து மூன்று நாட்கள் ஆகி இருந்த – உலக விவரம் ஒன்றுமே அறியாத விஜயசாமுண்டீஸ்வரி என்கின்ற ‘விஜி பாப்பா’விற்கும், அதன் மைத்துனர் முறையுள்ள கோவிந்தராவுக்கும் ‘பெரியம்மா’ பாப்ஜி முன்னிலையில் – அவருடைய அன்பு நிறைந்த ஆசீர்வாதத்துடன் திருமணம் சிறப்பாக நடைபெற்றது.
தென்ஆப்பிரிக்காவில் இருந்து திரும்பிய ஜெமினிகணேசன் தன் மகள் சாமுண்டீஸ்வரியின் இல்லத்திற்குச் சென்று மணமக்களை ஆசீர்வதித்துவிட்டுக் கூறினார்:–
‘உன் பெரியம்மா பாப்ஜிக்குப் பிறந்த உனது மூத்த சகோதரிகள் 4 பேரையுமே நல்லா படிக்க வச்சிருக்கேன். அவுங்கள மாதிரி நீயும் மேல் படிப்பு படிக்கணும். கல்யாணம் ஆனாலும் பரவாயில்லை. நீ காலேஜ்ல சேர்ந்து உனக்கு விருப்பமான குரூப் எடுத்துக்கிட்டுபடி. அதுக்கு வேண்டியதை நான் செய்யிறேன்’ என்று கூற, விஜி அதற்குச் சம்மதித்து பிரபல ‘எத்திராஜ் பெண்கள் கல்லூரி’யில் சேர்ந்து பி.ஏ.லிட்டரேச்சரை (ஆங்கில இலக்கியம்) பிரதானப்பாடமாக எடுத்துக்கொண்டு படித்தார்.
நெகிழ்ச்சியான  தருணம்
கடந்த 2013–ம் ஆண்டு டிசம்பர் 2–ந்தேதி காலையில் முதல் தொலைபேசி மணி ஒலித்தது. ரிஸீவரை எடுத்துக் காதில் வைத்தேன். கொம்புத்தேனினும் இனிய ஒரு பாசக்குரல் கேட்டது.
‘‘மாமா! விஜி பேசுறேன். இன்னிக்கு என் 56–வது பிறந்த நாள். இப்போதான் பூஜை பண்ணி முடிச்சிட்டு முதல் முதல்லே உங்ககிட்டே ஆசீர்வாதம் வாங்குறதுக்காகக் கூப்பிட்டேன். என்னை ஆசீர்வதிங்க மாமா.’’
இந்த இனிப்புச் செய்தியைக் கேட்டதுமே என் இதயத்தில் ஓர் இன்ப அதிர்வு ஏற்பட்டது. ‘‘ஐயோ நான் அல்லவா முந்திக்கொண்டு முதன் முதலில் ஆசீர்வதித்துப் பேசியிருக்கவேண்டும். சற்றுத் தாமதித்துவிட்டேனே!
1958–ம் ஆண்டில், மாதங்களில் சிறந்த மார்கழித் திங்களில் இனிய இளங்குளிரில் தியாகராயநகர் அபிபுல்லா சாலையில் அமைந்திருந்த அந்த அழகிய மாளிகையில், எனக்குத் தெரிந்து பிறந்து, பின்னர் 1959–60 களில் ‘‘பாசமலர்’’ படப்பிடிப்பு நடைபெற்ற நாட்களில், நான் தொட்டிலாட்டித் தூங்க வைத்துக் கொஞ்சி மகிழ்ந்த அந்தக் குங்குமக் குழந்தைக்கு இன்று 55 வயது நிறைவு பெற்று 56 ஆரம்பம் ஆகிவிட்டதா? என்னால் நம்பவே முடியவில்லை.
‘காலதேவன்’ தனது ரதத்தை எவ்வளவு வேகமாகவும், விரைவாகவும் செலுத்தி இருக்கிறான்.
‘‘என்னை ஆசீர்வதிங்க மாமா’’ என்று விஜி கேட்ட மாத்திரத்தில் என் நினைவு 53 ஆண்டுகளுக்கு முந்தி நீந்திச் சென்றது. 1960–ல் ‘‘பாசமலர்’’ படப்பிடிப்பு! மாலையும் கழுத்துமாக மணமகள் கோலத்தில் பாசமலரான தங்கை சாவித்திரி வந்து, அன்பின் வடிவமான அண்ணன் சிவாஜியின் முன் குனிந்து அவர் பாதந்தொடுவார். அப்பொழுது சிவாஜி சொல்வதாக நான் எழுதியிருந்த வசனம் இது:–
‘‘மஞ்சள் குங்குமத்தோட நீ மகராசியாக வாழணும் தாயே!’’
இந்த வசனம் என் நினைவுக்கு வந்தது. அன்று அண்ணி சாவித்திரிக்காகவே நான் எழுதிய அதே சிறப்பு வசனத்தை இன்று 53 ஆண்டுகளுக்குப்பிறகு, அவருடைய ‘காதல் சிப்பி’யில் முதன் முதலாக விளைந்த அந்த முத்துக்குக் கூறி வாயார – மனதார வாழ்த்தி மகிழ்ந்தேன்.
கற்பூர  தீபம்
விஜி பிறந்து 8 ஆண்டுகளுக்குப் பிறகு 1965–66 வாக்கில் சாவித்திரி இரண்டாவது முறையாகக் கருத்தரித்து சதீஷை தன் வயிற்றில் சுமந்தார். அப்போது ஏ.பி.நாகராஜனின் ‘சரஸ்வதி சபதம்’ படப்பிடிப்பு நடைபெற்றது.
சாவித்திரி கர்ப்பத்துடன் மேக்–அப் முடிந்து ஆடை அலங்காரத்துடன் அசல் சரஸ்வதிபோல படப்பிடிப்புத் தளத்திற்குள் நுழைந்ததும் அப்படியே நிறுத்தி வைத்து, அவருக்குக் கற்பூர தீபாராதனை காட்டுவதை அன்றாட வழக்கமாக வைத்துக் கொண்டிருந்தார்.
அண்ணி சாவித்திரி எங்கே – எந்தப் படப்பிடிப்பில் இருந்தாலும் தினமும் தவறாமல் சென்று அவரைப் பார்த்து வருவதை அந்தக் காலத்திலிருந்தே சென்டிமென்டல் வழக்கமாக வைத்துக் கொண்டிருந்த நான், ‘சரஸ்வதி சபதம்’ ஷூட்டிங் சமயத்தில் ஒருநாள் காலை ‘மேக்–அப்’ அறையில் அவரைப் பார்த்துப்பேசிவிட்டு அவரைப் பின்தொடர்ந்து ஸ்டூடியோ தளத்திற்குள் வந்தபோதுதான் மேற்படி கற்பூர தீபாராதனைக் காட்சியைக் கண்டு அப்படியே மெய்சிலிர்த்துப் போய் அண்ணன் ஏ.பி. என்னிடம் இப்படிக் கூறினேன்:–
‘அண்ணே! ஒரு நடிகையைத் தெய்வமாகப் பாவித்து, படப்பிடிப்புத் தளத்தில் அவருக்குக் கற்பூர தீபாராதனையுடன் மரியாதை செய்கின்ற ஒரே தயாரிப்பாளர் – இயக்குனர் நம்ம சினிமா உலகத்தில நீங்க ஒருத்தர்தான். நீங்க ஒரு கர்ப்பஸ்திரீயான சாவித்திரிக்கு அல்ல – அந்தக் கலைமகளுக்கே கற்பூர தீபாராதனை காட்டி மரியாதை செலுத்துறீங்க’.
இதைக்கேட்டு அவர் மிகவும் நெகிழ்ந்து போனார்.  dailythanthi.com

கருத்துகள் இல்லை: