வியாழன், 31 ஜனவரி, 2013

விஸ்வரூபம்: முதல்வரின் ‘சர்ச்சைக்குரிய’ பேச்சு!

Viruvirupu
சற்றுமுன் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் ஜெயலலிதா, “இஸ்லாமிய அமைப்புகளால் வன்முறை வெடிக்கலாம் என்ற உளவுத்துறை எச்சரிக்கை கிடைத்த காரணத்தால் மட்டுமே விஸ்வரூபம் படத்திற்கு தடை விதிக்கப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளார். நேற்று ஒரு தினம், ஒரு காட்சி காண்பிக்கப்பட தொடங்கியபோதே, தமிழகத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களை அவர் சுட்டிக்காட்டினார்.
விஸ்வரூபம் படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க நேற்று நடத்தப்பட்ட வன்முறைச் சம்பவங்களில், பெற்றோல் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன, படத்தின் பேனர்கள் தீக்கிரையாக்கப்பட்டன, தியேட்டர்கள்மீது கல்லெறி சம்பவங்கள் நடைபெற்றன என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
விஸ்வரூபம் படம் தமிழகத்தில் 524 திரையரங்குகளில் திரையிடப்பட இருந்தது. இப்படத்திற்கு 24 இஸ்லாமிய கூட்டமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்த நிலையில், படம் வெளியிடப்பட்டால், வன்முறை வெடிக்கலாம் என்று உளவுத் துறை அறிக்கை கொடுத்திருந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.

இஸ்லாமிய அமைப்புகளின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் படத்தை திரையிட அனுமதித்தால் அப்படம் திரையிடப்படும் 524 திரையரங்குகளிலும் 56,446 காவலர்கள் தேவை. அந்த அளவுக்கு போதுமான காவலர்கள் படை இல்லை. சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் கடமை அரசுக்கு உண்டு. அதனால்தான், படத்துக்கு தடை விதிக்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தப் பேச்சு, பல சர்ச்சைகளை ஏற்படுத்தப் போகிறது.
1) 524 திரையரங்குகளுக்கும் பாதுகாப்பு கொடுக்கும் அளவுக்கு, 56,446 காவலர்கள் இருந்தால், இந்தப் படத்துக்கு தடை விதித்திருக்க வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு ஏற்பட்டிருக்காது என்றும், முதல்வர் பேசியதை எடுத்துக் கொள்ளலாம்.
அப்படியானால் மத்திய அரசு, நாம் மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு தருகிறோம், படத்தை திரையிடுங்கள் என்றால் என்னாகும்?
2) “விஸ்வரூபம் படத்திற்கு 24 இஸ்லாமிய கூட்டமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்த நிலையில், படம் வெளியிடப்பட்டால், வன்முறை வெடிக்கலாம் என உளவுத்துறை அறிக்கை கொடுத்தது” என்றால் என்ன அர்த்தம்? இஸ்லாமிய அமைப்புகள் வன்முறையில் ஈடுபடும் அமைப்புகள் என்கிறாரா? இதை அந்த அமைப்புகள் எதிர்க்க மாட்டார்களா?
3) இந்தப் படத்தை தாமும் பார்க்கவில்லை என்கிறார். தமது அதிகாரிகளும் பார்த்ததில்லை என்கிறார். அந்த வகையில் படத்தில் என்ன கருத்துக்கள் உள்ளன என அரசுக்கு தெரியாது. படத்தை தடை செய்யும்படி, ‘வன்முறை செய்யக்கூடிய’ அமைப்புகள் கடிதம் கொடுத்ததால் தடை செய்தோம் என்பது எவ்வளவு பெரிய ஆபத்து?
“படத்தை பார்த்தோம். அதில் ஒரு சமூகத்தை பாதிக்கும் கருத்துக்கள் உள்ளன என அரசு கருதுகிறது. எனவே நியாயமான கோரிக்கைக்கு அரசு ஆதரவு கொடுக்கிறது” என்று சொல்வது வேறு விஷயம். படத்தையே பார்க்காமல் தடை என்றால், நாளைக்கே மணிரத்னத்தின் கடல் படத்துக்கு எதிராக 500 தியேட்டர்களுக்கு முன்னால் மீனவர்கள் திரளக்கூடும் என்று உளவுத்துறை சொன்னால், தடை உண்டா?
4) இஸ்லாமிய அமைப்புகளுக்கு படத்தை முன்கூட்டியே போட்டு காட்டியிருந்தால், பிரச்னை வந்திருக்காது என்றும் முதல்வர் கூறியிருக்கிறார். ஆதிபகவன் படத்தை ரிலீஸ் பண்ணுவதற்கு முன் இந்து அமைப்புகளுக்கு போட்டு காட்ட வேண்டும் என இருவர் மனு கொடுத்துள்ளனர். போட்டு காட்ட வேண்டுமா? தேவையில்லையா?
முதல்வரின் பேச்சினால், இதுபோல பல சர்ச்சைகள் ஏற்பட சாத்தியம் உள்ளது.

கருத்துகள் இல்லை: