வியாழன், 18 அக்டோபர், 2012

சேது சமுத்திரக் கால்வாய் வேண்டாமாம்

 2001 May 10 அதிமுக தேர்தல் அறிக்கை 2427 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கிய அத்திட்டம் முழுமையாக முடிந்தால் தமிழ்நாட்டின் வளம் மட்டுமல்ல; இந்தியா மட்டுமல்ல, தென்கிழக்காசிய நாடுகளும், கடலோரப் பகுதிகளில் வாழும் நாடுகள் அனைத்தும் பயன் அடையும்; வாணிபமும், தொழிலும் பெருகும். அந்நிய முதலீடு அதிகரிக்கும்; அந்நியச் செலாவணி அதிகம் கிடைக்கும். கப்பலின் பயண தூரம் வெகுவாகக் குறைவதால் எரிபொருளும், பயண நேரமும் மிச்சமாகும். ஏற்றுமதி இறக்குமதி அதிகரிக்கும்; குறிப்பாக, இராமநாதபுரம் போன்ற மிக மிகப் பிற்படுத்தப்பட்ட தமிழக தென்பகுதி மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும்; வேலை வாய்ப்புப் பெருகும்; தூத்துக்குடி துறைமுகம் சர்வதேச அளவில் விரிவடையும்; சுற்றுலா வளர்ச்சி அடையும்.
தமிழர்களின் நீண்ட நாள் எதிர்பார்க்கும் வளர்ச்சித் திட்டமான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை வேண்டாம் என்று கூறும் தமிழக முதலமைச்சர் வீண் அவப் பெயரைச் சுமக்கிறார்; கட்சிக் கண்ணோட்டமின்றி கிளர்ந்தெழுக தமிழர்களே என்று வேண்டுகோள் விடுத்துள்ள திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களின் அறிக்கை வருமாறு:
கடந்த 150 ஆண்டுகாலமாய், தமிழ்நாடும், தமிழக மக்களும் நிறைவேற வேண்டும் இந்த சேது கால்வாய்த் திட்டம் என்று விழைந்த ஒரு திட்டம்; பிரிட்டிஷ் நிபுணர்கள் முதல் நீதிக்கட்சியின் நல் முத்தான சர்.ஏ. இராமசாமி (முதலியார்) குழுவரை ஆய்வு அறிக்கைகள் தந்து நடைமுறைக்கு வரவேண்டும் என்று ஏங்கிய ஒரு திட்டம், தமிழ்நாட்டில் 40-க்கு 40 இடங்களை 2004 நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகளால் உருவாக்கப்பட்ட அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசு காங்கிரஸ் - தி.மு.க. கூட்டு அமைச்சரவையில்தான் நனவாகியது; நடைமுறையில் எடுத்துக்கொண்டு மதுரையில் கூட்டணிக் கட்சிகள் - இடதுசாரி கட்சிகள், பிரதமர் (UPA) அதன் தலைவர் திருமதி சோனியா காந்தி உள்பட பலரும் கலந்துகொண்டு 2.7.2005 இல் தொடக்க விழா நடைபெற்றது.
சேது சமுத்திரத் திட்டம் எப்படி பயன் அளிக்கும்? என்பதை 2001 மே 10 இல் நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது அ.தி.மு. கட்சியின் சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 இத்திட்டத்தின் தேவையை, முக்கியத்துவத்தை கழக அரசு (அ.தி.முக. அரசு) வெகுவாக உணர்ந்திருக்கிறது. நிதி நெருக்கடியை ஒரு சாக்காகக் கூறிக் கொண்டிருக்காமல், உலக வங்கி போன்ற பன்னாட்டு நிறுவனங்களுடன் மத்திய அரசு தொடர்பு கொண்டு, வேண்டிய நிதியைத் தேடி, இத்திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து, ஒரு காலக் கெடுவுக்குள் இத்திட்டத்தை நிறைவேற்றும்படி மய்ய அரசை விடாது தொடர்ந்து வலியுறுத்தும்.
இதில் எது இப்போது மாறிவிடும்? மாறிவிட்டது?
இப்பொழுது இத்திட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்று தலைகீழாக தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதற்குக் கூறும் முக்கிய காரணம் என்ன?
இராமன் பாலம் உடைபடுகிறது என்று கூறி வழக்குத் தொடர்வது அறிவியல் கண்ணோட்டத்திலும் பெரியார், அண்ணா கருத்தியல் அடிப்படையிலும் சரியானதுதானா?
உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் 2009-லேயே மூன்றாண்டுகளுக்கு முன்பே முடிந்து, கப்பல்கள் ஓடியிருக்கவேண்டிய கால்வாயின் வேலைத் திட்டப் பணிகள் முடங்கின. சுமார் ரூ.2000 கோடிக்குமேல் - மக்கள் வரிப் பணம் செலவாகியுள்ளது. முடிக்க இன்னும் 12 கிலோ மீட்டர் தூரம்தான் பாக்கியுள்ளது.
இதற்கிடையில், எந்தவித அறிவியல், புவியியல் ஆதாரமும் இல்லாது, வெற்று மத நம்பிக்கையை மட்டுமே கொண்ட மணல் திட்டுக்கள் இராமன் கட்டிய பாலம் எனப் பொருந்தாத காரணம் காட்டுவதும், கூடாது என்பதும் சரியா?  (உண்மை அரசியல் காரணம் இந்தப் பெருமை அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு, குறிப்பாக தி.மு.க.வுக்கு வந்துவிடக்கூடாது என்பதைத் தவிர வேறில்லை) பச்சோரி தலைமையில் நிபுணர் குழு மூன்றாண்டுகள் எடுத்து அறிக்கையை உச்சநீதிமன்றத்திடம் தந்துவிட்டதே! இனியும் என்ன பிரச்சினை?
அந்த அறிக்கையில், தற்போது பணிகள் நடைபெற்று முடிவடையும் ஆறாம் வழித்தடத்தைத் தவிர வேறு வழித்தடம் சாத்தியமில்லை; மீன் பிடிப்பு பாதிக்கப்படாமல், சுற்றுச்சூழலுக்கும் கேடு ஏற்படாமல் செய்ய இந்த ஆறாம் வழித்தடம்தான் உகந்தது என்று கூறிவிட்டது.
உடனடியாக மத்திய அமைச்சரவை கூடி, இதனை ஏற்று பணி தொடரவேண்டியது அவசரமும், அவசியமும் ஆகும்!
இந்நிலையில் இராமன் பாலம் என்று திடீரென்று முன்பு சொல்லாத நிலைப்பாட்டை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் திடீரென்று எடுப்பதும், அதையே தமிழக அரசு நிலைப்பாடுபோல் செய்திகள் வருவதும் முற்றிலும் மக்கள் விரோதம்; சட்ட விரோதம்; நியாய விரோதமாகும்!
மேற்காட்டிய அதே 2001 அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியதென்ன?
இதோ (பக்கம் 84)
...இத்திட்டத்தின்படி இராமேஸ்வரத்திற்கும், இலங்கை தலைமன்னாருக்கும் இடையில் உள்ள ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் கப்பல் போக்குவரத்திற்குத் தடையாக உள்ள மணல் மேடுகள், பாறைகளை அகற்றி ஆழப்படுத்த கால்வாய் அமைப்பதுதான் சேது சமுத்திரத் திட்டத்தின் தலையாய நோக்கம் என்று கூறியுள்ளார்களே?
மக்கள் பணம் இவ்வளவு 2000 கோடி ரூபாய்களைச் செலவழித்த திட்டத்தை - இன்னும் குறைவான தூரமே எஞ்சியிருக்கும் முடிக்கப்பட வேண்டிய திட்டத்தை, வெறும் கற்பனை இராமன் பாலம் காரணங்களைக் காட்டி, நிறுத்திட வேண்டுமென்றால், அதைவிட மிகப்பெரிய மக்கள் விரோதப் போக்கு, வேறு உண்டா?
இதுதான் எம்.ஜி.ஆர். அரசா?
தமிழர்களே, சிந்தியுங்கள்! கட்சி, ஜாதி, மதம் பார்க்காமல் - வளர்ச்சிக் கண்ணோட்டத்தோடு எண்ணிப் பாருங்கள்!
அதுமட்டுமா?! அண்ணா தி.மு.க. எம்.ஜி.ஆர். அரசு என்று கூறிடும் இக்கட்சியின் அதே தேர்தல் அறிக்கையின் 84 ஆம் பக்கத்தில், இத்திட்டத்திற்கு ஒரு உந்துதலை 1981 இல் ஆட்சியில் இருந்த டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் அரசுதான் கொடுத்தது.
இருப்பினும் திட்டத்தை நிறைவேற்றவேண்டிய மத்திய அரசு, இத்திட்டத்திற்கான உரிய கவனத்தையோ, முக்கியத்துவத்தையோ கொடுக்கவில்லை என்று குற்றம் சுமத்தியது.
அதே கனவு - விழைவு- விருப்பம் நனவாகி, நிறைவேறும்போது இராமனைக் காட்டி ரத்து செய்யவேண்டும் என்று கூறுவது எம்.ஜி.ஆருக்கும் இழைக்கும் துரோகம் அல்லவா?
நடுநிலையாளர்களே! எம்.ஜி.ஆர். சீடர்களே, சிந்தியுங்கள்!
தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஒருவரே, சேது சமுத்திரத் திட்டம் முடியுந் தறுவாயில் இப்படி முட்டுக்கட்டை போட்டு நிறுத்தினார் என்ற அவப்பெயரை காலமெல்லாம் அம்மையார் சுமக்கப் போகிறாரா?
பா.ஜ.க.கூட, வழித்தடம் மாற்றம்தான் கேட்டதே தவிர, திட்டமே கூடாது என்று கூறவில்லை; அவர்களால் கூறவும் முடியாது. காரணம், அந்த வழித்தடத்தைத் தெரிவு செய்த ஆட்சியே அவர்கள் ஆட்சி. அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியோ, தி.மு.க.வோ அல்ல!
ஏற்கெனவே தி.மு.க. தலைவர் கலைஞர் விரிவாக நேற்று அறிக்கை விடுத்துள்ளார். இன்று மார்க்சிஸ்ட் கட்சியும், பா.ம.க. தலைவரும் இதனைக் கண்டித்து குரல் எழுப்பியுள்ளதை வரவேற்கிறோம்.
எனவே, ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்று திரண்டு குரல் கொடுத்து, தமிழன் கால்வாய் என்ற சேது சமுத்திரத் திட்டத்தை முடிக்க ஓர் அணியில் நிற்க வாருங்கள்! கிளர்ந்தெழுங்கள்!!
இதில் அரசியல் கண்ணோட்டம் வேண்டாம்!

கருத்துகள் இல்லை: