ஞாயிறு, 14 அக்டோபர், 2012

ஜி.கே.வாசன், கனிமொழி, அன்புமணி பாராளுமன்ற தேர்தலில் போட்டி!

சென்னை::தமிழ்நாட்டை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி.க்கள் கனிமொழி (தி.மு.க.), ஞானதேசிகன் (காங்கிரஸ்), டி.ராஜா (கம்யூனிஸ்டு), திருச்சி சிவா (தி.மு.க.), மைத்ரேயன் (அ.தி.மு.க.), இளவரசன் (அ.தி.மு.க.) ஆகியோரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு (2013) ஜூலை மாதம் முடிவடைகிறது.
மத்திய மந்திரிகள் ஜி.கே. வாசன், ஜெயந்தி நடராஜன் (காங்கிரஸ்) மற்றும் பாலகங்கா (அ.தி.மு.க.) அமீர் அலி ஜின்னா, வசந்தி ஸ்டான்லி (தி.மு.க.), டி.கே. ரங்கராஜன் (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு) ஆகியோரது பதவிக்காலம் 2014 ஏப்ரல் மாதம் முடிவடைகிறது.
பாராளுமன்ற தேர்தல் முன்கூட்டியே வரவும் வாய்ப்பு இருப்பதாக கருதுவதால் தேர்தலில் களம் இறங்கவும் இவர்களில் சிலர் முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக இதுவரை நேரடியாக தேர்தலில் போட்டியிடாத கனிமொழி, ஜி.கே. வாசன், அன்புமணி ஆகியோர் வருகிற தேர்தலில் களம் இறங்க முடிவு செய்துள்ளனர்.
கனிமொழி எம்.பி வெற்றி வாய்ப்புள்ள இரு தொகுதிகளை அலசி வருகிறார். ஆனால் இதுவரை எந்தெந்த தொகுதிகள் என்பது உறுதியாகவில்லை என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன. பா.ம.க. சார்பில் முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி இந்த தேர்தலில் நேரடியாக மக்களை சந்திக்க முடிவு செய்துள்ளார். அவர் தர்மபுரி, ஆரணி ஆகிய இரு தொகுதிகளையும் குறிவைத்துள்ளார். ஆரணி தொகுதியில் அன்புமணியின் மாமனார் கிருஷ்ணசாமி (காங்கிரஸ்) தற்போது எம்.பியாக இருக்கிறார்.
இந்த இரு தொகுதிகளிலும் அன்புமணி அடிக்கடி சுற்றுப்பயணம் செய்து கட்சி கூட்டங்கள் நடத்தி வருகிறார். முக்கிய பிரமுகர்களையும் சந்தித்து வருகிறார். அன்புமணி கூறும் போது, தனித்து போட்டி என்பதில் பா.ம.க. உறுதியாக இருக்கிறது. வெற்றி வாய்ப்புள்ள 15 தொகுதிகளை தேர்வு செய்துள்ளோம். அந்த தொகுதிகளுக்கு சென்று இளைஞர்களை சந்தித்து வருகிறோம்.
ஒவ்வொரு கிராமத்திலும் 24 இளைஞர்களை தேர்வு செய்துள்ளோம். அவர்கள் மக்களை திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். கட்சி தலைமை போட்டியிட கூறினால் நிச்சயம் போட்டியிடுவேன் என்றார்.
காங்கிரஸ் மத்திய மந்திரி ஜி.கே. வாசன் இதுவரை நேரடியாக தேர்தலில் போட்டியிட்டது இல்லை. 2 முறை ராஜ்யசபா எம்.பியாக தேர்வு செய்யப்பட்ட ஜி.கே. வாசன் முதல் முறையாக நேரடியாக மக்களை சந்திக்க முடிவு செய்துள்ளார்.
தஞ்சாவூர், மயிலாடுதுறை தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் அவர் போட்டியிடுவார் என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த இரு தொகுதிகளிலும் ஜி.கே. வாசன் தேர்தல் முன்னோட்ட பணிகளை ஓசையின்றி செய்து வருகிறார்

கருத்துகள் இல்லை: