வியாழன், 2 ஆகஸ்ட், 2012

ரொட்டி சுடும் தவாவில்தான் செப்பு சுட்டிருக்கிறார்கள். வெள்ளீயம் சுட்டிருக்கிறார்கள்

உலோகத்தை உருக்குதல்

மேட்டர் / அத்தியாயம் 2
தங்கம், வெள்ளி, செப்பு, வெள்ளீயம், காரீயம், இரும்பு, பாதரசம் – இவைதான் ஆதி மனிதர்கள் முதலில் கண்டறிந்த உலோகங்கள் என்று சொல்லியிருந்தேன். இதில் தங்கம் மட்டும்தான் சும்மாவே கிடைக்கக்கூடியது என்றும் சொல்லியிருந்தேன்.
இந்த உலோகங்கள் பளபளப்பானவை. ஜொலிப்பவை. பெரும்பாலான உலோகங்கள் வெள்ளை அல்லது கொஞ்சம் சாம்பல் நிறம் கொண்டவை. வெகுசில மட்டுமே வேறு வேறு நிறத்தவை. தங்கம் மஞ்சள் நிறம். செப்பு சிவப்பும் பழுப்புமானது. சூடாக்கினால் இவற்றை மெல்லிய தகடாக அடிக்க முடியும். கம்பியாக நீட்ட முடியும். கொதிக்கவைத்தால் ஒரு குறிப்பிட்ட சூட்டில் உருகி வழிந்து திரவமாக ஓடும். குளிரும்போது மீண்டும் கெட்டியாக, திடமாக ஆகிவிடும்.
ஆனால் இத்தனையும் அது தனிமமாக இருக்கும்போதுதான். இயற்கையில் செப்பும் வெள்ளீயமும் அப்படிக் கிடைக்காது. செப்பு (ஆங்கிலத்தில் காப்பர்) இரண்டு வேறு வேறு தனிமங்களுடன் இணைந்த வடிவில் கிடைக்கிறது. ஆக்சிஜனுடன் இணைந்து காப்பர் ஆக்சைடாக. கந்தகத்துடன் இணைந்து காப்பர் சல்ஃபைடாக. இந்த இரண்டு சேர்ம வடிவங்களும் வேறு பல உலோகச் சேர்மங்களுடனும் மண், கல் குப்பைகளுடனும் சேர்ந்து கிடைக்கும்.
இதெல்லாம் இன்றைய பெயர்கள். இப்போதைக்கு கந்தகம், ஆக்சிஜன் ஆகியவை பற்றி அதிகம் கவலைப்படவேண்டாம். அவற்றைப் பின்னர் விரிவாகப் பார்ப்போம்.
வெள்ளீயமும் கிட்டத்தட்ட இதேமாதிரிதான். இதனை ஆங்கிலத்தில் டின் என்று அழைப்போம். பெரும்பாலும் டின் ஆக்சைடாக. கொஞ்சமாக டின் சல்ஃபைடாக.
செப்பும் வெள்ளீயமும் ஆக்சைடாக இருக்கும் வடிவத்தை எடுத்துக்கொள்வோம். அகஸ்மாத்தாக இந்த ஆக்சைடுகள் ஏதோ ஓர் ஆட்டிடையனுக்குக் கிடைத்திருக்கலாம். ஆடுகள் மேய்ந்துகொண்டிருக்கின்றன. குளிர் அடிக்கிறது. ஆட்டுத்தோலால் ஆன ஆடையை இறுக்கிக் கட்டிக்கொள்கிறான். கொஞ்சம் கதகதப்புக்கு தீ மூட்டினால் தேவலாம்போல் இருக்கிறது.
காய்ந்த மரத்துண்டுகளை வைத்து தீ மூட்டுகிறான். விளையாட்டாக, செப்பு, வெள்ளீய ஆக்சைடு தாதுக் கட்டிகளை அந்த நெருப்பில் எறிகிறான். இரவு முழுதும் தகதகவென எரியும் நெருப்பு அணைந்தபின், கொஞ்சமாக அடியில் பளபளப்பாக செப்பும் வெள்ளீயமும் கிடைக்கிறது.
இப்படித்தான் நானும் நினைத்துப் பார்த்தேன். ஆனால் உண்மையில் அப்படி ஏதும் கிடையாதாம். வேறு ஒரு முக்கியமான முன்னேற்றம் அதற்குமுன் நடந்திருக்கிறது. அதுதான் சுட்ட களிமண்.
மாபெரும் அற்புதம்.
சிந்து-சரஸ்வதி நதி நாகரிகம் முழுவதுமே இந்த சுடுமண் அற்புதங்களால் ஆனது. களிமண்ணைப் பிசைந்து ஒரு வடிவம் கொடுத்து வைக்கோலால் மூடி, நெருப்பு வைத்துக் கொளுத்தி பின் எடுத்துப் பார்த்தால் பானை, செங்கல் என்று சுட்ட மண் பொருள்கள் நமக்குக் கிடைக்கும். இவை பிரமாதமானவை. செராமிக் என்று இன்று நாம் சொல்லும் ஒரு பொருள் இது. குறைந்தபட்சம் 10,000 ஆண்டுகளுக்குமுன்னரே களிமண்ணால் ஆன செங்கற்கள் உருவாக்கப்பட்டுவிட்டன.
இந்த செங்கற்கள் எக்கச்சக்க சூட்டைத் தாங்கக்கூடியவை. வட இந்திய நான், ரொட்டி ஆகிய பதார்த்தங்கள் இதுபோன்ற செங்கல் தவாவில்தான் செய்யப்படுகின்றன. இப்படி ரொட்டி சுடும் தவாவில்தான் செப்பு சுட்டிருக்கிறார்கள். வெள்ளீயம் சுட்டிருக்கிறார்கள்.
செங்கற்களை நெருக்கமாகக் கொண்டு பெரிதாக ரொட்டி சுடும் அடுப்பு ஒன்றைச் செய்துவைத்துக்கொள்ளுங்கள். அதற்குள் செப்பு ஆக்சைடு அல்லது வெள்ளீய ஆக்சைடு, நிறைய கரித்துண்டு (ஆட்டுக்கறி அல்ல, அடுப்புக்கரி) ஆகியவற்றைக் கலந்து போடுங்கள். அடுப்பைச் சூடாக்குங்கள்.
கரி என்ன செய்யும்? செப்பு ஆக்சைடு அல்லது வெள்ளீய ஆக்சைடில் உள்ள ஆக்சிஜனை கரி பிடுங்கிக்கொண்டு கரியமில வாயுவாக (கார்பன் டை ஆக்சைடு) மாறும். செப்பும் வெள்ளீயமும் உருகி வழிந்து வெளியேறும்.
அவ்வளவு எளிதானது. வெறும் காற்றில் மரத்துண்டுகளை எரித்து அதில் செப்பு ஆக்சைடைப் போட்டால், அங்கே செப்பு பிரிந்துவரும் அளவுக்கான சூடு கிடைக்காது. அதற்கு பஞ்சாபி தாபா அடுப்புபோல ஒன்று வேண்டியிருக்கும்.
செப்பு சல்ஃபைடு விஷயத்திலும் கிட்டத்தட்ட இப்படித்தான். ஆனால் கரியமில வாயுவை சுவாசித்தால் நமக்குப் பெரிதாகப் பிரச்னை ஏதும் வராது. சல்ஃபைடு விஷயத்தில், சல்ஃபர் டை ஆக்சைடு (கந்தக ஆக்சைடு) என்ற மகா கெட்ட வாயு வெளியே வரும். சுவாசித்தால் மூக்கு, தொண்டை எல்லாம் எரிய ஆரம்பிக்கும். உயிரே போய்விடும்.
இதையெல்லாம் நம் முன்னோர்கள் பல சோதனைகள்மூலம் கண்டுபிடித்திருப்பார்கள். வேதிச் சமன்பாடுகளை எழுதி அல்ல, ட்ரயல் அண்ட் எர்ரர் மெத்தட் வாயிலாக. இதைக் கொஞ்சம் அதிகம் சேர், அதைக் கொஞ்சம் குறை, சூட்டை அதிகமாக்கிப் பார்… இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக வேதித்து வேதித்து செப்பையும் வெள்ளீயத்தையும் கண்டுபிடித்திருப்பார்கள்.
அப்போது தோன்றியது பித்தளை யுகம்.
அது என்னடா பித்தளை யுகம்? கண்டுபிடித்தது என்னவோ செப்பையும் வெள்ளீயத்தையும். பித்தளை எங்கிருந்து வந்தது?
அங்கிருந்துதான்.
பெரும்பாலும் செப்பு. கொஞ்சமாக வெள்ளீயம். இரண்டும் கலந்த கலவைதான் பித்தளை. வெள்ளீயம் வெள்ளையானது. செப்பு சிவப்பானது. இரண்டையும் உருக்கி, நன்கு கலந்து உறையவைத்தால் கிடைக்கும் பொருள் மஞ்சளாக, பார்க்க்க் கொஞ்சம் தங்கம் போல இருக்கும். செப்பு, வெள்ளீயம் இரண்டையும்விட வலுவானது.
இப்படி உருவாக்கிய கலவைக்கு உலோகக் கலவை என்று பெயர். இதில் கொஞ்சம் துத்தநாகத்தைச் சேர்த்தால் இன்னொரு கலவை. கொஞ்சம் காரீயத்தைச் சேர்த்தால் மற்றுமொரு கலவை. இன்னும் ஏகப்பட்ட விஷயங்களை இதில் சேர்த்து புதிது புதிதாகக் கலவைகள் உருவாக்கலாம். ஒவ்வொன்றின் நிறமும் சற்றே வித்தியாசமாக இருக்கும். ஒவ்வொன்றின் குணமும் வித்தியாசமானது.
வீட்டில் நம் அம்மா ரசத்தில் புளி, மிளகு, உப்பு ஆகியவற்றை விதவிதமான விகிதத்தில் கலந்து உருவாக்குவதற்கு ஒப்பானது இது. நம் ரசவாதிகள் ஒரே குஷி அடைந்திருப்பார்கள்.
இந்த ரசவாதிகளை அடுத்த வாரம் பார்ப்போம்.
(தொடரும்)

கருத்துகள் இல்லை: