வியாழன், 2 ஆகஸ்ட், 2012

Jeyalalitha:அங்கன்வாடி குழந்தைகளுக்கு வண்ண உடைகள்

சென்னை: தமிழகத்தில் செயல்படும் அங்கன்வாடிகளுக்கு, குழந்தைகள் வருவதை ஊக்குவிக்கும் வகையில், இரண்டு ஜோடி வண்ண உடைகளும்; நவீன சமையலறைகளும் அமைக்க, 7.32 கோடி ரூபாய் ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: புகையில்லா சூழலை உருவாக்குதல், சமைக்கும் நேரத்தை மிச்சப்படுத்துதல் உள்ளிட்ட நோக்கில், முதல்கட்டமாக, 16, 645 அங்கன்வாடி மையங்களில் உள்ள சமையலறைகளில், மாசற்ற சுற்றுச் சூழலுடன் கூடிய, "புகையில்லா சமையலறை' அமைக்க, முதல்வர் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். இதன்படி, எரிவாயு அடுப்பு, எரிவாயு இணைப்பு மற்றும் அழுத்தக்கலன் (பிரஷர் குக்கர்) ஆகிய உபகரணங்கள் வழங்கப்பட்டு, புகையில்லா சமையலறைகள் அமைக்கப் பட்டு உள்ளன. இரண்டாம் கட்டமாக, இந்தாண்டில், 5,000 அங்கன்வாடி மையங்களில் உள்ள சமையலறைகளை நவீனமாக்கும் பணிகளை மேற்கொள்ள, 3.2 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டு இருக்கிறது.
அங்கன்வாடி மையங்களில், இரண்டு முதல், ஐந்து வயது வரை குழந்தைகள், பள்ளிசாரா முன் பருவக் கல்வி பெறுவதற்காக வருவதை ஊக்குவிக்கும் வகையில், இரண்டு வண்ண உடைகள், இந்தாண்டு முதல் வழங்கப்படும். முதல் கட்டமாக, சென்னை, வேலூர், திருச்சி, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள, இரண்டு லட்சம் குழந்தைகள் பயனடையும் வகையில், 4.30 கோடி ரூபாய் செலவில், இந்தத் திட்டம் அமல்படுத்தப் படுகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழ்மையில் வாடும் திருநங்கைகள் மாதம் ரூ.1,000 இனி ஓய்வூதியம்: ஏழ்மை நிலையில் உள்ள, 40 வயதுக்கு மேற்பட்ட திருநங்கைகளுக்கு, மாதம் 1,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கும் புதிய திட்டத்தை முதல்வர் அறிவித்தார்.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: "ஆதரவற்ற திருநங்கையர்களுக்கான ஓய்வூதிய திட்டம்' என்ற புதிய திட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இந்தத் திட்டத்தின்படி, 40 வயதுக்கு மேற்பட்ட, ஏழ்மை நிலையில் உள்ள திருநங்கையர்களுக்கு, மாதம் ஒன்றிற்கு, 1,000 ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்படும். இதற்காக, 1.17 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உத்தரவிடப் பட்டு உள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் உள்ளது. அரசின் இந்த அறிவிப்பு, திருநங்கைகள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியாவிலேயே, தமிழகத்தில் தான், முதன்முதலில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டு உள்ளது, குறிப்பிடத்தக்கது.

அரசு அறிவிப்பை வரவேற்று திருநங்கைகள் கூறியதாவது:

எழுத்தாளர் திருநங்கை பிரியா பாபு: நாட்டிலேயே முதல் மாநிலமாக, தமிழகத்தில் தான், திருநங்கைகளுக்கு ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப் பட்டு உள்ளது. எவ்வித வாழ்வாதரமும் இல்லாமல் தவிக்கும் திருநங்கைகளுக்கு, இந்தத் திட்டம் பேருதவியாக இருக்கும்.

திருநங்கைகள் உரிமை சங்கம் ஜீவா: எந்தவித ஆதரவும் இல்லாமல் தவிக்கும் திருநங்கைகளுக்கு, ஓய்வூதிய திட்டம் வரப் பிரசாதமாக அமைகிறது. இதேபோல், கல்வி மற்றும் வேலை வாய்ப்பில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிக்கு உள்ளது போல், திருநங்கைகளுக்கும் இட ஒதுக்கீட்டை அரசு அளிக்க வேண்டும்

கருத்துகள் இல்லை: