வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

அந்நியர்களின் மறைமுக அடிவருடிகளால்வரலாறு திரிக்கப்பட்டது

அழகிய மரம்  மறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 2
தொடரைத்தொடர்வதற்கு முன் சில விளக்கங்கள்.
நமது கடந்த காலம் பற்றிய சரியான மதிப்பீடு நம்மிடம் இல்லை. இதுதான் இந்தத் தொடரின் முதல் பாகத்தில் நான் சொல்லவருவது. இரண்டாம் பாகத்தில் நம் இன்றைய வரலாறு எப்படியெல்லாம் எழுதப்படுகிறது என்பது பற்றி எழுதவிருக்கிறேன்.
நேற்று அந்நியர்களால் நம் வரலாறு திரிக்கப்பட்டது. இன்று நம் வரலாறு (அதாவது இன்றைய நிகழ்காலம்) அந்நியர்களின் மறைமுக அடிவருடிகளால் பாழடிக்கப்பட்டுவருகிறது. இந்தத் தொடரில் இந்த இரண்டையும் முடிந்தவரை விரிவாகப் பேச விரும்புகிறேன். அந்தவகையில் தொடரின் தலைப்பு உண்மையில் மறைக்கப்பட்ட (படும்) இந்தியா என்று இருந்திருக்க வேண்டும். ஏனெனில், ஊடகங்கள் காட்டும் இந்தியா அல்ல உண்மை இந்தியா என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்காது. அதையும் இந்தத் தொடரில் பேச விரும்புகிறேன். எனவே, இது கடந்த காலத்தைப் பற்றி மட்டுமே பேசும் தொடர் அல்ல. நிகழ்காலத்தோடு தொடர்புடையதும் கூட.

முதல் பாகத்தில் நம் பாரம்பரியக் கல்வியின் வரலாறு எப்படி எல்லாம் திரிக்கப்பட்டிருக்கிறது என்பதை முதலில் எழுதவிருக்கிறேன். காந்தி நம் கல்வி முறையை பிரிட்டிஷார் சீரழித்ததாகச் சொன்னது, பிரிட்டிஷ் தரப்பில் இருந்து அதற்கு எழுந்த எதிர்ப்புகள், காந்தியும் அவருடைய ஆதரவாளர்களும் அதற்குத் தந்த பதில், பிரிட்டிஷாரின் ஆவணத்தின்படி இந்தியாவில் கல்வி பிரிட்டிஷாருக்கு முன் எப்படி இருந்தது, பிரிட்டிஷார் இந்தியாவுக்கு வந்தபோது பிரிட்டனில் கல்வி எப்படி இருந்தது என்பவை கல்வி பற்றிய பகுதியில் இடம்பெறும். அதன் இறுதியில் அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டுமா… அனைவருக்கும் கல்வியின் பயன் கிடைக்க வேண்டுமா எது நம் இலக்காக இருக்க வேண்டும்? மேல்சாதியினருக்கு ஆர்வத்துடன் சேவகம் செய்யும் தலித் மருத்துவரை உருவாக்குவதா? தலித்களுக்குச் சென்று சேவை செய்ய முன்வரும் மேல் சாதி மருத்துவரை உருவாக்குவதா? எது நம் கல்வியின் இலக்காக இருக்க வேண்டும், கல்விக்கும் வளமான வாழ்க்கைக்குமான தொடர்பு பற்றிய நம் புரிதல் எவ்வளவு சரி? கல்வி என்பதன் மூலம் உண்மையில் எதைச் சொல்கிறோம் என்பவை இடம்பெறும்.
அதன் பிறகு பாரதப் பொருளாதாரம் பிரிட்டிஷாரின் வருகைக்கு முன் எப்படி இருந்தது என்ற பகுதி. அடுத்ததாக தொழில்நுட்பத்தில் அறிவியல் துறைகளில் என்னென்ன சாதனைகள் நம்மால் செய்யப்பட்டிருந்தன என்ற பகுதி இடம்பெறும். கடைசியாக சாதிய அமைப்பு பற்றிய நம் புரிதல் எந்த அளவுக்கு சரி என்பது இடம்பெறும். இப்போதைக்கு இந்தத் தொடரின் முதல் பாகத்தை இப்படியான நான்கு பெரிய விஷயங்களில் நமது கடந்த கால சாதனைகள் என்ன… அவை எப்படியெல்லாம் நன் நினைவின் அடுக்குகளில் இருந்து மறைக்கப்பட்டிருக்கின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டு எழுதத் தீர்மானித்திருக்கிறேன்.
கூட்டு விவாதம் என்ற வகையிலேயே இதை முன்னெடுத்துச் செல்லவிரும்புகிறேன். கூடுமானவரை அந்தந்த வாரத்தில் கட்டுரையில் பேசப்படும் விஷயம் சார்ந்தே உரையாடல்கள் இருந்தால் உபயோகமாக இருக்கும். வேறு ஏதாவது புதிய விஷயம் பற்றிப் பேசவிரும்பினால் தெரியப்படுத்துங்கள். அதையும் கவனத்தில் கொள்கிறேன்.
இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
நான் ஒரு இந்துத்துவவாதி. இந்தியர்களின் நலனைக் குறிக்கோளாகக்கொண்ட இந்துத்துவவாதி.
அந்தவகையில் இந்து அடிப்படைவாதத்தையும் நான் இந்திய விரோத சக்தியாகவே பார்க்கிறேன். கிறிஸ்தவ, இஸ்லாமிய அடிப்படைவாதத்தைக் காரணம் காட்டி இந்து அடிப்படைவாதத்தை நியாயப்படுத்துவதைக் கண்டிக்கவே செய்கிறேன். அது அளவில் குறைவுதான் என்றாலும் அதுவே எனக்கு அச்சத்தைத் தருவதாக இருக்கிறது.
அனைத்து மதங்களில் இருக்கும் அடிப்படைவாத சக்திகளை அனைத்து மதங்களில் இருக்கும் நல்லிணக்க சக்திகளை ஒருங்கிணைத்து எதிர்க்கும் அரசியலையே என்னுடையதாக முன்வைக்கிறேன். இது ஒன்றும் என்னுடைய புதிய கண்டுபிடிப்பல்ல. காந்தி காட்டிய வழிதான். உலகுக்கு அஹிம்சையையும் நல்லிணக்கத்தையும் பரிசாகக் கொடுத்துவிட்டு நாம் நமக்குள் சண்டையிட்டு மடிவதில் எனக்கு உடன்பாடில்லை.
0
இந்தியா பற்றிய பிரிட்டிஷாரின் ஆவணங்களில் எப்படியும் அவர்களுடைய அரசியல் நோக்கம் பொதிந்திருக்கும் என்று சொல்லிவிட்டு அதையே ஆதாரமாகக் கொடுப்பது ஏன்? பிரிட்டிஷார்கள் எழுதிய ஆவணங்களை இரண்டு வகையாகப் பார்க்கவேண்டும். அவர்கள் இந்தியாவில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முன்பாக எழுதியவை. ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு பதிவு செய்தவை. இந்த இரண்டுமே அவர்களுடைய நோக்கங்களில் இருந்த வேறுபாட்டின் காரணமாக அதற்கான மரியாதையோடு அணுகப்படவேண்டியவை.
பொதுவாகவே, இந்தியாவின் வரலாறு என்பது பெரும்பாலும் இங்கு பயணம் மேற்கொண்ட அந்நியர்களால் எழுதப்பட்டவற்றில் இருந்து உருவாக்கப்பட்டதுதான். பிரிட்டிஷாருக்கு முன்னால் கிரேக்க, சீனப் பயணிகள் எழுதிய குறிப்புகளை வைத்துதான் தட்சசீலா, நாலந்தா பற்றிய தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இஸ்லாமியர்களால் எழுதப்பட்ட வரலாறும் கிடைத்திருக்கிறது. ஐரோப்பியர்களின் வருகை 15-16-ம் நூற்றாண்டில் இருந்து ஆரம்பிக்கிறது. இந்திய வாழ்க்கை முறை, தத்துவங்கள், கலைகள், கல்வி என நம் வாழ்வின் பன்முக அம்சங்கள் குறித்த எந்தவித புரிதலும் இல்லாதவர்கள் அவர்கள். முற்றிலும் அந்நியமான தேசத்தில் இருந்து வந்து தங்களுடைய முன்முடிவுகள், புரிதலுக்கு ஏற்ப நம்மைப் பற்றி எழுதி வைத்தார்கள்.
வர்த்தக நோக்குடன் இங்கு கால் பதித்த பிரிட்டிஷார், முதலில் இந்தியாவின் உண்மை நிலை என்ன என்பதைப் புரிந்துகொள்ள விரும்பினார்கள். அதற்காக மிகவும் விரிவாக களப்பணிகள் செய்து தகவல்கள் சேகரித்திருக்கிறார்கள். இந்தியாவின் தொழில்நுட்பம், விவசாயம், கலைகள், கல்வி என எல்லாவற்றின்மீதும் ஒருவித மரியாதை அப்போது அவர்களுக்கு இருந்தது. மத மாற்ற நோக்கமும் கூடவே கலந்துதான் இருந்தது. வரும் வழியில் கடலில் இருந்த நண்டைக்கூட சிலுவை நண்டு என்று மதம் மாற்றிதான் வந்திருக்கிறார்கள். என்றாலும் அமெரிக்காவில் நடைபெற்ற கொடூரமான செயல்கள் அவர்கள் மனத்தில் ஒரு எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தியிருந்தன. ஒட்டுமொத்தமாக ஒரு நாகரிகத்தை, கலாசாரத்தை அழித்துவிடும்போது அந்த மக்கள் காலகாலமாகச் சேர்த்துவைத்த அறிவும் அவர்களோடு அழிந்துவிடுகிறது என்ற உண்மை அப்போது அவர்களுக்குத் தெரிந்திருந்தது. மெக்கனாக்கி போன்றோர் பிரதிநிதித்துவப்படுத்திய எடின்பர்க் என்லைட்மெண்ட் எனப்படும் அந்த அறிவியக்கம் இந்தியா விஷயத்தில் கொஞ்சம் இதமாக நடந்துகொள்ள வைத்திருந்தது.
உண்மையில் இந்தியாவில் என்னென்ன இருக்கின்றன என்பதை முழுவதுமாகப் பதிவு செய்யவேண்டும். அவற்றில் இருந்து எதை நமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது என்பதைப் பிறகு பார்க்கலாம் என்ற எண்ணம் உருவாகியிருந்தது. எங்கெல்லாம் வருமானத்தைப் பெருக்குவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்று ஆராய்வதுதான் அவர்களுடைய முக்கிய நோக்கமாக இருந்தது. என்றாலும் பல்வேறு விஷயங்கள் தொடர்பாக இந்தியா முழுவதும் பயணம் செய்து விஷயங்களைச் சேகரித்து மேலிடத்துக்கு அனுப்பிவந்தனர்.
இந்தக் காலகட்டத்தில் இந்தியாவைப் பற்றி பதிவு செய்தவற்றை ஓரளவுக்கு அப்படியே ஏற்றுக் கொள்ளலாம். இத்தகைய தகவல்களிலும் அவர்களுடைய ரத்தத்தில் ஊறிய இன மேட்டிமை மனோபாவம் கலந்திருக்கும். என்றாலும் இவை ஓரளவுக்கு இந்தியாவின் உண்மை நிலையைப் படம்பிடித்துக் காட்டுபவை.
ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முந்தைய அணுகுமுறைக்கும் ஆட்சி அதிகாரம் கைக்கு வந்த பிறகான அணுகுமுறைக்குமான வித்தியாசத்தை வில்லியம் பென்டின்க் பிரபுவின் (Lord William Bentinck) வாசகங்கள் தெளிவாக நமக்கு விளக்கும். 1813-ல் உடன்கட்டை ஏறலை சட்டபூர்வமாக அங்கீகரித்து பிரிட்டிஷ் அரசு சட்டம் இயற்றியது. இந்திய பாரம்பரியத்திலேயே உடன்கட்டை ஏறலுக்கு முதன் முதலாக சட்டபூர்வ அங்கீகாரம் கொடுக்கப்பட்டது அப்போதுதான். இந்து மத சாஸ்திரங்களில் அதற்கு எந்தவித அங்கீகாரமும் இல்லை என்று ராஜா ராம் மோகன்ராய் உட்பட பலரும் எத்தனையோ முறை எடுத்துச் சொன்ன பிறகும் பிரிட்டிஷ் அரசு அந்த செயலுக்கு சட்ட அங்கீகாரம் தந்தது. அதன் பிறகு 1829-ல் அதை ரத்து செய்து முற்போக்கானவர்களாகக் காட்டிக் கொள்ளவும் செய்தது. அந்தச் சட்டத்தைப் பிறப்பித்த வில்லியம் பெண்டின்க் பிரபு சொன்னதன் சாராம்சம்: இதுவரை நமக்கு பலம் குறைவாக இருந்தது. பல விஷயங்களில் விட்டுக் கொடுக்க வேண்டியிருந்தது. இப்போது நமக்கு போதிய அதிகாரம் கைக்கு வந்துவிட்டிருக்கிறது. எனவே, இனி மேல் நாம் இதை வெளிப்படையாகத் தடுக்கலாம்.
இந்த அணுகுமுறைதான் இந்திய நிலைமை பற்றி எழுதிய ஆரம்ப ஆவணங்களில் சாதகமான முறையில் தென்படுகிறது. அதில் இருந்துதான் பிரிட்டிஷாரின் வருகைக்கு முன் பொருளாதார வல்லரசாக பாரதம் இருந்திருக்கிறது என்பதும் தெரியவந்திருக்கிறது. அதை பிரிட்டிஷார் ஆட்சி அதிகாரம் கைக்கு வந்ததும் மாற்றிக்கொண்டு இந்தியர்களும் நாய்களும் இங்கு நுழையக்கூடாது என்று கர்ஜிக்கும் அளவுக்குச் சென்றார்கள்.
உலகப் பொருளாதாரத்தில் நாடுகளின் பங்களிப்பு (பொதுயுகம் : 0 வாக்கில்)
நாடுகள் / பகுதிகள்  - சதவிகிதம்
மொத்த மேற்கு ஐரோப்பா –  10.8
கிழக்கு ஐரோப்பா –  1.9
முன்னாள் சோவியத் ரஷ்யா- 1.5
மொத்த மேற்கத்திய கிளைநாடுகள் – 0.5
மொத்த லத்தீன் அமெரிக்கா – 2.2
ஜப்பான் – 1.2
சீனா – 26.2
இந்தியா – 32.9
பிற ஆசிய நாடுகள் - 16.1
ஜப்பான் தவிர்த்த மொத்த ஆசியா – 75.1
ஆப்பிரிக்கா –  6.8
ஆதாரம் : ஆங்கஸ் மேடிசன், ஐரோப்பிய பொருளாதார வரலாற்று நிபுணர்
உலக உற்பத்தித் துறையில் நாடுகளின் பங்கு – 1750-ல்
நாடு – சதவிகிதம்
ஐரோப்பா முழுவதும் – 23.2
பிரிட்டன் – 1.9
ஹாஸ்பர்க் பேரரசு – 2.9
பிரான்ஸ் – 4.0
இத்தாலிய அரசுகள் – 2.4
ரஷ்யா – 5.0
அமெரிக்கா – 0.1
ஜப்பான் – 3.8
சீனா – 32.8
இந்தியா – 24.5
ஆதாரம்: யேல் பல்கலை பேராசிரியரும் பிரிட்டிஷ் வரலாற்றாசிரியருமான பால் கென்னடி
அப்படியாக பிரிட்டிஷாரின் ஆவணங்களில் இருந்து இரண்டு வகையான இந்தியா பற்றிய சித்திரம் நமக்குக் கிடைக்கிறது. ஆனால், நம்மைப் பற்றி மோசமாக அவர்கள் எழுதிவைத்த காலகட்டத்து வரலாறையே அவர்கள் வெளிச்சத்துக்கொண்டு வந்து நம்மை மூளைச் சலவை செய்துவிட்டார்கள். நம்மைப் பற்றிய உண்மையான வரலாறை லண்டனின் பிரமாண்ட நூலகங்களின் மூடிய அறைகளுக்குள் போட்டுப் பூட்டிவிட்டார்கள். நாமும் நம்முடைய உண்மையான கடந்த காலத்தைப் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்ள முயற்சி செய்யாமல், அவர்கள் நம்மைப் பற்றித் தீட்டிய பிழையான சித்திரத்தையே சுமந்துகொண்டிருக்கிறோம்.
நிலப்பிரபுத்துவ – மன்னராட்சி காலகட்டத்தில் உலகின் பிற இடங்களில் மக்கள் திரள் எப்படியான வாழ்க்கை வாழ்ந்தார்களோ அதைவிட மேலான ஒரு வாழ்க்கையையே இந்தியர்களாகிய நாம் வாழ்ந்து வந்திருக்கிறோம்.  ஆனால், தொழில் புரட்சி ஏற்பட்டு, காலனிய ஆதிக்கம் ஏற்பட்டு முதலாளித்துவ சமுதாயம் உருவான பிறகு நாம் வீழ்ச்சியை நோக்கி தள்ளப்பட்டிருக்கிறோம்.  ஐரோப்பியர்கள் தங்களுடைய நிலப்பிரபுத்துவ – மன்னராட்சி காலகட்டத்தின் அனைத்து எதிர்மறையான அம்சங்களையும் வெகு எளிதில் பின்னுக்குத் தள்ளிவிட்டு நவீன உலகத்துக்குள் மிகவும் நல்லவர்கள் போல் காலடி எடுத்துவைத்து நுழைந்திருக்கிறார்கள். மனித சமூகப் பரிணாம வளர்ச்சியில் மன்னராட்சி காலம் என்பது அதன் குறைகளோடும் நிறைகளோடும் புரிந்துகொள்ளப்பட வேண்டிய காலகட்டம். ஒருவகையில் அது தவிர்க்க முடியாத காலகட்டம். ஐரோப்பியர்கள் தங்களுடைய கடந்தகாலத்தை அப்படியான புரிதலோடுதான் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். மனித மலத்தை மனிதனே அள்ளியதில் ஆரம்பித்து கல்வியானது மேட்டுக்குடிகளுக்கு மட்டுமேயாக இருந்ததுவரை அவர்களும் வழக்கமான வழியில்தான் பயணித்து வந்திருக்கிறார்கள்.
ஆனால், பிற பகுதிகளை வென்று அடிமைப்படுத்தியதும் காலனிய ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளின் கடந்த காலத்தை இழிவானதாக, காட்டுமிராண்டித்தனமானதாகச் சித்திரித்து ஒட்டுமொத்தமாகத் திரித்துவிட்டிருக்கிறார்கள். இதில் இன்னொரு வேதனையான விஷயம் என்னவென்றால், இந்த உலகம் முழுவதையும் தன் காலடியில் கொண்டுவரும் நோக்கில் அரசியல் ரவுடிகளாக, அராஜகவாதிகளாக வலம் வந்தவர்கள் தங்கள் கடந்தகாலம் குறித்து துளிகூட குற்றவுணர்ச்சி கொள்வதில்லை. ஆனால், அடிமைப்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு அவர்களுடைய கடந்த காலம் காலில் கட்டப்பட்ட பெரும் பாறாங்கல்லாக ஒவ்வொரு நகர்வையும் சீர்குலைக்கும் ஒன்றாக ஆக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவும் நவீன காலகட்டத்துக்குள் மிகவும் இயல்பாகவே நுழைந்திருந்தால்அந்தக் காலகட்டத்துக்குப் பொருந்தாத நிலப்பிரபுத்துவ – மன்னராட்சி கால அம்சங்கள் தென்னை மரத்தின் மடல் உதிர்வதுபோல் மிக இயல்பாகவே உதிர்ந்திருக்கும். ஆனால், துரதிஷ்டவசமாக, நமது கடந்த காலத்தைப் பழிப்பதும் மேற்கத்தியமயமாக்கத்துக்கு ஆளாவதும்தான் நமது நவீன முகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இன்று ஒருவர் முற்போக்கானவர் என்றால் அவர் நம் பாரம்பரியத்தைப் பழிக்க வேண்டும். பாரம்பரியத்தைப் புகழ்கிறார் என்றால் அவர் பிற்போக்கானவர் என்ற எளிய சூத்திரம் மிக அழுத்தமாக நிலைநிறுத்தப்பட்டுவிட்டிருக்கிறது. இவை எல்லாவற்றுக்குமான காரணம் நம் உண்மையான வரலாற்றைத் தெரிந்துகொள்ளாமலும் உலக வரலாற்றோடு அதைப் பொருத்திப் பார்த்துப் புரிந்துகொள்ளாமலும் இருப்பதுதான்.
இந்தியா தன்னுடைய இந்தியத்தன்மையை இழந்தால்தான் நாகரிகமயமாக முடியும் என்பதுதான் இந்திய வரலாற்றை எழுதியவர்களின் நோக்கம். ஹிஸ்டரி ஆஃப் பிரிட்டிஷ் இந்தியா நூலை எழுதிய ஜான் ஸ்டூவர்ட் மில்-க்கு பயன்பாடுதான் அனைத்து செயல்களின் அடிப்படையாக இருக்க வேண்டும் என்பது இலக்காக இருந்தது. வில்பர்ஃபோர்சைப் பொறுத்தவரை அவர் விரும்பும் வகையிலான கிறிஸ்தவம்தான் இந்தியாவை ரட்சிக்கும் என்று நம்பினார் (இயேசுவையே சர்ச்சுக்கு ஏற்ப மதம் மாற்றியவர்கள் அவர்கள். வேறு எப்படி சிந்திக்க முடியும் அவர்களால்?). மெக்காலேயைப் பொறுத்தவரை இந்தியா ஆங்கிலமயமானால்தான் உருப்படும் என்று நம்பினார். கார்ல் மார்க்ஸைப் பொறுத்தவரை மேற்கத்தியமயமாவதுதான் இந்திய மீட்சிக்கான ஒரே வழி. ஆக, இந்தியாவை இன்றும் வழி நடத்திச் செல்லும் கோட்பாடுகளாக இவையே வெவ்வேறு வடிவங்களில் நீடித்துவருகின்றன.
ஐரோப்பிய மேலாதிக்க மனோபாவத்தால் நடத்தப்பட்ட திட்டமிட்ட அழித்தொழிப்பு நடவடிக்கைகளுக்கு இந்த உலகம் மிகப் பெரிய விலையைக் கொடுத்தது. அமெரிக்காவும் ஆப்பிரிக்காவும் அடைந்த இழப்பை ஒப்பிடும்போது இந்தியாவின் இழப்பு குறைவு என்றுதான் சொல்லவேண்டும்.
அமெரிக்காவின் பூர்வகுடிகள் கிட்டத்தட்ட முற்றாகவே அழித்தொழிக்கப்பட்டார்கள். கலை, பண்பாட்டு இழப்பு மட்டுமல்ல. ஒட்டுமொத்த மக்கள் திரளும்அழிக்கப்பட்டது. பொது யுகம் 1500 வாக்கில் இருந்த அமெரிக்க பூர்வகுடிகளின் எண்ணிக்கை சுமார் 10 கோடி. 19-ம் நூற்றாண்டு வாக்கில் அந்த மக்கள் தொகை சில மில்லியன்களாகக் குறைந்திருந்தது.
இந்தியாவிலும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் கொடூர ஒடுக்குமுறைகள் தடம் பதித்திருந்தன. 19-ம் நூற்றாண்டு வாக்கில் இது தொடர்பான குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தன.  கார்ல் மார்க்ஸ் இந்தியாவில் இங்கிலாந்து செய்ய வேண்டிய இரண்டு முக்கிய பணிகள் பற்றி 1853-ல் மிகத் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறார் : இங்கிலாந்துக்கு இரண்டு முக்கிய லட்சியங்கள் இருக்கின்றன. ஒன்று, மேற்கத்திய பொருளாதார அமைப்பை நிலைநிறுத்தும் ஆக்க வேலை. இன்னொன்று, பழங்கால ஆசிய சமுதாயத்தைச் சீர் குலைக்கும் அழிப்பு வேலை.
இப்படியான பிரமாண்ட சதித் திட்டத்துக்கு எதிராக இந்தியாவில் இருந்து உருவான குரல்தான் காந்தியின் குரல். அதைத்தான் வட்ட மேஜை மாநாட்டுக்கு லண்டனுக்குப் போயிருந்தபோது அங்கிருக்கும் ராயல் இன்ஸ்டிடியூட் ஆஃப் இண்டர்நேஷனல் அஃபயர்ஸில் 1930-ல் நடைபெற்ற கருத்தரங்கில் காந்தி ஒலித்தார். அதில், கல்வியில் இந்தியா பின்தங்கிப் போனதற்கு பிரிட்டிஷாரின் ஆட்சிதான் காரணம் என்று சொன்னார்.
இன்று இந்தியா எந்த அளவுக்கு கல்வி அறிவு குறைந்ததாக இருக்கிறதோ அதுபோல் 50-100 வருடங்களுக்கு முன்பாக இருந்திருக்கவில்லை. பிரிட்டிஷ் நிர்வாக இயந்திரமானது, இந்தியாவில் நிலவிய பாரம்பரிய கல்வி மற்றும் பிற வழிமுறைகளைச் சரிவரப் புரிந்துகொள்ள முயற்சி செய்யவில்லை. மண்ணைத் தோண்டி வேர்களை ஆராயத் தொடங்கினார்கள். அதன் பிறகு அதை அப்படியே திறந்த நிலையிலேயே போட்டுவிட்டார்கள். அந்த அழகிய மரமானது மெள்ள மட்கி அழிந்துவிட்டது.
(தொடரும்)

கருத்துகள் இல்லை: