சனி, 4 ஆகஸ்ட், 2012

மதுபானக்கடை:அந்த குடிகார நாய்களுக்கு அது போதும்

புதிய இயக்குனர், புதிய நடிகர்கள் என ஒரு புதுமாதிரியாக படத்தை எடுத்திருக்கிறது மதுபானக்கடை படக்குழு.படத்தின் துவக்கத்திலேயே கதை என்று எதையாவது நீங்கள் நினைத்தால் அது உங்கள் கற்பனையே” எனக் கூறி ரசிகர்களை படத்தில் கதையை தேட வைக்கிறார் இயக்குனர். 
மதுபானக்கடையை சார்ந்தே நகரும் திரைக்கதை(!) மதுபானக்கடைக்கு மக்கள் ஏன் வருகிறார்கள்? அப்படி வருபவர்களின் நிலை என்ன? அவர்களில் எத்தனை விதம்? என அதிகமான கருத்துகளுடன் காட்சிகள் நகர்கிறது.  புதிதாக குடிக்க வருபவர், அதையே பிழைப்பாகக் கொண்டிருப்பவர்கள், மற்றவர் பணத்தில் குடிப்பவர்கள் என ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் ‘மதுபானக்கடை’ என்ற ஒரே போர்வைக்குள் நுழைத்திருக்கிறார். மதுபானக்கடை முதலாளியின் மகளுக்கும் அங்கு வேலை செய்யும் ஒருவனுக்கும் ஏற்படும் காதலில் அவர்கள் வெற்றியடைகிறார்களா? இல்லையா? என்பதை முதல் பாதியின் முடிவில் காட்டியுள்ளார்.
பெட்டிசன் மணியாக நடித்திருக்கும் என்.டி.ராஜ்குமார் குடிகாரராகவே  வாழ்ந்திருக்கிறார். சாமி வேஷம் போட்டு காசு சம்பாதிப்பவர்கள் மது அருந்தும் போது ”சாமியே சரக்கு அடிக்குது பாரு” என்ற வசனத்திற்கு ரசிகர்களின் சிரிப்பலை வாழ்த்து. 
அரவாணிகளின் வலிகளையும், சமுதாயத்தில் அவர்கள் அனுபவிக்கும் துன்பங்களையும் மனதில் பதியும் வகையில் ஒரு காட்சி  இருக்கிறது. துப்புறவுத் தொழிலாளர்கள் தண்ணி கேட்கும் போது கொடுக்க மறுப்பவரிடம் “ நீங்க இருந்தத நீங்களே திரும்பி பாக்க மாட்டீங்க. அதையும் நாங்க தான்டா அள்றோம். நாங்க போதைக்கு குடிக்கல, வேலை செய்யுறதுக்கு குடிக்கிறோம். எது எதுக்கோ மெஷின் கண்டுபுடிக்கிறானுங்க, இவனுங்க பீ, மூத்தரத்த இன்னொரு மனுஷன் தான் அள்ளனுமா?” என்று அந்த துப்புறவாளர்களின் துயரத்தை சாட்டையடியாய் மக்கள் மனதில் பதிக்கிறார் இயக்குனர். 
இந்த படத்தில் குடிகாரராகவே வாழ்ந்திருக்கும் பெட்டிசன் மணி “ நாங்க தள்ளாட்ற வரைக்கும் தான் அரசாங்கம் ஸ்டெடியா இருக்கும். நாங்க ஸ்டெடியானா அரசாங்கமே தள்ளாடும்” என்று சொல்லும் வசனத்திற்கு விசில் சத்தங்கள் பறந்தன. மதுபானக்கடைகளில் போலி சரக்குகள் கலக்கப்பட்டு அது எப்படி மக்களை சென்றடைகிறது என்பது தெளிவாக காட்டப்பட்டுள்ளது.
 முதலாளியிடம் சைட்-டிஷுக்கான உணவுப்பொருள்கள் அழுகிவிட்டது எனச் சொல்லும் போது ”அந்த குடிகார நாய்களுக்கு அது போதும்” என முதலாளி சொல்வது குடிப்பவர்களுக்கான சாட்டையடி. 
இயக்குனர் நினைத்திருந்தால் கமெர்ஷியலான கவர்ச்சிப் நடனம், குத்துப்பாட்டு, கொலை, ரத்தம் என திரைக்கதையில் எதை எதையோ கோர்த்திருக்க முடியும். ஆனால் ஒரு நாகரீகமான படத்தை எடுத்து தான் சொல்ல வந்த கருத்தையும் சொல்லி முடித்திருக்கிறார் என்றே சொல்லலாம்.

கருத்துகள் இல்லை: