வியாழன், 26 ஜூலை, 2012

நான் ஏற்றிச் சென்ற பள்ளிக் குழந்தைகளை விட்ட பின்னரே மகள் பிணத்தைப் பார்த்தேன்-ஸ்ருதியின் தந்தை

 Shruthi S Father Wants Justice
நானும் பள்ளிப் பிள்ளைகளை அழைத்துச் செல்லும் டிரைவர்தான். எனது மகள் பள்ளிப் பேருந்திலிருந்து விழுந்து கோரமாக இறந்து போன செய்தி எனக்கு வந்ததும், நான் உடனே ஓடவில்லை. மாறாக, எனது காரில் இருந்த அத்தனை பள்ளிக் குழந்தைகளையும் பத்திரமாக அவர்களது வீடுகளில் விட்டு விட்டுத்தான் நான் எனது மகளின் பிணத்தைப் பார்க்கப் போனேன் என்று கண்ணீர் மல்கக் கூறியுள்ளார் ஸ்ருதியின் தந்தை சேதுமாதவன்.
முடிச்சூரைச் சேர்ந்த சேதுமாதவனின் மகள் ஸ்ருதி, சேலையூர் ஜியோன் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று மாலை பள்ளிப் பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது பேருந்தின் ஓட்டையில் விழுந்து கோரமான முறையில் பலியானாள்.
இந்த சம்பவம் குறித்து ஸ்ருதியின் தந்தை சேதுமாதவன் கண்ணீர் மல்கக் கூறுகையில், பள்ளிக்கூட நிர்வாகத்தை நம்பித்தான் பிள்ளைகளை பெற்றோர் அனுப்பி வைக்கின்றனர். எனது மகளைப் போல ஏராளமான சிறு சிறு பிள்ளைகளை இப்படிப்பட்ட வாகனத்தில் நம்பித்தான் அனுப்பி வைக்கின்றனர். அப்படிப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட வாகனங்கள் நன்றாக இருக்கிறதா, இல்லையா என்று பார்க்க வேண்டாமா.
நானும் பள்ளிக்குழந்தைகளை எனது ஆம்னி வேன் மூ்லம் அழைத்துச் செல்லும் டிரைவர் பணியில்தான் இருக்கிறேன். ஒவ்வொரு குழந்தையையும் எனது குழந்தை போல நினைத்துத்தான் நான் தினமும் அழைத்துச் சென்று வருகிறேன்.
நேற்று கூட பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வந்தபோதுதான் எனது மகள் இறந்த செய்தி எனக்கு வந்தது. ஆனால் நான் பதறிப் போகவில்லை. மாறாக, என்னை நம்பி அனுப்பி வைக்கப்பட்டிருந்த அத்தனை குழந்தைகளையும், அவரவர் வீட்டில் பத்திரமாக விட்டு விட்டுத்தான் நான் எனது மகள் உடலைப் பார்க்கப் போனேன்.
எனது மகள் சாவுக்குக் காரணமானவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மட்டுமே இப்போதைக்கு எனது ஒரே கோரிக்கை என்றார் அழுதபடி.

கருத்துகள் இல்லை: