சனி, 28 ஜூலை, 2012

வளர்ந்த நாடுகளில் 5% கருக்கலைப்புகள்தான் நடைபெறுகின்றன

கருக்கலைப்பு – சரியா தவறா?" 
 எந்தச் சாதனங்களும் பயன்படுத்தாமல், உறவில் ஈடுபட அழைக்கும்போது பெண் அதை வேண்டாம் என்று நிராகரிக்கும் சுதந்தரம் எத்தனை பேருக்கு இங்கே இருக்கிறது?
கமலிக்குத் திருமணம் ஆகி ஓராண்டு ஆகியும் குழந்தை இல்லை என்று மருத்துவரிடம் சென்றனர். சில மாத சிகிச்சைக்குப் பிறகு கரு உண்டானது. எல்லோருக்கும் சந்தோஷம். எதை வாயில் வைத்தாலும் குமட்டிக்கொண்டு வந்தது. தண்ணீரைக் கூட குடிக்க முடியவில்லை. சோர்ந்து போனாள். அம்மா வீட்டில் ஓய்வெடுக்கட்டும் என்று ஊரில் விட்டு வந்தார் கணவர். பத்து நாள்களில் வாந்தி நின்றது. சாப்பிட முடிந்தது. வயிற்றில் அசௌகரியம் ஏதும் தெரியவில்லை. தூங்கி எழும்போது தலைச் சுற்றல் இல்லை… விஷயம் தெரியாத கமலி மகிழ்ந்தாள். அம்மாவிடம் சொன்னாள். உடனே மருத்துவரிடம் அழைத்துச் சென்றார் அம்மா. கரு இறந்துவிட்டது. உடனே சுத்தம் செய்யவேண்டும் என்றனர். கணவருக்குத் தகவல் போனது. மறுநாள் காலை கரு வெளியேற்றப்பட்டது. தாய்மையை உணரவைத்த அந்த முதல் கரு வெளியேறியதில் உடைந்துபோனாள் கமலி. இந்த நேரத்தில் ஆறுதல் சொல்ல வரவேண்டிய அவளுடைய கணவனும் வரவில்லை. ஓராண்டு கரு உருவாகாததற்குச் சொன்ன காரணத்தையே கரு இறந்துபோனதற்கும் சொன்னார் கணவர். என் குழந்தையைக் கொன்றவளுக்கு இனி இந்த வீட்டிலும் என் மனதிலும் இடமில்லை என்றார்.

*
ஒருநாள் தோழியிடம் இருந்து போன். தன்னுடைய இரண்டாவது கர்ப்பத்தைக் கலைக்கப் போவதாகவும், கணவர் மருத்துவர்களுக்குப் பயந்துகொண்டு வர மாட்டேன் என்று சொல்வதாகவும் கூறினாள். அவருக்கு விருப்பமில்லையா என்றேன். இருவரும் சேர்ந்து எடுத்த முடிவுதான். நேற்றே மருந்து வைத்துவிட்டார்கள்.. இனி ஒன்றும் செய்ய முடியாது. துணைக்கு வா என்றாள். பாண்டிபஜாரில் இருந்த அந்தக் கருக்கலைப்பு மருத்துவமனைக்குச் சென்றோம். சுமார் 30 பேர் அன்று மட்டும் கருக்கலைப்புக்காகக் காத்திருந்தனர். ஆண்கள் வெகு குறைவாக இருந்தார்கள். மகிழ்ச்சியுமில்லை; துக்கமுமில்லை. அமைதியாகப் பொழுது கரைந்தது. வரிசையாகக் கூப்பிட்டார்கள். பத்து நிமிடங்களில் முடிந்தது என்று உதவியாளர் ஒருவர் குரல் கொடுத்தார். தோழியின் பெயரைச் சொன்னவுடன் அருகில் சென்றேன். அரை மணி நேரம் கழித்து, ஜுஸ் கொடுத்து அழைத்துச் செல்லுங்கள் என்றார். “என்னம்மா, கலைக்குறதுன்னா முன்னாடியே செய்திருக்கலாமில்ல.. கரு நல்லா வளர்ந்திருச்சு.. எப்படித்தான் ரிஸ்க் எடுக்கிறாங்களோ’ என்றார்.
கலைத்த பிறகு தோழியின் மனநிலை மாறியது. கலைக்கச் சொன்ன கணவனிடம் ஒரு வாரம் பேசவில்லை. ஓர் ஆண்டு கழித்து போனில் சொன்னாள்: “என் கணவருக்கு நல்ல வேலை கிடைத்துவிட்டது. நான் உண்டாகியிருக்கேன்!’
*
சந்தோஷ் என்ற பெயரை வைக்கும்போது அமுதாவுக்கும் குமாருக்கும் தெரிந்திருக்காது, தங்கள் வாழ்க்கையில் சந்தோஷத்தைப் பார்க்கப் போவதில்லை என்று! சந்தோஷுக்கு வயது 17. அபாரமான உயரம். சிவந்த நிறம். அவனால் அசைய முடியாது. உட்கார முடியாது. நடக்க முடியாது. பேச முடியாது. எதையும் புரிந்துகொள்ளவும் முடியாது. உயிர் ஒன்று மட்டுமே உடலில் இருக்கிறது. உணவு, தண்ணீர் கொடுத்தால் உள்ளே போகும். கழிவுகள் வெளியேறும். குழந்தையாக இருந்தபோது அவனைப் பராமரிப்பது எளிதாக இருந்தது. வளர, வளர.. யாராவது ஒருவர் உதவியின்றி அவனைக் குளிப்பாட்ட இயலாது. கணவர் அலுவலகம் சென்றுவிட்டால், அருகில் யாரையாவது உதவிக்குக் கூப்பிடவேண்டும். அவர்கள் பரிதாபத்துடன் உதவுவார்கள். குளித்து, உடை மாற்றி, பவுடர் போட்டு மீண்டும் படுக்கை.. கடந்த பத்து ஆண்டுகளாக வெளியில் எங்கும் அவர்கள் செல்வதில்லை. உடல்நிலை சரியில்லை என்றால் கூட மருத்துவரிடம் அழைத்துப் போவது அவ்வளவு கடினம்.
அமுதாவும் குமாரும் அலுக்காமல் சளைக்காமல் சந்தோஷுக்குப் பணிவிடை செய்துவந்தனர். குடும்பத்தினர் இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ளச் சொல்லி வற்புறுத்தியும் கூட இருவரும் மறுத்துவிட்டனர். அந்தக் குழந்தையும் இப்படிப் பிறந்தால்?
ஒருமுறை கோயிலுக்குச் சென்றபோது கார் விபத்துக்குள்ளானது. அமுதாவுக்கும் குமாருக்கும் கை, கால்களில் பலத்த அடி. ஆனால் சந்தோஷ்…
‘குழந்தைக்கு ஏதாவது ஆயிருக்கணும்னு கடவுள்கிட்ட வேண்டிட்டுப் போய்ப் பார்த்தேன். சின்ன சிராய்ப்புகளோட அவன் அப்படியே இருந்தான்… என்னால தாங்க முடியலைங்க’ என்று அமுதா கதறினார்.
கருவிலேயே குழந்தையைப் பற்றித் தெரிந்திருந்தால் கலைத்திருக்கலாம் என்கிறார்கள் அமுதாவும் குமாரும்.
*
பக்கத்துவீட்டில் ஒரு குடும்பம். அவர்களுக்கு ஆண், பெண் இரு குழந்தைகள். ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் வராவிட்டால் எள் உருண்டை, பப்பாளி சாப்பிடுவார். அப்படியும் ஒன்றும் நடக்கவில்லை என்றால் மருத்துவரிடம் செல்வார். ஓர் ஊசி.
‘ஏன் இப்படிச் செய்றீங்க?’
‘குழந்தையையா கொல்றோம்? அது வெறும் திசுதாங்க.’
‘குடும்பக் கட்டுப்பாடு பண்ணிக்கலாமே?’
‘அதெல்லாம் பண்ணினா என் உடல் கெட்டுப்போயிடும்னு கணவர் பயப்படறார்.’
*
வயல் வேலைக்குச் செல்பவர் பொன்னம்மாள். அவருக்கு பெண் குழந்தை ஒன்றும் ஆண் குழந்தைகள் இரண்டும் இருந்தன. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கிராமத்துக்குச் சென்று கருவைக் கலைத்துவிட்டு வருவார். “எங்க சம்பாத்தியத்தில் அஞ்சு பேர் சாப்பிடறதே கஷ்டம். இதில் இன்னொன்னை எங்களால தாங்க முடியாது. நமக்கு உடம்பு நல்லா இருந்தால்தான் உழைக்க முடியும். கருத்தடை மாத்திரை சாப்பிட்டால் வேற நோய் வரும்னு சொல்றாங்க.. அதான். அந்த மனுஷனைக் கிட்ட வராதேன்னு சொன்னால் பகல்ல கேட்டுக்கறார்.. தண்ணி போட்டதும் மாறிடறார்… அப்புறம் உண்டானதும் கலைச்சிட்டு வான்னு விரட்டுறார்… ஏதோ குழந்தை உண்டானதில் அவருக்குப் பங்கில்லாதது போல அவ்வளவு வெறுப்பா பேசுவார். இந்தாளு சும்மா இருந்தா ஏன் உண்டாகப் போகுது?’
*
மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு இயற்கையாக கருச்சிதைவு ஏற்பட்டு, அழுதுகொண்டிருந்தபோது அவள் அம்மா சொன்னார், “நீயும் நானும் பெண்ணாகப் பிறந்து எவ்வளவு சீரழிஞ்சோம்.. கடவுளே இந்தக் கேடு கெட்ட உலகத்தில் இருந்து குழந்தையைக் காப்பாத்திட்டார். அது பிறந்து அப்பன் கிட்ட அடி வாங்கி, புருஷன் கிட்ட அடிவாங்கி, மகன்கிட்ட அடிவாங்கிப் போய்ச் சேருவதற்கு, பிறக்காமல் போனது நல்ல விஷயம்தான்’ என்றார்.
இன்னும் என்னென்ன காரணங்களுக்காக கருக்கலைப்பு நடைபெறுகிறது?
  • குடும்பத்தின் எண்ணிக்கை அதிகரிக்காமல் இருக்க. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் கலைக்கப்படுகிறது.
  • முதல் குழந்தை பெண்ணாக இருந்து, அடுத்த குழந்தையும் பெண்ணாகப் பிறந்தால் கரு கலைக்கப்படுகிறது.
  • வறுமையில் வாடும் குடும்பங்களில், பெண் குழந்தைகள் என்றால் திருமணச் செலவுகள் அதிகம்… ஆண் குழந்தை என்றால் மிகக்குறைந்த வயதிலேயே கூலி வேலைக்குச் சென்று சம்பாதிப்பார்கள்… வயதான காலத்தில் தங்களைக் காப்பாற்றுவார்கள்.. இப்படி நினைப்பதால் பெண் கருக்கள் அழிக்கப்படுகின்றன.
  • படிப்பு, பொருளாதார வசதி, ஜோதிடம் போன்ற காரணங்களாலும் கருக்கள் அழிக்கப்படுகின்றன.
நம் நாட்டில் படித்தவர்களாக இருந்தாலும் சரி, படிக்காதவர்களாக இருந்தாலும் சரி… எல்லா தவறுகளையும் எல்லாருமே செய்கிறார்கள். இதில் எந்தப் பேதமும் இல்லை.
இந்தியச் சூழ்நிலையில் ஒரு பெண்ணின் நிலை எந்த இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கவனிக்கவேண்டும். சமீபத்தில்தான் பெண்ணுக்கு மாப்பிள்ளையைப் பிடித்திருக்கிறதா என்று கேட்கும் எண்ணமே வந்திருக்கிறது. திருமணம் முடிந்தவுடன் ஆணும் பெண்ணும் சேர்ந்து இல்லறத்தில் ஈடுபடும்போது இருவருக்குமே அது புது அனுபவம்… அந்த நேரத்தில் குழந்தை, எதிர்காலம் என்றெல்லாம் பெரிதாக யோசிப்பதில்லை. நிறுத்தி, நிதானத்துக்கு வரும்போது குழந்தை உருவாகிவிடுகிறது. அப்போது வேறு பல விஷயங்கள் முதன்மையாகப்பட்டால் இப்போதைக்கு குழந்தை வேண்டாம் என்று முடிவெடுக்கிறார்கள். நம் நாட்டில் பெரும்பாலானவர்கள் குழந்தைக்காக உறவில் ஈடுபடுவதில்லை. மாறாக, உறவில் ஈடுபடும்போது குழந்தை உண்டாகிவிடுகிறது.
பலருக்கு கருத்தடை சாதனங்கள் மீது இன்னும் முழு நம்பிக்கை வரவில்லை. அவற்றை முழுமையாக ஏற்றுக்கொள்ள மனத்தடை இருக்கிறது. அல்லது கருத்தடை சாதனங்கள் உண்மையிலேயே அவர்களுக்கு வசதியாக இல்லாமலும் இருக்கலாம். கருத்தடை சாதனங்களிலும் காப்பர் டியையே பெரும்பாலான பெண்கள் பயன்படுத்துகிறார்கள். அல்லது மாத்திரைகளை விழுங்குகிறார்கள். (கருத்தடை சாதனங்கள் பயன்படுத்துவதிலும் குடும்பக் கட்டுப்பாடு செய்வதிலும் கூட பெண்களைத்தான் அதிகம் ஈடுபடுத்துகிறார்கள்). மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிட்டால் பக்கவிளைவு ஏற்படும் என்ற பயத்தால் அதைப் பயன்படுத்துவதில் தயக்கம் இருக்கிறது. ஆண்களுக்குக் கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்தும் அளவுக்குப் பொறுமையும் பொறுப்பும் இருப்பதில்லை.
எந்தச் சாதனங்களும் பயன்படுத்தாமல், உறவில் ஈடுபட அழைக்கும்போது பெண் அதை வேண்டாம் என்று நிராகரிக்கும் சுதந்தரம் எத்தனை பேருக்கு இங்கே இருக்கிறது? உறவு என்பது ஆண்கள் விருப்பம் சார்ந்ததாகவே இன்று வரை இருக்கிறது. குழந்தை எப்போது பெற்றுக்கொள்ளலாம் என்ற முடிவும் நிச்சயம் பெண்ணிடம் இல்லை. ஒரு பெண் மனத்தளவிலும் உடல் அளவிலும் பிள்ளை பெறத் தகுதியானவளா என்று பார்ப்பதில்லை. ஒரு குழந்தை உருவாகும்போது ஆண்-பெண் இருவருக்கும் சம பங்கிருக்கிறது. ஆனால் கரு உருவாகி, வளர்ந்து, குழந்தை பிறந்து, வளர்க்கும்போது ஆணை விடப் பெண்களின் பங்கே அதிகம் இருக்கிறது. ஆனால் குழந்தை தொடர்பான எந்த முடிவும் அவளைக் கேட்டு எடுக்கப்படுவதில்லை.
கரு உருவான பிறகு… அதைப் பெற்றுக்கொள்ளலாமா, கலைக்கலாமா என்ற முடிவும் பெண்ணிடம் இல்லை. குடும்பம் தீர்மானிக்கிறது. கணவன் தீர்மானிக்கிறான். பெண் தனக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் அதைக் கலைக்கவேண்டிய நிர்பந்தத்துக்குத் தள்ளப்படுகிறாள். கணவர், குடும்பத்தினர் விருப்பமின்றி ஒரு பெண் குழந்தை பெற்று, வளர்ப்பது என்பது நம் குடும்பங்களில் அவ்வளவு சுலபமில்லை.
கணவனும் குடும்பத்தினரும் கருக்கலைப்பு செய்யச் சொல்வது ஏன்?
கருவை நாம் குழந்தையாக நினைப்பதில்லை. அந்தக் கருவுக்கும் வலி இருக்கும் என்பதை அறிவதில்லை. அதனால் கருக்கலைப்பை ஒரு குற்றமாகக் கருதுவதில்லை. கருக்கலைப்புச் செய்வதால் ஒரு பெண்ணின் உடல்நிலை மோசமாகும் என்பதைக் கவனத்தில் கொள்வதில்லை. முறையாகக் கருக்கலைப்பு மையத்துக்கு வந்து செய்பவர்களை விட அவரவர் தெரிந்த வழிகளில், தெரிந்த ஆள்களிடம் செய்வதுதான் அதிகமாக இருக்கிறது.
இப்படிச் செய்வதால் அவர்களுக்கு விஷயம் வெளியில் தெரியாமல் காக்கப்படுகிறது. செலவும் குறைவாக இருக்கிறது. இதுபோன்ற வழிகளில் செய்பவர்களுக்குச் சரியாகச் சுத்தம் செய்யப்படாமல் தொற்று ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தை வரவழைத்துவிடுகிறது.
இந்தியாவில் சட்டப்பூர்வமான கருக்கலைப்பு 2010-ம் ஆண்டில் மட்டும் 25,29,979. சட்டத்துக்குப் புறம்பான கருக்கலைப்பு சுமார் 80 லட்சம்.
உலகம் முழுவதிலும் நடைபெறும் கருக்கலைப்புகளில் பாதி கருக்கலைப்புகள் பாதுகாப்பற்ற முறையில் செய்யப்படுகின்றன. பாதுகாப்பற்ற கருக்கலைப்புகளில் 97 சதவிகிதம் வளரும் நாடுகளில் நடைபெறுகின்றன.
பிரசவத்தின்போது நடைபெறும் உயிர் இழப்புகளைவிட, பாதுகாப்பற்ற வகையில் செய்யப்படும் கருக்கலைப்புகளில் உயிர் இழப்புகள் அதிகம்.

இன்று குடும்பக் கட்டுப்பாடு பற்றி ஓரளவு விழிப்புணர்வு இருக்கிறது. ஆனால் உடல் உறவு, கருத்தடை சாதனங்கள், பெண் நலம், உயிர் பற்றிய மதிப்பீடு போன்றவற்றில் இன்னும் போதுமான அளவு விழிப்புணர்வு இல்லை. திருமணத்துக்கு முன்பே ஆணுக்கும் பெண்ணுக்கும் கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கவேண்டும்.
கருவைக் கலைப்பதும் பெண்ணின் உடல் நிலை மோசமடைவதும் கண்டிப்பாகத் தடுக்கப்படவேண்டும். அதேநேரத்தில் குறைபாடுள்ள கரு, உடல் நலமில்லாத தாய், மனநிலை சரியில்லாத தாய், பலாத்காரம் செய்யப்பட்ட பெண்… இதுபோன்ற காரணங்களுக்காக கருக்கலைப்பு செய்யப்படுவதைத் தவறு என்று சொல்லக்கூடாது. அதைப் பெற்றுக்கொள்வதோ, கலைப்பதோ அவர்கள் உரிமை.
சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் பேசியவர்கள் பலரும் கருக்கலைப்பே கூடாது என்றார்கள். குறைபாடுள்ள குழந்தைகளைப் பெற்று வளர்க்கத்தான் வேண்டும் என்றார்கள். ஈரமில்லாதவர்கள்… கொலைகாரர்கள் என்றெல்லாம் பேசினார்கள். எதையும் பேசுவது எளிது. சம்பந்தப்பட்டவர்களுக்குத்தான் வலி புரியும்.
அதேநேரத்தில் எதிர்பாராத கர்ப்பம், சூழ்நிலை சரியில்லாமை, ஜோதிடம், பெண் குழந்தை போன்ற காரணங்களுக்காகச் செய்யப்படும் கருக்கலைப்புகள்?
கருக்கலைப்பே கூடாது என்றும், ‘அது ஓர் உயிர்.. பாவம்…’ என்றும் மதம் போதித்த கருத்துகளைக் கொண்டு கூச்சல் போடுபவர்களுக்கு… கருவாக இருக்கும் வரைக்கும்தான் மதிப்பா? உயிரா? பிறந்த குழந்தைகளுக்கு நாம் என்ன செய்கிறோம்? பிறந்த பிறகு ஊட்டச்சத்து குறைபாட்டால் எத்தனை லட்சம் குழந்தைகள் ஆண்டுதோறும் பலியாகின்றனர்? எவ்வளவு லட்சம் குழந்தைகள் வறுமைக்கு இரையாகின்றனர்? எவ்வளவு குழந்தைகள் சுகாதாரமின்மையால் நோய்க்குப் பலியாகின்றனர்? எவ்வளவு குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனர்?
கருக்கலைப்பு தடுப்பை கடுமையான சட்டமாக்குவதன் மூலம் பாதுகாப்பற்ற கருக்கலைப்புகள் மேலும் பெருகுவதற்கே வாய்ப்பு அதிகம். இது மேலும் தாய்களின் உடல்நலத்தைப் பாதிக்கும்; மரணத்தை அதிகரிக்கும். முதலில் மக்களிடம் கருத்தடை சாதனங்கள், குழந்தை பிறப்பு திட்டமிடல்கள், உயிர் பற்றிய மதிப்பீடுகள் போன்றவற்றில் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். வறுமைக்குப் பலியாகாமல் அனைவரையும் வாழத் தகுதியுள்ளவர்களாக மாற்றுவோம். குழந்தை பெற்றுக்கொள்வதில் பெண்ணுக்கு இருக்கும் உரிமையை வழங்குவோம்.
பெண்களிடம் விழிப்புணர்வும் கருக்கலைப்பு உரிமையும் வரும்போது, கருக்கலைப்புகள் நடைபெறாது. கருக்கலைப்புக்குத் தடை இல்லாத வளர்ந்த நாடுகளில் 5% கருக்கலைப்புகள்தான் நடைபெறுகின்றன என்பதாலேயே இந்தக் கருத்தை ஆணித்தரமாகச் சொல்ல முடிகிறது.
0
மின்மினி tamilpaper.net

கருத்துகள் இல்லை: