புதன், 25 ஜூலை, 2012

Anna Hazare மிரட்டல் 3 அல்லது 4 நாட்களுக்குள் நிறைவேற்றா விட்டால்?

புதுடில்லி:""லோக்பால் மசோதா தொடர்பான எங்கள் கோரிக்கைகளை, இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் நிறைவேற்றா விட்டால், சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபடுவோம்,'' என, மத்திய அரசுக்கு அன்னா ஹசாரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
"ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள மத்திய அமைச்சர்கள் மீதான வழக்குகளை விசாரிக்க, சிறப்பு விசாரணை குழுவை அமைக்க வேண்டும். இந்த வழக்குகளை, விரைவு கோர்ட்டுகளில் விசாரிக்க வேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, அன்னா ஹசாரே குழுவினர், இன்று, டில்லியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளனர்.

மிரட்டல்
இதையொட்டி, மத்திய அரசுக்கு, அன்னா ஹசாரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது:உண்ணாவிரதத்துக்கு பின், மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதை, இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்கள் பொறுத்திருந்து பார்ப்போம். எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற, எந்த நடவடிக்கையும் எடுக்கா விட்டால், நாடு முழுவதும் உள்ள மக்களை, சிறை நிரப்பும் போராட்டத்தில் பங்கேற்பதற்காக அழைப்பு விடுப்போம். அப்படி போராட்டம் நடத்தினால், நாட்டில் உள்ள அனைத்து சிறைகளும் நிரம்பி வழியும். ஒரு சிறை கூட, காலியாக இருக்காது என்பதை, மத்திய அரசுக்கு நினைவு படுத்த விரும்புகிறோம். எங்களின் இந்த போராட்டத்தை, நாட்டு மக்கள், இரண்டாவது சுதந்திர போராட்டமாக கருதி, ஆதரவு அளிக்க வேண்டும். மத்திய அரசில் உள்ள 15 அமைச்சர்கள், ஊழல் பின்னணி உடையவர்களாக இருப்பதால் தான், ஊழலுக்கு எதிரான "லோக்பால்' மசோதாவை நிறைவேற்ற, மத்திய அரசு தயங்குகிறது. நாளை (இன்று) நடக்கவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில், நானும் பங்கேற்க முடிவு செய்துள்ளேன்.இவ்வாறு அன்னா ஹசாரே கூறியுள்ளார்.

அரசு பதில்:அன்னா ஹசாரேயின் இந்த அறிவிப்பை அடுத்து, கடந்த ஒரு ஆண்டில், ஊழலுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது.

பிரதமர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,"ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளவர்களுக்கு எதிராக விசாரணை நடத்த, அனுமதி அளிப்பதற்கு காலக் கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களின் விருப்ப அதிகாரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊழலுக்கு எதிராக புகார் கொடுப்பவர்களை பாதுகாக்க, லோக்சபாவில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது' உள்ளிட்ட விஷயங்கள் இடம் பெற்றுள்ளன.

கருத்துகள் இல்லை: