வெள்ளி, 27 ஜூலை, 2012

Bal Thakere: கர்நாடக சட்டசபையில் தலிபான்கள்

மும்பை: "பெல்காமை சேர்ந்த மராத்தி பத்திரிகைக்கு எதிராக, கர்நாடக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்மூலம், கர்நாடக சட்டசபையில், தலிபான்கள் உள்ளனரோ என்ற சந்தேகம் எழுகிறது' என, சிவசேனா தலைவர் பால் தாக்கரே விமர்சித்துள்ளார்.
கர்நாடகா - மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு இடையே, எல்லைப் பிரச்னை உள்ளது. இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெல்காம் தெற்கு தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., அபய் பாட்டீல் மறறும் குடாச்சி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஷியாம் பி.கடேஜ் ஆகிய இருவரும், கர்நாடக சட்டசபை சபாநாயகரிடம், புகார் ஒன்றை அளித்தனர். அதில், "பெல்காமில் இருந்து வெளிவரும் மராத்தி மொழி பத்திரிகையான "தருண் பாரத்'தில், ஆதாரமற்ற புகார்களுடன், எங்களின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், சில கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன.
தேவையற்ற வகையில், எங்களின் பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கடந்த மூன்று வருடங்களாக, அந்தப் பத்திரிகை, இதுபோல் செய்து வருகிறது' என, குறிப்பிட்டிருந்தனர்.

கண்டனம்: இதையடுத்து, கர்நாடக சட்டசபையில், கடந்த செவ்வாய்க் கிழமை தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட்டது. அதில், "தருண் பாரத்' பத்திரிகையின் ஆசிரியருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதோடு, பத்திரிகையின் அங்கீகாரத்தை ரத்து செய்யும்படி, இந்திய பத்திரிகை கவுன்சிலுக்கும், கோரிக்கை விடுக்கப்பட்டது. கர்நாடக சட்டசபையின் இந்த நடவடிக்கையை, சிவசேனா தலைவர் பால் தாக்கரே கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக, சிவசேனா கட்சியின் பத்திரிகையான "சாம்னா'வில், அவர் கூறியுள்ளதாவது:

கைப்பாவை: கர்நாடகாவில், மராத்தி மொழி பேசும் மக்கள் எதிர்கொள்ளும் துயரத்தைப் பற்றி கவலைப்படாதவராக, மகாராஷ்டிரா முதல்வர் பிருதிவிராஜ் சவான் உள்ளார். டில்லியில், முதல்வர் சவானுக்கு அதிகம் செல்வாக்கு உள்ளதாகக் கூறப்படுகிறது. அந்தச் செல்வாக்கை, அவர் மராத்தி மொழி பேசும் மக்களுக்கு நீதி கிடைக்க பயன்படுத்தவில்லை. "தருண் பாரத்' பத்திரிகையின் அங்கீகாரத்தை ரத்து செய்யும்படி, கர்நாடக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது, தலிபான்களின் செயல்களைப் போல உள்ளது. கர்நாடக சட்டசபையில், தலிபான்கள் உள்ளனரோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. கர்நாடக அரசின் இந்த நடவடிக்கை, கருத்துத் தெரிவிக்கும் சுதந்திரம், அரசியல்வாதிகளின் கைப்பாவையாகி விட்டது போல தோன்றுகிறது. இவ்வாறு தாக்கரே கூறியுள்ளார். இதற்கிடையில், உடல் நலக்குறைவு காரணமாக, மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, சிவசேனா தலைவர் பால் தாக்கரேயை, பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி நேற்று சந்தித்து, நலம் விசாரித்தார். மூச்சுத் திணறல் காரணமாக, மருத்துவமனையில் தாக்கரே அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: