ஞாயிறு, 22 ஜூலை, 2012

பாஜக உறுதி நரேந்திரமோடி பிரதமர் வேட்பாளர்:

நரேந்திரமோடி பிரதமர் வேட்பாளர்: பாஜக உறுதி குஜராத் மாநிலத்தில் அசைக்க முடியாத முதல்வராக நரேந்திரமோடி உள்ளார். மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்று மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். ஆனால் அங்கு நடந்த கலவரம் அவரது இமேஜை பாதிப்பதாக இருந்தது. ஆனால் கலவரம் தொடர்பான குற்றச்சாட்டில் இருந்து நரேந்திரமோடியை கோர்ட் விடுவித்தது.இதனால் ஆறுதல் அடைந்த நரேந்திரமோடி குஜராத்தில் முக்கிய நகரங்களில் மத நல்லிணக்க உண்ணாவிரதம் மேற்கொண்டார். அடுத்த ஆண்டு குஜராத் மாநில சட்டசபைக்கு தேர்தல் நடக்கிறது. தேர்தலை சந்திக்க நரேந்திரமோடி இப்போதே தயாராகி வருகிறார். சட்டசபை தேர்தல் முடிந்து மீண்டும் ஆட்சியை பிடித்ததும் பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடி குறி வைத்துள்ளார். பாரதீய ஜனதா கட்சியும் நரேந்திரமோடியை பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்தி பாராளுமன்ற தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளது.



ஆனால் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியில் உள்ள ஒருசில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் முதல்- மந்திரியான நிதீஷ்குமார், நரேந்திரமோடிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி வேட்பாளர் தேர்வின்போதே நிதிஷ்குமார் பிரதமர் வேட்பாளர் பிரச்சினையை கிளப்பினார். நரேந்திர மோடியை பிரதம வேட்பாளராக அறிவித் தால் ஏற்கமாட்டோம் என்று அவர் பகிரங்கமாக அறிவித்தார்.


ஆனால் பாரதீய ஜனதா மேலிடம் நிதீஷ்குமார் எதிர்ப்பை கண்டு கொள்ளவில்லை. நரேந்திர மோடியையே பிரதமர் வேட்பாளராக அறிவிக்கும் முடிவில் உறுதியாக இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.


இதுபற்றி பாரதீய ஜனதா தலைவர் ஒருவரிடம் கேட்டபோது இப்போதைக்கு குஜராத் சட்டசபை தேர்தலை சந்திப்பதில்தான் நரேந்திரமோடி குறியாக இருக்கிறார். அதில் அவர் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிப்பார். அதன்பிறகு பாராளுமன்ற தேர்தல் பற்றியும் பிரதமர் வேட்பாளர் பற்றியும் முடிவு செய்வோம் என்றார்.

கருத்துகள் இல்லை: